பதிவு செய்த நாள்

21 ஆக் 2017
16:47

“1927ல் பாரதியின் மறைவுக்குப் பிறகு, அவரது பாடல்களைத் தொகுத்து, ‘சுதேச கீதங்கள்’ என்ற பெயரில் தொகுப்பாகக் கொண்டு வந்தார் செல்லம்மாள் பாரதி. அதன்பிறகு, பாரதிக்கு தம்பி முறையிலான விசுவநாதன் என்பவரிடம் பாரதி பாடல்கள் மொத்தத்தையும் பதிப்பிக்கும் உரிமையை 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டார். அதில் 2 ஆயிரத்து 400 ரூபாய் ஏற்கனவே பெற்ற பழைய கடன் தொகையென கழித்துவிட்டு, மீதம் 1600 ரூபாயை எட்டு தவணைகளாக வழங்கியிருக்கிறார் விசுவநாதன். இடையே, பாரதியின் பாக்களை ரேடியோ, சினிமா, இசைத்தட்டு முதலிய ஊடகங்களில் பயன்படுத்தும் உரிமையை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் விசுவநாதனிடம் இருந்து பெற்றிருந்தார்.
1945ம் ஆண்டில் அமரர் கல்கி எட்டையபுரத்தில் பாரதியாருக்கு மணி மண்டபம் அமைக்கும் பணியை முன்னின்று நடத்தினார். மணிமண்டபத்தின் திறப்புவிழா கூட்டத்தில் ‘சக்ரவர்த்தி’ ராஜகோபால ஆச்சாரியார் தலைமையேற்றிருந்தார். அழைப்பில் தன் பேர் இல்லாவிட்டாலும் கூட பாரதி நேயரான ஜீவானந்தம் அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.
அவரது பாரதி மீதான பற்றை அறிந்த எம்.எல்.ஏ சசிவர்ணத் தேவர், ஜீவாவை மேடையேற்றிப் பேசவைத்தார். மேடையில் பேசிய ஜீவானந்தம், “பாரதி பாடல்கள் நாட்டு மக்களைச் சென்றடைய வேண்டும். விசுவநாத அய்யரும், மெய்யப்பச் செட்டியாரும் தானாக முன்வந்து பாரதி பாடல்களை தன்வசத்தில் இருந்து விடுவித்து, தேசச் சொத்தாக்க முன்வரவேண்டும். இல்லை அவர்கள் பணத்தாசையோடு நடந்து கொள்வார்களானால் பழிதான் வந்து சேரும். இருவரும் இந்தச் செயலில் காலம் கடத்தினால் மெட்ராஸ் சர்க்கார் தலையிட்டு ஆவண செய்யவேண்டும்” என்று முதன்முதலாக பாரதி பாடல்களை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

