பதிவு செய்த நாள்

18 ஆக் 2017
12:33

 அந்தக் காலத்தில் காட்டு விலங்குகள் எல்லாவற்றிற்கும் வால் இருந்ததில்லை. விலங்குகளின் அரசனான சிங்கத்திற்கு மட்டுமே அப்போது வால் இருந்ததாம்.

வால் இல்லாமல் விலங்குகளின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமாக இருந்தது. ஈக்களும் கொசுக்களும் ரத்தம் உறிஞ்சும் உண்ணிகளும் அவற்றைப் பாடாய்ப் படுத்திவட்ந்தன. இவற்றின் கடி தாங்காமல், பல விலங்குகள் உயிரையே விட்டிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒருநாள் எல்லா மிருகங்களும் சிங்க ராஜாவிடம் சென்று, “இச்சிறு உயிர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று முறையிட்டன. அல்லலறும் விலங்குகளுக்கு உதவிட சிங்கம் நினைத்தது. அதனால் மறுநாள் வந்து, எல்லா விலங்குகளும் தன்னிடமிருந்து வால் பெற்றுச் செல்லும்படி சொன்னது. இச்செய்தியை மற்றவர்களிடமும் சொல்ல்விடும்படி கூறியது.

முறையிட்ட விலங்குகள் மகிழ்ச்சியோடு திரும்பின. எதிர்ப்பட்ட யானை, புலி, சிறுத்தை, முயல், கரடி, மான், காட்டுப்பன்றி இப்படி எல்லா விலங்குகளிடமும் இத்தகவலைப் பரப்பின. இரவு முழுவதும் நரியைத் துணைக்கு வைத்துக்கொண்டு சிங்க ராஜா, நிறைய வால்களைத் தயாரித்து முடித்தது. மலைபோல் குவிந்து கிடந்தன வால்கள்.

மறுநாள், எல்லா விலங்குகளும் சிங்கத்தின் குகை நோக்கிக் கிளம்பின. ஆனால், கரடி மட்டும் அடிமேல் அடிவைத்து நடந்து கொண்டிருந்தது. வழக்கம்போல் சுற்றி இருந்த மரங்களில் ஏதாவது தேன் கூடு இருக்கிற்டஹா என்று நோட்டம் விட்டபடியே நடைபோட்டுக்கொண்டு இருந்தது.

கொஞ்சம் தூரம் போனதும் தேன் வாசனை அதன் மூக்கைத் துளைக்க...சுற்றி இருந்த மரங்களை ஆராயத் தொடங்கியது. ஒரு மரத்தின் உச்சியில் பெரிய தேன்கூடு தென்பட்டது. சிங்கத்தின் குகைக்குச் செல்ல இன்னும் நிறைய தூரம் போக வேண்டும். கூட்டத்தில் வரிசையில் நின்றால்தான் வால் கிடைக்கும். இடையில் பசித்தால் என்ன செய்வஹ்டு? பேசாமல் இந்தத் தேனடையை ஒரு கை பார்த்துவிட்டுப் போகலாம் என்று நினைத்துக்கொண்டது.

மரத்தில் ஏறி, தேனைச்சுவைத்து வயிறு நிறைய சாப்பிட்ட பின் கீழே இறங்கியது கரடி. இப்போது கரடியின் உடலெங்கும் தேன் வழிந்தோடியது. அதன் உடலில் இருக்கும் முடிகளுக்குள் தேனடையின் மெழுகும் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருந்தது. இப்படியேவா போகமுடியும்? என்று பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றுக்குள் இறங்கி, நன்றாகத் தேய்த்துக் குளித்தது. பின் பெதுவாகக் கரையேறி, சிங்கத்தின் குகை நோக்கி நடக்கத்தொடங்கியது.

நல்ல குலியலும், வயிறு நிறைந்த உணவும் கண்ணைக் கட்டிக்கொண்டு வர, ஒரு மரத்தடியில் சற்றே படுத்தது கரடி. சில நிமிடங்களில் தூங்கியும் போனது.

இதற்கிடையில்  சிங்க ராஜாவின் குகை அருகே எல்லா விலங்குகளும் குழுமி இருந்தன. விதவிதமான அளவுகளில், விதவிதமான வடிவங்களில் நிறைய வால்கள் இருப்பதைப் பார்த்ததும், எல்லா மிருகங்களும் மகிழ்ச்சியடைந்தன.

கூட்டத்தினரை நோக்கி, முண்டியடித்து, சிங்கத்தின் முன்னால் வந்து வணங்கியது நரி, “அரசே! தங்களின் உத்தரவுப்படி, இரவு முழுக்க வால்கள் தயாரிப்பில் உதவினேன். அதனால், என்னைத்தான் முதலில் வால் எடுக்க அனுப்ப வேண்டும். குவிந்துகிடக்கும் இவற்றிலிருந்து நானே ஒன்றைத் தேடி எடுக்கவும் அனுமதிக்க வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டது.

