பதிவு செய்த நாள்

30 ஜன 2017
16:01
தேர்த்திருவிழா - வா.மு.கோமு

வெண்ணிலாவுக்கு சென்னிமலை தேர் தரிசனத்திற்கு ஏன் தான் வந்தோமோ! என்றே இருந்தது. எல்லாம் இந்த வரதராஜால் தான். இப்போது அவன் தான் வராதராஜாகி விட்டான். இத்தனை ஜனக்கூட்டத்தில் அவனை எங்கே என்று தேடிப்பிடிப்பாள் வெண்ணிலா? கூடவே சுமதி வேறு. சுமதி வேறு யாருமல்ல இவளின் சித்தப்பா பெண் தான். கூட்ட நெரிசலிலும் வளையல் கடை கண்டால் போதும், புது டிசைன் இருக்கிறதா? என்று பார்க்கப் போய் நின்று கொள்கிறாள்.வெண்ணிலா அரச்சலூர்க்காரி தான். படிப்பு ஒத்துவராததால் விநாயகா பேன்ஸி கடையில் பணிக்குச் சேர்ந்து வருடம் இரண்டு ஓடி விட்டது. பேன்ஸி கடையிலிருந்து அவளது வீட்டுக்கு ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றால் போதும். வீட்டில் அம்மாவும் இவள் தம்பியும் மட்டும் தான். அப்பா டிக்கெட் வாங்கி மேலே சென்று வருடம் இரண்டு ஓடி விட்டது. 

கடந்த ஆறுமாதமாகத்தான் வரதராஜனை அவளுக்குத் தெரியும். அரச்சலூரில் இரண்டு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை வைத்திருந்தான். இத்தனைக்கும் அவனிடம் முகம் கொடுத்து நல்லதாக நாலு வார்த்தை கூட இவள் பேசியதில்லை. இருந்தும் ஒருவன் தன்னை காதலோடு பார்க்கிறான், பேச முயற்சிக்கிறான் என்பதை கண்டுகொள்ளவா முடியாது ஒரு பெண்ணால்?

பேன்ஸி கடையில் இவள் இருப்பதை தெரிந்து கொண்டவன் அடிக்கடி ஏதாவது வேண்டுமென கேட்டுக் கொண்டு வந்து விடுவான். பொருள்களாக வாங்கிப் போய் வெட்டி செய்து கொண்டிருந்தவனுக்கு வசதியாய் இவளின் முதலாளி ஒரு ஜெராக்ஸ் மிஷினையும் கொண்டு வந்து கடையில் வைத்து விட்டார். இவ்விடம் குறைந்த தொகையில் ஜெராக்ஸ் எடுத்து தரப்படும், என்று வெளியே போர்டு வைத்து விட்டார்.

வா.மு.கோமு
வா.மு.கோமு

வரதராஜனுக்கு அது வசதியாய் போயிற்று. ஒரு ரூபாய் செலவில் ட்ரைவிங் லைசென்சை தினமும் எடுத்து மடித்து பாக்கெட்டில் செறுகிச் சென்று கொண்டிருந்தான். அவன் தான் நேற்று மாலையில் கூடவே கூட்டி வந்திருந்த நண்பனிடம் ஜாடையாய் சொல்வது போல சொல்லி விட்டான். ”நாளைக்கி சென்னிமலை தரிசனத்துக்கு வந்துடுடா! ஏமாத்திடாதடா! நான் பாவம்டா!”

இவளுக்கு அப்போதிருந்து நெஞ்சு அடித்துக் கொண்டது. சித்தப்பா வீடு சென்று தங்கி தரிசனம் பார்த்து வருவதாய் அம்மாவிடம் சொல்லி அனுமதி வாங்கி விட்டாள். வாங்கி விட்டாளென்ன.. அது தான் வந்து வரதராஜனை தேடி சலித்துக் கொண்டிருக்கிறாளே இப்போது தேர்க்கூட்டத்தில். ஒருவன் மீது எதற்காக காதல் வருகிறது? எப்படி வருகிறது? ஏன் வருகிறது? இதெல்லாம் தான் காதலாலும் கூட கண்டறிய முடியாத விசயமாக இருக்கிறதே!

