பதிவு செய்த நாள்

18 ஆக் 2017
21:08

    சிற்றிதழ் ஆர்வலர் ராமதாஸ் பெரம்பலூரைத் தன் சொந்த பிரதேசமாகக் கொண்டவர். கடலூர் மாவட்டம் தொழுதூரில் வசித்துவந்தவர், பணிகளின் காரணமாக துபை நாட்டில் குடிபுகுந்தார். தமிழ் இதழியல் பரப்பில் சிற்றிதழ்கள் மீதான அவரது தனித்த ஈடுபாட்டின் காரணமாக‘சிற்றிதழ்கள் உலகம்’ என்ற பிரத்யேக இதழைத் தானே வெளியிட்டார். அதன்மூலமாக தமிழில் வெளியான பல்வேறு சிறு பத்திரிகைகள் பற்றின கட்டுரைகளையும், விமர்சனங்களையும் ஒருமுகப்படுத்தும் சீரிய பணியில் தன்னையே ஈடுபடுத்திக் கொண்டார். பொருளாதாரத்தில் தேங்கிக் கிடக்கிற சிற்றிதழ்களை பரந்த வாசகர்களைச் சென்றடையச் செய்யவேண்டும் என்கிற யோசனை அவருக்குள் இருந்தது. அதன் தொடர்ச்சியாக அனைத்துச் சிற்றிதழ்களுக்கும் நன்கொடை செலுத்தி அவற்றின் வளர்ச்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டார். தனது நட்பு வட்டங்களையும் சிறுபத்திரிகைகளை ஊக்குவிக்குபடி செய்தார். இளம், புதிய எழுத்தாளர்கள் அறிந்திடாத பழைய இதழ்களை அறிமுகப் படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். சிற்றிதழ்களில் தொடர்ந்து இயங்கி வருகிறவர்களை அங்கீகரிக்கிற மனம் அவருடையது. 

கிருஷ் ராமதாஸ்
கிருஷ் ராமதாஸ்

தனது ‘ஹைக்கூ உலகம்’ இதழின் முதல் வெளியீட்டுக்கு நான் வாழ்த்துரை எழுதியிருந்தேன். முதல் இதழிலேயே தமிழ்ச் சிற்றிதழ்களில் மணிக்கொடி முதல் மகாகவி வரை எனும் தலைப்பில் தொடர் எழுதத் தொடங்கினார். இந்தத் தலைப்பானது இலங்கை கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் நடைபெற்ற ஆய்வரங்கில் நான் நேரில் கலந்துகொண்டு சமர்ப்பித்த கட்டுரையின் தலைப்பு. மணிக்கொடி இதழ் ஆசிரியர் பி.எஸ்.ராமையா வத்தலகுண்டுகாரர். மகாகவி ஆசிரியர் வதிலைபிரபா ஆகிய நானும் வத்தலகுண்டு. அவரின் அன்பை இதைவிட எப்படிச் சொல்வேன். இரண்டு மூன்று இதழ்களில் இந்தத் தொடர் வந்தது. தொடர்ந்து அவரால் எழுத முடியவில்லை. அவரது படைப்புகள் முதன்முதலில் எங்களுடைய ‘மகாகவி’ இதழிலே வெளியானது. தொடர்ந்து எங்களுடைய சிற்றிதழில் எழுதினார். சிற்றிதழ்கள், அரிதான பழைய புத்தகங்கள், பழங்கால நாணயங்கள், முத்திரைகள் ஆகியவற்றைச் சேகரிக்கும் வேறொரு முகமும் அவருக்கு உண்டு. 

மிகுந்த ஈடுபாட்டோடு தனது ‘சிற்றிதழ் உலகம்’ இதழை நடத்திவந்த ராமதாஸ் அவர்கள், தன் மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தீவிரக் கண்காணிப்பிலே இருந்தார். ஆனாலும், சிகிச்சை பலனளிக்காமல் 18-08-2017 அன்று நள்ளிரவில் இயற்கை எய்தினார். இலக்கிய பரப்பில் சிற்றிதழ்களுக்காக தன்னுடைய முழுமையான பங்களிப்புகளைக் கொடுத்த ஒரு கலைஞனை காலம் கருணையின்றி பறித்துக்கொண்டது. 
- கவிஞர். 'வதிலை' பிரபா.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)