பதிவு செய்த நாள்

22 ஆக் 2017
18:47

          சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி. சென்னையில் ஐ.டி.துறையில் பணியாற்றி வரும் இவர், எழுதத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களிலேயே ‘கி.மு பக்கங்கள்’ என்ற தனது இணையதளத்தின் மூலமாக பரவலான வாசக கவனத்தைப் பெற்றவர்...
   “அப்பாவின் பெயர் கணபதி சுப்ரமணியம். விழுப்புரத்துக்காரர். வங்கியில் குமாஸ்தாவாக பணியைத் தொடங்கி, கணக்கராக ஓய்வு பெற்றவர். அம்மா ரமாலக்ஷ்மிக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி. புனித யோவான் பள்ளியில் எனது மேல்நிலைக் கல்வி முடித்தபோது, அங்கு பணியாற்றிய தமிழாசிரியை அந்துவான் எனது தமிழார்வத்தைப் புரிந்துக்கொண்டு, மேடைப்பேச்சுகளில் என்னை ஈடுபடவைத்தார். மெல்ல வாசிப்பிலும் எழுதுவதிலும் எனக்குள் ஆர்வம் எழுந்தது” எனும் கிருஷ்ணமூர்த்தியின் எழுத்தில், ‘பிருஹன்னளை’, ‘அஞ்ஞாத வாசத்தின் ஆரம்ப நாட்கள்’ என இரண்டு நாவல்களும், ‘சாத்தானின் சதைத்துணுக்கு’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. தன்னுடைய சமகால எழுத்து, வாசிப்பு குறித்து எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி நூல்வெளிடாட்காம்-ற்கு அளித்த நேர்காணல்…

கவிதைகளிலிருந்து எழுதத் தொடங்குகிறவர்களுக்கு மத்தியில் முதல் புத்தகமே நாவலாக அமைந்தது எப்படி?
கவிதைகள் சார்ந்த பரிச்சயமின்மை அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். அப்பாவின் சேமிப்புகளில் இருந்த நூல்களில் சில கவிதைகளை வாசித்திருக்கிறேன். எனது அக்காவின் உச்சரிப்பில் அந்தக் கவிதைகளைக் கேட்க சுவாரசியமாகத்தான் இருக்கும். ஆனால், நான் கதைகளையே பெரிதும் விரும்பினேன். கோவை விடுதியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் என்னுடைய நண்பனொருவன் தற்கொலை செய்துகொண்ட செய்தி என்னை மன அழுத்தத்தில் தள்ளியது. நானறிந்த அவனுடைய வாழ்க்கையை எழுதவேண்டும் என்று  எண்ணினேன். அது நாவலாக மாறிவிட்டது. என்னைப் பொறுத்தவரை வாழ்வின் முழுமையை நாவல்களே கூர்படுத்துகின்றன என்று நம்புகிறேன்.

புனைவு மொழியில் உங்களைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளர் யார்?
சட்டென நினைவில் எழுவது நகுலன்தான். அவருடைய எழுத்துகள் அத்வைதத்திலிருந்து எழுகிறது. வீட்டிலிருக்கும் பொருட்கள் உட்பட அனைத்துமே ‘ஓர் உயிர்’ எனும் சங்கதியில் அவருடைய உலகம் இயங்கும். அதில் எது ஸ்தூலம்?  எது பிம்பம், யார் நிஜம் யார் நிழல் என்பதைக் கண்டறிவது கடினமானது. தன்னுடைய பெரும்பாலான கதைகளில் நகுலனே கதாபாத்திரமாக இருந்தார். அதை அவருடைய புனைவு மொழியும் அது உருவாக்கும் வடிவமும் பாசாங்கற்று பேசுகின்றன. மேலும், பிறிதொரு எழுத்தாளனை நினைவுபடுத்தாத மொழி எப்போதும் என்னை வசீகரம் செய்யும்.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

மண் சார்ந்த படைப்புகளின் மீது உங்களுடைய அபிமானம்? 