சுமதி வேறு கூட்டத்தில் அவ்வப்போது நசுங்கி, ‘வேணும்னே இடிச்சுட்டு போறானுக அக்கா! இனிப்பாரு கிள்ளி வச்சுடப்போறேன் நானு!’ என்றவள் மீண்டும் வளையல் கடை கண்டதும் நடையை நிறுத்தி இவளின் கையைப்பிடித்து கடை நோக்கி இழுத்தாள். திரும்பிப் பார்த்த வெண்ணிலாவுக்கு அதிர்ச்சியான காட்சி தான் வளையல் கடை முன்பாக தெரிந்தது.

அங்கு கடை முன்பாக வரதராஜன் இரண்டு பெண்களிடம் சிரித்துப் பேசிக் கொண்டே கடைக்காரனுக்கு பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.  வந்ததே இவளுக்கு ஒரு சலிப்பான எரிச்சல்! சுமதியின் கையை அழுத்தமாய்ப் பிடித்து கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நடந்தாள். வரதராஜன் இதை கவனித்து விட்டான். அவனும் இவளைத் தேடிக் கொண்டே தானே இவளைப்போலவே கூட்டத்தில் அலைந்து கொண்டிருந்தான் அல்லவா!

சுமதியோடு வெண்ணிலா கிட்டத்தட்ட மலையடிவாரம் செல்ல சந்தைக்கடை தாண்டி விட்டாள். அங்கு கொஞ்சம் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அவளுக்கு இருந்த ஆத்திரத்திற்கு திரும்ப ஒரே வேகத்தில் அரச்சலூரே நடந்து போய் விடலாம் என்றிருந்தது. ச்சே! எல்லா ஆண்களும் ஒரே மாதிரித் தான் போல! 

அப்போது தான் இவர்களை தொடர்ந்து வந்து கொண்டிருந்த அந்த மூன்று பயல்களும், “என்ன அம்மிணிகளா! சென்னிமலை கரட்டுல சைசா ஒதுங்குவமா!” என்று கோரஸாய் கேட்டார்கள். முன்னே பின்னே பார்த்திராத ஒரு பெண்ணிடம் இவர்கள் எப்படி உடனேயே இப்படியெல்லாம் பேசமுடிகிறதென்று வெண்ணிலாவுக்கு புரியவில்லை. அம்மாவும் இப்படித்தான் சொல்கிறது காலம் கெட்டுக் கிடக்கிறதென!

அப்போது தான் வரதராஜன் இவர்களை நெருங்கி வெண்ணிலாவின் கைப்பிடித்து, ‘ஏண்டி வெண்ணிலா! எங்கெல்லாம் தேடி அலைஞ்சேன் தெரியுமாடி உன்னை! வாடி போலாம்’ என்று வந்த வழியே கூட்டிச்செல்ல முற்பட்டான். அதுதான் சாக்கென்று வெண்ணிலா சுமதியோடு இடத்தை விட்டு சென்றிருக்கலாம் தான்.

ஆனால் அவள் தன் கையை அவனிடமிருந்து உதறிப் பிடுங்கிக் கொண்டு சுமதியின் கையைப் பிடித்துக் கொண்டாள். அவளுக்கு அங்கு நிற்கவே பிடிக்கவில்லை. அப்போது தான் மூவரில் ஒரு தடியன் அந்த வார்த்தையை வரதராஜனைப் பார்த்துக் கேட்டான். அது வெண்ணிலாவை நிற்கவைத்து விட்டது.

”மாப்ள! நீ என்ன எப்போ நாங்க ஒரு பெண்ணிடம் பேசினாலும் சினிமா நாயகன் மாதிரி குறுக்கே வந்து நின்னுடறே? அன்னிக்கி தேவயானி, அப்புறம் பூக்கடைக்காரி வனிதா? இப்படியே வந்து கெடுத்து குட்டிச்சுவர் பண்ணிட்டு இருந்தா நாங்க என்ன அக்கா, தங்கச்சின்னே சொல்லிட்டு இருக்குறதா பார்க்கிற பெண்களையெல்லாம்?” என்றவன் முதல் அடியை வரதராஜன் மீது வீசியிருந்தான். 

முன்பின் பார்த்திராத ஒருவன் திடீரென அவன் கன்னத்தில் ஓங்கி அடித்து விடுவான் என்று எதிர்பார்க்கவே இல்லையாதலால் தலைக்குள் மின்மினிகள் பறக்கத் துவங்க ஒருகணம் அப்படியே தலையை இருகைகளாலும் பிடித்துக் கொண்டு நின்று விட்டான். அந்த இடத்திலிருந்து வெண்ணிலா வரதராஜனுக்கு முதல் அடி விழுந்ததுமே சுமதியோடு போய்விட்டிருந்தாள்.

