பதிவு செய்த நாள்

18 ஆக் 2017
17:54

வண்ணநிலவன் மழைக் காதலர் போலும்.  அவரது கதைகளெங்கிலும் மழையின் ஈரம் படர்ந்து கிடக்கிறது. பல சந்தர்ப்பங்களில் மென்மையான சாரல் நம்மையும் தொடுவது போன்ற பிரமை.

பெரிய ஜாம்பவான்களெல்லாம் அவரின் எஸ்தரைக் குறிப்பிடுவது குறிப்பிட்ட அந்த எஸ்தர் சிறுகதையைப் பற்றியா அல்லது அந்த முழு கதைத் தொகுப்பைப் பற்றியா என்ற ஐயம் எழுந்தது. காரணம் கண்ணில் இரத்தம் வரவழைக்கக் கூடிய பல கதைகள் தொகுப்பில் உள்ளன.  (உ.ம்- பலாப்பழம்)

பலாப்பழச் சுளைகளுக்கு ஆசைப்படும் கர்ப்பிணி செல்லப் பாப்பாவுக்காக நம் மனம் கிடந்து அலை பாய்வதை ஒரு பாட்டம் அழுது தீர்த்தாலும் தீராது. என்ன எழுத்து! வாசகனின் மனதுக்குள் ஊடுருவிக் கரைந்தோடச் செய்யும் வரிகள்.

பெரும்பான்மையான கதைகளின் மையமாக பொருளாதாரமே இடம் பிடித்திருப்பது தற்செயலா என்று விளங்கவில்லை. விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வைப் புதுமைப் பித்தனுக்குப் பின் இவ்வளவு தத்ரூபமாக இயம்பியவர் வண்ணநிலவனாகத்தான் இருக்க முடியும்.

கதையின் மாந்தர்கள் அநேகமாக இளவயது கணவன் மனைவியாகவே இருக்கிறார்கள். ஆனால், அவர் காண்பிக்கும் கணவன் மனைவி உறவில்தான் எததனை மென்மை! எத்தனை பொருளாதாரச் சிக்கலிலும் மனைவியைப் போஷிக்கும் கணவனையே அவர் படைப்பில் காண்கிறோம்.

பணம் ஒரு மனிதனை / கணவனை எப்படி கையாலாகாதவனாக ஆக்கி விடுகிறது என்பதை ‘மனைவி’ கதையில் தனது தனித்துவமிக்க நாசூக்கான பாணியில் கூறியிருப்பார். ஓர் எழுத்தாளனின் கண்கள் வழியாக சமுதாயத்தை நோக்கும் போதுதான் வாழ்வின் சிக்கலான முடிச்சுகளும், அபத்தங்களும், அற்பமான இந்தப் பணத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் மாய வலைகளும் விளங்குகின்றன.

 ‘யுகதர்மம்’ கதையைத்தான் மாஸ்டர்பீஸாகக் கருதுகிறேன். இருபத்தைந்து வயதாகும் மகளின் திருமணத்தை நினைத்து வருந்தும் ஈஸ்வரமூர்த்தி அவள் 'எவனையாவது கூட்டிட்டுப் போயிட மாட்டாளா' என்று நினைப்பது நம்மை தத்தளிக்கச் செய்கிறது. இறந்து போன மனைவியை எண்ணி 'பாவி மட்டே இந்தக் கண்றாவியெல்லாம் பாராமப் போயிட்டா புண்யவதி' எனக் கோபிக்கிறார். 

அன்றைய காலகட்டத்திலேயே (1970) ஈஸ்வர மூர்த்தியின் மூலம் வண்ணநிலவன் கூறும் கருத்துகள் சமூகப் புரட்சியாகவே தோன்றுகிறது. அன்றைய சமூகம் இதை எப்படி எதிர் கொண்டதென்று தெரியவில்லை. ஜெயகாந்தனின் அக்னி பிரவேசத்திற்க்குப் பலத்த எதிர்ப்பென்று சொல்லக் கேள்வி.

 ‘கரையும் உருவங்கள்’, ‘அயோத்தி’ எதைச் சொல்ல? எதை விட?

பொக்கிஷம்.

 - தேன்மொழி சதாசிவம், வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)