பதிவு செய்த நாள்

30 ஜன 2017
15:43
சொலவடைகள் சொல்லும் சேதிகள்

  ‘பழமொழிகள்’ என்பதைப் பழமையான மொழிகள் என்று பொருள் கொள்ளலாம். ‘மொழிதல்’ என்றால் ‘சொல்லுதல்’ என்று பொருள். வாய்மொழி வாயிலாகப் பழங்காலந்தொட்டே சொல்லப்பட்டு வருவதால் இதைப் பழமொழி என்றார்கள். வாய்மொழியில்தான் ஆதியில் பல பாடல்களும், கதைகளும், பழமொழிகளும் படைக்கப்பட்டன. பிற்காலத்தில் அவைகள் எழுத்து மொழியில் பதிவு செய்யப்பட்டன. வாய்மொழியில் எந்தக் காலகட்டத்தில் யாரால் படைக்கப்பட்டது என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. பழமொழிகளைத் தமிழகத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு பெயரால் அழைக்கிறார்கள்.பழமொழியை, முதுகொல், முதுமொழி, பழஞ்சொல், சொலவடை, சொலவம், சொலவாந்தரம், ஒவகதை என்று  வட்டாரம்தோறும் வேறுவேறு பெயர்களால் அழைக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்துக்காரர்கள் பழமொழியை ‘சொலவடை’ என்று சொல்கிறார்கள். 

சொலவடைகளின் வடிவம், வார்த்தைகளின் லயம் பொருள் ஆழம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மக்கள் அவைகளை வாய்மொழி மூலமே பரப்பி வந்தார்கள். வாய்மொயில் உலவிய  சொலவடைகளின் அவசியம் கருதி, பிற்காலத்தில் அறிஞர்கள் அவற்றைத் தொகுத்து. அச்சிலேற்றி எழுத்து மொழி மூலம் பழமொழிகளெனப் பரப்பினார்கள். 

தமிழின் முதல் நூலான தொல்காப்பியம் பழமொழிகள் பற்றிப் பேசுகிறது. சங்க இலக்கியத்திலும் ஆங்காங்கே பழமொழிகள் பயின்று வருகின்றன. பழமொழிகளை அடிப்படையாகக் கொண்டு ‘பழமொழி நானூறு’ என்ற நீதி நூலும் படைக்கப்பட்டுள்ளது. அவைதவிர, இடைக்காலத்திலும் ஏன் தற்காலத்திலும் கூட, பழமொழிகள் புதிது புதிதாக மக்களால் உருவாக்கப்பட்டே வருகின்றன. என்றாலும் அவைகளை 'புது மொழிகள்' என்று சுட்டாமல் பழமொழிகள் என்றே குறிப்பிடுகிறோம். 

பழமொழிகள் தமிழில் மட்டும்தான் உள்ளது என்று நினைக்க வேண்டாம். உலகின் எல்லா மொழிகளிலும் பழமொழிகள் வழக்கில் உள்ளன. ஆரம்ப காலத்தில் வாய்மொழி வடிவில் சொல்லப்பட்டு, பிறகு அவை எழுத்து வடிவமும் பெற்றுள்ளன.  தமிழ் அறிஞர்கள் எதுகையும், மோனையும் வடிவ நேர்த்தியும் உள்ள பழமொழிகளை மட்டும் எழுத்தில் பதிவு செய்தார்கள். சான்றாக,“வினையை விதைத்தவன் வினையை அறுப்பான்; திணையை விதைத்தவன் திணையை அறுப்பான்” போன்ற பழமொழிகளைச் சொல்லலாம். 

ஆனால், பாமர மக்களால் உருவாக்கப்பட்ட பழமொழிகள் அன்றும், இன்றும் வட்டார வழக்கு மொழியில் வாய்மொழியாகவே  உலவுகின்றன. அவைகளை அந்தந்த வட்டார வழக்குமொழியில் பதிவு செய்வதில் தமிழ் அறிஞர்களுக்கு சில மனத்தடைகள் உள்ளன. அவைகளையும் எழுத்தில் பதிவு செய்தால் பழமொழிகள் தொகுப்பு முழுமை பெறக்கூடும். 

பழமொழிகளுக்கென்று ஓர் இலக்கணத்தையோ, தனித்த வரையறையையோ கூறிவிட முடியாது. ஒருவாக்கியம் பழமொழி இல்லையா? என்பதை அனுபவத்திலேயே பெரியவர்கள் தீர்மானிக்கிறார்கள். இரண்டு வார்த்தைகள் முதல் நாலைந்து வரிகள் வரை பழமொழிகளின்  அளவு உள்ளது. எனவே பழமொழிகளின் அளவையும் எளிதில் வரையறுத்துவிட முடியாது. 

பொதுவாகப் பழமொழிகள் நேரடியாகப் பொருளை உணர்த்தும் சில பழமொழிகள் உள்ளுறையாகவும், இறைச்சிப் பொருளாகவும் நின்று பொருள் விளக்கம் தரும். சில பழமொழிகள் வினாவாகவும், சில உவமைகளாகவும், சில உவமேயங்களாகவும், சில ஐய நிலையிலும், உரையாடல் வடிவிலும், கட்டளையாகவும் உள்ளன. 