சிங்கமும், “சரி...கலைத்துவிடாமல் உனக்கு வேண்டியதை போய் எடுத்துக்கொள்” என்று அனுமதி கொடுத்தது.

மகிழ்ச்சியோடு வணங்கிவிட்டு, அங்கிருந்த வால்களிலேயே பொசபொசவென்று பார்க்க அழகான வாலை எடுத்து ஒட்டிக்கொண்டது. அதன் பின்னால் அணில் சென்றது. அதுவும் நரியின் வால் போன்றே ஒரு வாலைத்தேடி எடுத்துக்கொண்டது.

நீள நீளமான ரோமங்களுடைய வாலை எடுத்துக்கொண்டது குதிரை. வலைப் பின் பக்கம் பொருத்திப் பார்த்திவிட்டு, இடதும், வலதுமாக ஆட்டிப்பார்த்தது. ‘ஆகா இனி, கொசு, ஈக்களின் தொல்லை இருக்காது’ என்று எண்ணிக்கொண்டது. குரங்கும் உருளையான வடிவில் நீளமான வாலை எடுத்துக்கொண்டது. இப்படியே அடுத்துவந்த விலங்குகளும், தங்களுக்கு வேண்டிய ஒன்றை எடுத்துக்கொண்டு போயின.

முயல் கடைசியாக வந்தது. அதற்கு சின்னஞ்சிறு வால்தான் கிடைத்தது. “முன்னாடியே வந்திருந்தால்...பெரிய வால் வாலாக எடுத்திருக்கலாமே?” என்று கேட்டது சிங்கம்.

“இல்லை மாமன்னா! இதுவே எனக்குப் போதும். அப்போதுதான் என்னைத் துரத்தும் விலங்குகளிடமிருந்து தப்பிக்க இதுதான் எனக்குச் சிறந்தது” என்று கூறி, வணங்கிவிட்டுச் சென்றது. எல்லா வால்களையும் கொடுத்துவிட்டு, சிங்கம் போய் படுத்து உறங்கியது.

இந்த நேரத்தில் தான் கரடி உறக்கம் கலைந்து எழுந்தது. தாமதம் ஆகிவிட்டதை உணர்ந்த கரடி, நான்கு கால் பாய்ச்சலில் சிங்க ராஜாவின் குகையை நோக்கி ஓடியது. அங்கே போய்ச் சேர்ந்தபோது, அதற்கென ஒரு வாலும் மிச்சமில்லை. “ஐயோ! இனி என்ன செய்வேன். நாளை எல்லோரும் வாலுடன் வலம் வரும்போது நான் மட்டும் எதுவுமில்லாமல் சுற்றவேண்டுமா?” என்று பொருமிக்கொண்டது.

தன் இருப்பிடம் நோக்கி அது திரும்பிக்கொண்டிருந்தபோது, நரியை எதிர்கொண்டது. புசுபுசுவென்றிருக்கும் அதன் வாலைப் பார்த்தது, “எல்லோருக்கும் வால் செய்த நீ, எனக்குச் செய்யாமல் விட்டாயே...உன் வாலை எனக்குக் கொடு” என்று கேட்டது.

ஆனால் நரி மறுத்து, ஓடப்பார்த்தது. “நீ கொடுக்காவிட்டால் என்ன, நானே அதைப் பிடுங்கிக்கொள்வேன்” என்று கூறிய கரடி, பாய்ந்து அதன் வாலை மிதித்தது. ஆனால், நரியோ தன் முழு பலத்தையும் திரட்டி, கரடியின் பிடியில் இருந்து தப்பியது. அப்படியும் அதன் வாலின் சிறுபகுதி கரடியின் காலடியில் மாட்டிக்கொண்டது.

தலைதெறிக்க ஓடிய நரி, பூமிக்கடியில் ஒருபொந்துக்குள் பாய்ந்து மறைந்துகொண்டது. அதனைத்துரத்தி வந்த கரடி, அந்தப் பொந்துக்குள் கையை விட்டுப்பார்த்தது. கரடியின் பெரிய கை உள்ளே போகவே இல்லை. “என்னைக்காவது நீ மாட்டாமலா போவாய்...அன்று பார்த்துக்கொள்கிறேன்” என்று பொருமியபடி கரடி, தான் பிடுங்கிய அந்தச் சின்னஞ்சிறு வாலை தன் பின்பக்கம் ஒட்டிக்கொண்டு, அங்கிருந்து கிளம்பியது.

கரடிக்குப் பயந்து நரி இன்றும் வளைக்குள் வாழ்ந்து வருகிறது. கரடியும் தன் குமிழ்போன்ற சின்ன வாலுடன், நரியைத் தேடி அலைந்தபடி வாழ்கிறது.

நன்றி : தினமலர், பட்டம்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)