இருள் சூழ்ந்த அந்த இடத்தில் எதிராளிகள் மூன்று பேர் இருக்க வசமாய் அவர்களிடம் மாட்டிக் கொண்டதாகவே நினைத்தான் வரதராஜன். போக அடுத்தவன் இப்போது பக்கத்திலிருந்தவன் தோளில் கைவைத்து பேலன்ஸ் செய்து சினிமாவில் சண்டையிடுவது போன்றே ஒரு உதையை கொடுத்தான். அந்த உதை இவனது நெஞ்சில் விழுந்தது.

இது சுத்தப்படாது தான். இப்படியே போனால் அவர்கள் பந்தாடி விடுவார்கள் என்பதை உணர்ந்த வரதராஜன் முதலில் முகத்தில் ஓங்கி அடித்தவனின் வயிற்றை நோக்கி குனிந்த வாக்கில் ஓடி மாடு முட்டுவது போல முட்டித் தள்ளினான். அவனோ அம்மாவை ஐயோவெனக் கூப்பிட்டு சாலையோரத்தில் சென்று விழுந்தான். அடுத்ததாக தங்களையும் இவன் ஓடிவந்து முட்டுவான் என்பதை உணர்ந்த அந்த இருவரும், ‘வாடா! வாடா!’ என்று அழைத்தார்கள்.

சீக்கிரமாய் இவனை முடித்து விட்டு அடுத்த காரியத்திற்கு விரைவாக செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தார்கள் போலிருந்தது. சமயோசித புத்தி துளி அளவேனும் இல்லாத வரதராஜன் அவர்களில் ஒருவனை நோக்கி குனிந்த வாக்கில் முட்ட ஓடிச் சென்று சாலையைத் தாண்டிச் சென்று விழுந்தான். எதிராளி இவன் முட்ட வருகையில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒதுங்கியிருந்தான்.

அடுத்த கணம் இருவரும் இவனைத் தூக்கி நிறுத்தி அடி பின்னியெடுத்தார்கள். இப்போது வயிற்றைப் பிடித்துக் கொண்டு எழுந்து வந்தவனும் இணைந்து கொண்டான் அவர்களோடு. மூவரும் சேர்ந்து வரதராஜனை கீழேதள்ளி அடித்து துவைத்தார்கள். கூட்டம் சேர்ந்து அவர்களைப் பிரித்து அனுப்புகையில் வரதராஜன் தன் உடைகள் கிழிந்து சாலையோரம் கிடந்தான். 

வெண்ணிலாவுக்கு தேர்த்திருவிழாவுக்கு ஏன்தான் வந்தோமென்று இருந்தது. அவள் எதிர்பார்த்து வந்த திருவிழா இதல்ல! அவளும் வரதராஜனும் மட்டுமே கைகோர்த்து வீதியெங்கும் நடந்து செல்லும் விழா அது. போக சண்டை, அடிதடி என்று எங்கு நடந்தாலும் அந்த இடத்தில் அவள் சின்ன வயதிலிருந்தே நிற்க மாட்டாள். அப்படி நின்றால், சம்பவம் நடந்த இடத்தில் நீங்கள் இருந்தீர்களாமே? என்று காவல்துறை வாகனம் வேறு வீடு வந்து விசாரிக்குமென்ற பயம் வேறு அவள் மனதில்.

”நமக்காகத்தானே அந்தண்ணன் பேச வந்து அடிவாங்கினாப்ல! ஏன்க்கா என்னை இழுத்துட்டு வந்துட்டீங்க? எனக்கு அந்தண்ணனைத் தெரியும்! நல்ல அண்ணன்!” என்றாள் சுமதி.

வெண்ணிலாவுக்கோ வரதராஜன் நிறையப் பெண்களோடு பழகுபவன் என்று அந்த தடியன் சொன்ன நினைவாகவே இருந்தாள். இவள் சொன்னதை அரைகுறையாகத் தான் காதில் வாங்கிக் கொண்டாள். வளையல் கடையில் அவள் தான் கண்ணால் பார்த்தாளே! இரண்டு பெண்களுடன் தானே நின்றிருந்தான் அவன்.

அவளுக்கு மேலும் திருவிழாக் கூட்டத்தில் சுற்றிப் பார்க்கும் ஆசை போய் விட்டதால் நேராக சுமதியோடு சித்தி வீட்டுக்கே வந்து விட்டாள். பக்கத்து வீட்டு வாசலில் இரண்டு பெண்கள் அமர்ந்து கரும்பு கடித்துக் கொண்டிருந்தார்கள். அவளுக்கு உருண்டைக் கண்களுடன் இருந்த அவர்களைப் பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து விட்டது.

