பதிவு செய்த நாள்

21 ஆக் 2017
13:36

 ம் டம் டம் டுடு டுடு... என லயமும் தாளமும் மாறாத உடுக்கைச் சப்தத்தில் நடு இரவில் தூக்கம் கலைந்து எழுந்தாள் காவ்யா. தொடர்ந்து ஒலித்த சத்தத்தில் அவளது மகள்கள் இருவரும் எழுந்துவிட்டார்கள்.
சின்னவள் “ம்மா என்னம்மா சத்தம் அது” என்றாள்.
“ஒண்ணுமில்ல பேசாம படுத்துத் தூங்கு” மகளை அதட்டினாலும் படபடப்பாகவே
உணர்ந்தாள் காவ்யா. செல்போனை எடுத்து மணியைப் பார்த்தாள் அது ஒன்று என
மணிகாட்டியது. இப்போது மூத்தவளும் எழுந்துகொண்டு என்ன சத்தம் என்று கேட்கத் தொடங்கினாள்.

யாரோ குடுகுடுப்பைக்காரன் போல இருக்கு  என்றாள் காவ்யா. உடுக்கைச் சத்தம் தொடர்ந்துகொண்டே இருந்தது. காவ்யாவுக்கு இரண்டு மகள்கள். அரசு அலுவலகத்தில் வேலைபார்க்கிறாள். கணவன் வெளிநாட்டில் வேலைபார்க்கிறான். வீட்டில் பெண்கள் மட்டும் தனியே வசிக்கிறார்கள்.
“குடுகுடுப்பைக்காரன்னா யாரும்மா” என்றாள் சின்னவள்.
“அவன் ஒரு மந்திரவாதி. நடு ராத்திரியில சுடுகாட்டில பூஜை பண்ணி மண்டைஓடு மை கொண்டு வந்து தனியா இருக்கும் பெண்களை மயக்கிடுவான்” என்று தனக்கிருந்த பயத்தில் சின்னவயதில் கேள்விப்பட்ட குடுகுடுப்பைக்காரன் கதையைச் சொன்னாள் காவ்யா.
“குடுகுடுப்பைக்காரன்னா ஒரு நாய்கூட குலைக்கலையே” பெரியவள் கேட்டபிறகுதான் காவ்யாவுக்கு அந்த நினைவு வந்தது. இருந்தாலும் சமாளிக்கவேண்டுமென்று, “அவன் தன்னோட மந்திரத்தால நாயோட வாயைக் கட்டிப் போட்டுருவான்” என்றாள்.
“ம்மா ஒளிஞ்சிருந்து அவனை வீடியோ எடுத்து வாட்ஸப்ல சித்திக்கு அனுப்புவோமா” என்றாள் பெரியமகள்.
“பேசாம படு” சத்தம் போட்டுவிட்டு எதற்கும் சந்தேகத்தில் எழுந்து விளக்கைப் போட்டவளுக்கு அப்போதுதான் சத்தம் வீட்டுக்குள்ளிருந்து வருவதாகத் தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பேன் ஸ்விட்சை அணைத்துப் பார்த்தாள்.
டம் டம் டுடு என்ற உடுக்கைச் சத்தம் மெல்ல ஒலி கரைந்து நின்றது. மகள்கள் இருவரும் காவியாவையே  வேடிக்கையாகப் பார்க்கத் தொடங்கினார். எங்கே நாளைக்குக் காளை ஃபேஸ்புக்கில் இதையெல்லாம் ஸ்டேட்டஸாக எழுதிவிடுவாள்களோ என்ற பயத்தோடே படுக்கைக்குச் சென்றாள் காவியா.
- ஜமுனாவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)