 பழமொழிகள் பொதுவாக நாம் வாழ்வாங்கு வாழ்வதற்கான நீதிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்கின்றன. மனிதர்கள் கடந்து வந்த பாதை, அவர்களின் பண்டைய உணவுப் பழக்கங்கள், ஆடை அணிகலன்கள், அவர்களின் ஆன்மிக அனுபவங்கள், நம்பிக்கைகள், நீதி பரிபாலனம் போன்றவை பழமொழிகளில் பதிவாகியுள்ளன.

 உளவியல், மானுடவியல், வாழ்வியல், சமூகவியல் சார்ந்த பதிவுகளையும் நாம் இப்பழமொழிகளில் காண முடியும். பழமொழிகளில் நகைச்சுவை. அவலம், மகிழ்ச்சி போன்ற ஒன்பான் சுவைகளும் காணக்கிடக்கின்றன. அத்தோடு பழமொழிகள் இலக்கியப் பிரதிகளாகவும் திகழ்கின்றன. இல்லை என்றால் இத்தனை ஆயிரமாண்டுப் புழக்கத்திற்குப் பின்னும் எவ்வளவோ நவீனத்துவம் நம் வாழ்வில் புகுந்த பின்னும் இந்த வாய்மொழி வாக்கியங்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்க முடியாது.

 “ஓர் இலக்கியப் பிரதியின் தரத்தைக் காலம் தான் தீர்மானிக்கிறது” என்று பொதுவாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். “நல்ல இலக்கியப் பிரதி, காலம் கடந்தும் மக்களின் செல்வாக்கைப் பெற்றுத் திகழும்” என்ற அளவுகோலை வைத்துப் பார்த்தால் பழமொழிகளும் நல்ல இலக்கியப் பிரதிகளே என்று கொள்ளலாம். 

 இத்தனை காலம் கடந்தும் இந்தப் பழமொழிகள் மக்களின் பேச்சிலும் எழுதிலும் இடம் பெற்றிருப்பதற்கு அவைகள் மனதில் எளிதாக நினைவு வைத்துக்கொள்ளுவதற்கு ஏதுவான மோனையுடன் ஒரு வித இசை ஒழுங்குடன் அமைந்திருப்பதும் வாழ்க்கையின் அனுபவங்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதும்தான் முக்கியமான காரணங்களாகும். 

 பழமொழிகள் கருவில் இருக்கும் குழந்தையிலிருந்து, மனிதன் மரணமடைந்து சுடுகாடு செல்வது வரை வாழ்க்கையைப் பேசுகிறது. 

சிறார்கள், இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள் என்று அனைவருக்கும் வாழ்வியலைக் கற்பிக்கிறது. அரசர் முதல் ஆண்டி வரை அனைவருக்கும் நீதி சொல்கிறது. இல்லறத்தானுக்கும், துறவரத்தானுக்கும் வாழ்க்கை நெறிகளைப் போதிக்கிறது. வணிகர், அரசியலார், கூலி வேலை செய்பவர், கலைஞர்கள் என்றூ எல்லாத் தரப்பினர்களுக்கும் பழமொழிகள் ஆலோசனைகள் சொல்கின்றன.

 நம் தவறுகளைத் திருத்திக் கொள்ள, கல்வியின் சிறப்பை வலியுறுத்த, உலகியல்பு சுட்ட, உறவை உறுதியாக்க நட்பு திண்மை பெற, தொழில் செய்ய, கொடுக்கல் வாங்கல் செய்ய, வரம்பை மீறுவோர்க்கு கண்டனம் சொல்ல சில திறமைகளைப் பாராட்ட, சமுதாய இயல்பு நிலைகளைச் சுட்டிக்காட்ட என்று பல பயன்பாட்டிற்கு இப்பழமொழிகள் உதவுகின்றன.

 காலையில் எழுந்தது முதல், இரவில் தூங்கச் செல்வது வரையில் ஒவ்வொரு மனிதனின் செவியிலோ அல்லது அவன் பார்வையிலோ (எழுத்து மூலம்) அவன் அறிந்தோ. அறியாமலோ பழமொழிகள் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. வாய்மொழி வடிவிலேயே உலவியதால், ஆயிரக்கணக்கானப் பழமொழிகள் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் மறைந்துவிட்டன. அவைகளை நாம் இனி மீட்டெடுக்க முடியாது. எனவே, இதுவரை நமக்கு கிடைத்திருக்கிற பழமொழிகளையாவது நாம் சேதமுறாமல் காத்திட வேண்டும்.
யாரோ ஒருவன் அல்லது ஒருத்தி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தால் தன் ரசனையால், படைப்புத்திறத்தால் அழகான சொற்கட்டுடன் உருவாக்கி, உலவவிட்ட பழமொழிகள் காலகாலமாகப் பலர் சொல்லச் சொல்ல வார்த்தைகள் செம்மைப்பட்டு பழமொழிகளாக உருப்பெற்றன. அவைகளை சேகரித்து எழுத்தில் பதிவு செய்து காப்பாற்றினால், நம் சந்ததியர்களுக்கும் அவை உதவும்.
-கழனியூரன், நாட்டுப்புற ஆய்வாளர்.கழுநீர்குளம். 

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)