பதிவு செய்த நாள்

18 ஆக் 2017
17:44

     சிறகுகள்
வானம் விழுந்து, நீர்;
சிறகுதிர்ந்து மீனாகிவிட்டது பறவை
நீரில் எழுந்தது வானம்;
சிறகு முளைத்துவிட்டது மீனுக்கு
சிறகினுள் எழும் சூர்யத் தகிப்பே
சிறகடிப்பின் ரகசியம்;
ஆகவேதான் சுயவொளியற்ற
வெறும் ஒரு பொருளைச் சிறகுகள் விரும்புவதில்லை;
பூமிபோன்ற கிரகங்களை அது நோக்கவில்லை
சிறகடிக்கையில் சிறகின் கீழே
வெட்கி ஒடுங்கிக்கொள்கின்றன
பறவையின் கூர்நகக் கால்கள்
சூரியனுள் புகுந்து,
வெறுமே சுற்றிச் சுற்றி வருகின்றன சிறகுகள்
சிறகின் இயல்பெல்லைக்குள்
நிற்குமிடமென்று ஏதுமில்லை
வெளியில் அலையும் சிறகுகளுக்கு
இரவு பகல்களுமில்லை.
 *** 

நச்சுமரக்காடு

ஒரு மரம் 

அதன் ஆணிவேர் நான்
அதன் பக்கவேர்கள்
என் மதம்
என் ஜாதி
என் இனம்
என் நாடு
என் கொள்கை
என் மரபு
இன்னும் நூறு நூறு சிம்புவேர்களை
நான் சொல்ல வேண்டுமா ?
அச்சம்தரும் வலிமையுடன் அடிமரம்.

ஆயிரமாயிரமாண்டு எனினும்
மனித குலம் அளவுக்கு
இளமை அதன் இருப்பிற்கும்
எதிர்காலத்துக்குமான
உத்ரவாதப் பசுமை தழைக்கும்
அதன் கிளைகள்
எந்த புகைப்படத்திலும்
எந்த வரைபடத்திலும்
அடங்க ஆயாசம் கொள்ளும்
பின்னல் எங்கும் காய்த்து குலுங்குகின்றன
தோட்டாக்கள்
வெடிகுண்டுகள்
அணுஆயுதங்கள்.  *** |
தனிமை 

என் தனிமையைப் போக்கும் ஒரு மணற்குன்று: 
விழிமூடிய இமைப் பரப்பு.
நான் போய் அமர்ந்திருந்தேன்:
இமைப்பரப்பைக் குனிந்து முத்தமிடும் இதழ்வேளை
முத்தமிட்டதை முத்தமிட்டது

விலகி நின்று பார்க்கையில்
மெல்ல இமை தூக்கிற்று 
ஒரு சுரங்கக் கதவைப்போல்
அந்த விழி உள்ளே: ஒரு மலைப் பிரதேசத்தின்
கிடுகிடு பள்ளத்தாக்கின் அடியில் ஓர் ஓடை
அந்த ஓடையினின்று
என்னை ஈர்க்கும் ஒரு வாசனை
சரிந்து உருண்டு விழுந்துவிடாதபடி
அதீதமான ஓர் ஆர்வம் உந்த
நுண்ணுணர்வு துலங்க வெகு பத்திரமாக
கிடுகிடுவென வந்து சேர்ந்துவிட்டேன்
வந்து சேர்ந்த பின்னும் 
குளிராய் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு தயக்கம் – இன்னும் 
நான் கடக்க வேண்டிய தூரமாயிற்று
எங்கே அந்த வழி?
மூக்கு நுனியால் சோதித்து நிச்சயித்துக்கொண்டு
காட்டின் ஒளி நிழலை மீட்டியபடி
தேக்குமரச் சருகுகள் அதை உச்சரிக்க
தனது இரையை நோக்கி 
தனது இயல்பான பசியின் கம்பீரம் துலங்க
நெருங்கிக்கொண்டிருந்தது ஒரு புலி ஓடையின் பளிங்கு நீரில்
அதன் முகத்தைக் கண்ட மாத்திரத்தில்

அலறி அடித்துக் கிடுகிடுவென ஏறி
ஓட்டமாய் ஓடித் தப்பி
வெகுதூரம் வந்து திரும்பிப் பார்த்தேன்:
தூரத்தே நின்று என்னை அழைத்து
என் தனிமையைப் போக்கிய
ஒரு மணற்குன்று விழி மூடிய அந்த இமைப்பரப்பு.

 - கவிஞர், தேவதேவன்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)