பதிவு செய்த நாள்

22 ஆக் 2017
17:53

 புலரி முன்னிருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து 
உதிர்ந்து கொண்டிருந்தது பூ
தாங்க முடியவில்லை


நீ இருக்கும்
திசைக்கு முகம்காட்டி
உன் சதுரமான
எதிர்பார்ப்பின் மேல்
பூக்காது
தொட்டிப் பூ
பூப்பூத்தல் அது இஷ்டம்
போய்ப்பார்த்தல் உன் இஷ்டம்


சூரியனை 
ஆற்றங்கரை மணலை 
தொட்டாற்சுருங்கிச் செடியை 
பாசஞ்சர் ரயிலின் 
அற்புத இரைச்சலை 
பட்டாம் பூச்சியைத்
தொலைத்து விட்டு 
நாற்காலிக் கால்களில் 
நசுங்கிக் கிடக்கிறது
சோற்றுக்கலையும் வாழ்க்கை.
_

கைதவறிக் கீழே விழுந்த
கடலை எல்லாம் சாமிக்கு,
துறட்டிக்கு எட்டாமல்
தூரப் போன
முற்றல் முருங்கைக்
காயெல்லாம் கிளிகளுக்கு
கறவைகளுக்குச் சுருக்காமல்
காம்பில் எக்கின 
பால் எல்லாம் கன்றுக்கு.
திருவினை ஆகாத முயற்சி 
திராட்சையெல்லாம் பந்தலுக்கு.
எட்டுவது
கிட்டுவது
எல்லாம் எனக்கு.
முடியாதது
படியாதது
முழுவதும் உனக்கு.
- வண்ணதாசன்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)