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனிப்பட்ட சொல்லாடல்களும் அவற்றின் பின்னிருக்கக்கூடிய வாய்மொழிக் கதைகளும் இருக்கின்றன. இவற்றிலிருந்து அவ்வூர்களுக்கென தனிப்பட்ட நம்பிக்கைகள் எழுகின்றன. ஒவ்வொரு நாட்டாரியல் தெய்வத்திற்கும் பின்னணியாக அவ்வூர் சார்ந்த கதையொன்று இடம் வகிக்கிறது. மனிதத் தன்மையிலிருந்து முளைக்கும் தெய்வங்களின் கதை அவை. இவற்றை கட்டுரை ரீதியாக ஆய்வு செய்து தனித் தொகுதிகளாக வெளியிடுகிறார்கள்.
மேலும் வட்டார மொழிக்கென அகராதிகளும் வெளியாகின்றன. அதேநேரம் புனைவிலக்கியத்தில் அவை கொள்ளும் இடம் நவீனமயமாக்கலில் நாம் இழக்கும் பல விஷயங்களின் மீது பேரொளியை வீசுகிறது. அதற்கான சமீபத்திய உதாரணமெனில் சோ.தர்மனின், ‘சூல்’ நாவலைக் குறிப்பிடுவேன். உருளைக்குடி எனும் ஓர் ஊரைப் பற்றி பேசுவதன் வழியே நாம் இழந்தவற்றை கதைகளாக மாற்றிச் செல்கிறது. இழந்து போன வாழ்வியல் முறையின் நிழலை மண் சார்ந்த படைப்புகளே மேலதிகமாக சுமக்கின்றன. இதன் காரணத்தாலேயே அவ்வகை படைப்புகளின் மீது தனிப்பிரியம் எனக்குள் எப்போதும் உண்டு.
‘கி.மு பக்கங்கள்’ விமர்சனங்களும் எதிர்வினைகளும்..
2012-ல் விளையாட்டாய் ஆரம்பித்த வலைப்பூ கி.மு.பக்கங்கள். தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்திருந்த பருவம் அது. வாசித்த படைப்புகளைப் பற்றியெல்லாம் யாரிடமாவது உரையாட வேண்டுமெனும் ஆசை கிளர்ந்தெழுந்தது. ஆசை வெற்றிடமாக மாறிய பொழுதில் என் தனிப்பட்ட புரிதலை பதிவுகளாக எழுதத் துவங்கினேன். தொடர்ந்து எழுதும்போழுது நூல்களை விமர்சனம் செய்வதில் பொதிந்திருந்த பொறுப்புணர்வை புரிந்துகொள்ளமுடிந்தது. எதிர்வினை என்று பெரிதாக எதுவுமில்லை. எழுத வேண்டும் எனும் சுடர் அணையாமல் இருப்பதால் தொடர்ந்து கிமு பக்கங்களில் நூல்கள் சார்ந்து அறிமுகங்கள், விமர்சனங்கள் எழுதிகொண்டிருக்கிறேன்.

தமிழில் விமர்சன மரபு என்பது ஒரு வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறதா?
விமர்சனம் எனும் சொல் எதிர் தன்மையிலேயே புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறதோ எனும் ஐயம் எப்போதும் எனக்குள் இருக்கிறது. விமர்சனத்தை கருத்துருவாக்கம் எனும் தளத்திலேயே அணுக விரும்புகிறேன் நான். இது எவ்வகையிலான இலக்கிய வடிவத்திற்கும் பொருந்தும். வாழ்க்கை எத்துணை நேர்மையுடன் பதிவு செய்யப் பட்டிருக்கிறது எனும் கேள்வியிலிருந்துதான் விமர்சனத்தின் ஜீவன் கருக்கொள்கிறது. நேர்மையோடு இருக்கும் பட்சத்தில் அவை சுட்டிக்காட்டும் நுண்மைகளை விவரிக்க விமர்சகன் கடமைப் பட்டவனாகிறான். அதேநேரம் நேர்மை தவறும் தருணத்தில் அதை எடுத்துக்காட்டவும் தலைப்படுகிறான்.
சமகால விமர்சனப் போக்கு கதைகள் எனும் தளத்தில் மட்டுமே தேக்கம் கொள்கிறது. கதை பேசும் அரசியல் சார்ந்த உரையாடல்கள் முதன்மையாக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனாலும். அவை ஒருவழிப்பாதையாக சுருங்கி, உரையாடலாக மாற மறுக்கின்றன. இதை ஓர்  வெற்றிடம் என்றே குறிக்க விரும்புகிறேன் நான்.

· யாருடைய பாதிப்பு உங்களுடைய எழுத்தில் இருப்பதாக நினைக்கிறீர்கள்?
எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பாதிப்பை ஆரம்ப கட்டங்களில் அதிகமாக உணர்ந்தேன். அவருடைய மொழிநடை எளிமையானது. எந்த வடிவங்களிலும் அவருடைய எளிமையான மொழிநடை பொருந்திச் சென்றுவிடும். அவருடைய சிறுகதைகளை வாசிப்பவர்களால் இதை புரிந்துக்கொள்ள முடியும். பின் வேறு வேறு எழுத்தாளர்களை வாசிக்கும் பொழுது கதைக்கான களம் தனக்கான மொழியை என்னிலிருந்து வெளிக்கொணரும் என்றெண்ணினேன். மேலும்,
ஆதவனின் உலகத்தை எப்போதும் நெருக்கமாய் உணர்கிறேன். நடுத்தர வர்க்கத்தின் உளவியலை, ஆசைகளை, அபத்தங்களை அவருடைய கதைகளில் காணமுடியும். அதே பின்னணியில் இருந்து வந்தவன் நான் என்பதால் அவருடைய தாக்கம் எனது கதைகளில் பிரதிபலிப்பதாய் ஒரு கற்பனை. தவிர, எழுத்து என்பது தொடர் பயிற்சியைக் கோரி நிற்பது. பயிற்சி இச்சாயல்களைக் களைந்து எனக்கான வடிவத்தையும் மொழியையும் கொடுக்கும் எனும் நம்பிக்கையில் எழுதுகிறேன். இந்த நம்பிக்கையும் முன்னோடிகளின் படைப்பிலிருந்து கிடைத்ததே!
நேர்காணல் : கார்த்திக் புகழேந்திவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)