பதிவு செய்த நாள்

19 ஆக் 2017
12:21

 அதிகாலைக் கனவில்
மேகத்திரளைத் துரத்திக்
கொண்டிருக்கிறாள் மகிழ்குட்டி
பனிமலைக்கு மேல் பறக்கும்போது
சிறகுகள் முளைத்தது 

மேகத்திரளுக்கு முன்பாக
மிதந்து கொண்டிருந்த
அன்றில் ஜோடி
ஒருகணம் நின்று
திரும்பிப் பார்த்தன மகிழ் குட்டியை!

முந்திப் பறக்க விசை குறைத்தன
உதிரும் நட்சத்திரமொன்றை
ஊதிச் சூட்டிவிட்டன
ஒரு பிஞ்சு மின்னல் ஹேர்பின்னானது…

டெடி பியரின் பாதங்களைப் போலிருந்த
ஒரு தூரத்துக் கோளின் நிலா
நகப்பூச்சு இட்டது
வலசைப் பறவைகள் சில
அவளது க்ரேயான் புத்தகத்திற்கு
தம் தூரிகைக் குச்சிகள் தந்தன…

நேசமித்ரன்
நேசமித்ரன்

தன் கூட்டுக்கு மென்பஞ்சு சுமந்த பறவையோ
தேவதைக்கு கிரீடம் சூட்ட முயன்றது
அவள் புன்னகை
அந்த நாளின் ஆயுளை நீட்டி ஆசிர்வதித்தது!
 
உறங்கும் குழந்தையின்
உதடுகளில் தவழும் புன்னகையை
கலைக்க விரும்பாமல் எழுப்ப வந்த அம்மா
அந்த சின்ன சக்கர நாற்காலியின் சக்கரங்களுக்கு
உயவு எண்ணெய் ஊற்றித் துடைக்கத் துவங்கினாள்.
-கவிஞர்.நேசமித்திரன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)