ஜீவானந்தம்
ஜீவானந்தம்


பின்பு 1948ல் நாடகவேந்தர் டி.கே.சண்முகம் தான் தயாரித்த ‘பில்ஹணன்’ என்கிற திரைப்படத்தில் பாரதியின் ‘தூண்டில் புழுவினைப் போல’ என்ற பாடலைப் பயன்படுத்த முயன்றார். ஏற்கனவே பல மேடை நாடகங்களில் பாரதியின்,‘என்று தணியுமிந்த சுதந்திர தாகம்’, ‘விடுதலை.. விடுதலை…’, ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ ஆகிய தடைசெய்யப்பட்டிருந்த தேச விடுதலைப் பாடல்களைப் பாடிப் பரப்பினவர் டி.கே.எஸ். ‘பில்ஹணன்’ திரைப்படத்தில் பாரதி பாடலை அவர் பயன்படுத்த இருப்பதை அறிந்த  ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், டி.கே.எஸ்-க்கு‘நஷ்ட ஈடு கேட்பேன்’ என்று நோட்டீஸ் அனுப்பினார்.
பார்த்தார் டி.கே.எஸ்., எட்டையபுரத்தில் தோழர். ஜீவா வைத்த வேண்டுகோள் அவர் நினைவுக்கு வர, ஜீவானந்தம் மற்றும் கு.அழகிரிசாமி முதலான கரிசல் நிலத்தைச் சேர்ந்த படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள் வழியாக பாரதியார் குடும்பத்தைத் தொடர்புகொண்டு, பாரதி பாடல்களை நாட்டுடைமையாக்கச் சம்மதிக்க வைத்தார். சென்னை மாகாண முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் பேசி விவகாரத்தைச் சுமூகமாக முடித்துக் கொடுத்தார்.
இதன் காரணமாக பாரதியின் மனைவி செல்லம்மாளுக்கும், அவரது மகள்கள் தங்கம்மாள், சங்குந்தலா மற்றும் விசுவநாதன் அய்யருக்குமாக அரசுத்தரப்பில் தலா ஐந்தாயிரம் தொகை காப்புரிமை விடுவிப்புத் தொகையாக வழங்கப்பட்டது. அதுமுதல் பாரதி பாடல்கள் திரைப் படங்களிலும், அச்சுப் புத்தகங்களாகவும், இசை ஊடகங்களிலும் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டது.
சத்தமில்லாமல் ஜீவா கொளுத்திப் போட்ட விஷயம் பற்றி எரியத் தொடங்கிய கதை இதுதான். ஆனாலும் அத்தோடு நின்றுவிடவில்லை ஜீவானந்தம். இன்னொரு வேலையும் பார்த்தார். சட்டசபையில், அன்றைய கல்வி அமைச்சர், பாரதியின் பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதையும், யார் வேண்டுமானாலும் பாரதி படைப்புகளை நூலாக வெளியிடலாம் என்றும், ஆனால், அரசு அறிவித்திருக்கும் அங்கீகரிக்கப்பட்ட உள்ளடக்கத்தை மட்டுமே (Authorized content) பயன்படுத்தவேண்டும் என்றும் அறிவித்தார்.
இந்தக் கூற்றில் முரண்பட்ட ஜீவானந்தம், ‘பாரதி பாடல்கள் தேசச் சொத்தாக அறிவித்தது மகிழ்ச்சி. ஆனால் அந்த authorized content என்பதுதான் உதைக்கிறது. நாங்களெல்லாம் சின்ன வயதில் இருந்து பாரதி பாடல் கேட்டு வளர்ந்தவர்கள். அவருடைய காலத்தில் வாழ்ந்தவர்கள் வழியாகப் பாடல் கேட்டவர்கள். எட்டையபுரத்தில் பாரதி மணி மண்டப விழாவில் இடம்பெற்ற ‘சுதந்தரப் பள்ளு’ பாடலில் பாரதியின் சிலவரிகள் வேண்டுமென்றே துல்லியமாகக் கத்தரிக்கப் பட்டிருந்தது.
இதுபோல செல்லரித்தோ, அரசாங்கத்தால் சுரண்டப்பட்டோ பல சொற்கள் காணாமல் போய் விடுகின்றன. கல்வி அமைச்சருக்கு பாரதி பாடல்கள் நன்கு தெரியும் என்று நினைக்கிறேன். ஆகவே, முழுமையான பாரதி பாடல்களை யாரும் அச்சிட்டு வெளியிடும் வகை செய்ய வேண்டும்’ என்று இன்னொரு குண்டையும் வீசினார் ஜீவானந்தம். ஓர் எளிமையான அரசியல்வாதியாக வாழ்ந்தபோதும், உண்மையான பாரதி நேயனாகத் திகழ்ந்தவர் அமரர் ஜீவானந்தம். தன் காலத்தில் பாரதியின் தேர்ந்தெடுத்த பாடல்களைப் புத்தகமாகவும் அச்சிட்டு வெளியிட்ட அரசியலாளர் என்கிற பெருமையும் அவருக்குண்டு.
இன்று அவருடைய பிறந்த நாள்(21-ஆகஸ்ட்-1907).
- கார்த்திக். புகழேந்திவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)