அவர்கள் தான் வளையல் கடையில் வரதராஜனோடு நின்றிருந்தவர்கள். ”என்ன அதுக்குள்ள திருவிழா முடிஞ்சிட்டுதா சுமதி?” என்றொருத்தி சுமதியிடம் கேட்க, ஆமாக்கா! என்றவள் அவர்களிடம் போய் அண்ணன் அடிபட்ட தகவலைச் சொல்லி வந்தாள் வீட்டுக்குள்.

வீட்டினுள் ஏற்கனவே நுழைந்திருந்த வெண்ணிலா சித்தியோடு ஷோபாவில் போய் அமர்ந்திருந்தாள். எதிரே டிவியில் நாடகம் ஓடிக் கொண்டிருந்தது. சித்தி இவர்களுக்கு சாப்பாடு போட்டாள். சித்தப்பா இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. இவர்கள் படுக்கையில் விழுந்த போது தான் வெண்ணிலா சுமதியிடம், அந்தப் பெண்களை யார்? என்று கேட்டாள்.

அவர்கள் சொந்த ஊர் அரச்சலூர் என்றும் இங்கு வாடகைக்கு வந்து மூன்று வருடமாகிறது என்பதையும், கொமரப்பா செங்குந்தர் பள்ளியில் தான் படிக்கிறார்கள் என்றும் சுமதி சொன்னாள். போக அடிபட்ட அந்தண்ணனுக்கு சித்தி பெண்கள் தான் இவர்கள் என்பதை அறிந்த வெண்ணிலாவுக்கு தன் மீதே எரிச்சலாய் இருந்தது. 

வரதராஜன் அடிபட்ட விசயத்தை சுமதி அவர்களிடம் சொல்லிவிட்டதாக சொன்னதும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது இவளுக்கு. வீணாய் அவன் மீது சந்தேகம் கொண்டு கால்போன போக்கில் சுமதியை இழுத்துக் கொண்டு சென்றதால் தான் இப்படியெல்லாம் தேவையில்லாமல் நடந்து விட்டது என்று கண்டு கொண்டாள். இப்போது வரதராஜனுக்கு என்னவாயிருக்கும்? 

திரைப்படத்தில் வருவது போல முதல் அடியை வாங்கியபிறகு உதட்டு ரத்தத்தை துடைத்துக் கொண்டு அவர்களை பறந்து பறந்து அடித்திருப்பானோ? அப்படித்தான் அவன் செய்திருக்க வேண்டும்! ஆனால் வேறு மாதிரி நடந்திருந்தால்? விடிய விடிய தூக்கமின்றி வெண்ணிலா பாயில் படுத்திருந்ததை படுத்தவுடன் தூங்கிய சுமதி அறிந்திருக்கவில்லை.

விடிந்த நேரத்தில் இவள் பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்தாள். அது பூட்டிக் கிடந்தது. சித்தி தான் தகவலைச் சொன்னாள். தகவல் தெரிந்ததும், அவளுக்கு சித்தி வீட்டிலிருந்து உடனே கிளம்பி விடவேண்டும் என்றே இருந்தது. ”திருவிழா கூட்டத்துல தகராறு பண்ணி வரதராஜன் அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடக்கானாம்!”

மருத்துவமனைக்கு வெண்ணிலா சுமதியோடு சென்று வரதராஜனைப் பார்க்கையில் நெற்றியில் கட்டோடு கிடந்தான். இவளைப் பார்த்து கொஞ்சமாய் சோகமாய் அவன் புன்னகைத்த போது முன்வரிசைப் பல்லில் ஒன்றில்லை என்பதை கண்டு கொண்டாள். வரதராஜனோ அவளை அங்கு எதிர்பார்க்கவே இல்லை.

அவனது சித்தி பெண்கள் இருவரும் தான் அவனருகில் இருந்தார்கள். அம்மாவும் அப்பாவும் இப்போது தான் வீடு சென்றார்கள், என்று சொல்லி விட்டு இவர்களுக்கு குடிக்க டீ வாங்கி வருவதாக இருவரும் ஜக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். கூடவே சுமதியும் அவர்களோடு சென்ற பிறகு வெண்ணிலா மட்டுமே அவன் அருகில் நின்றிருந்தாள்.

இவளுக்கு அவனிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அருகிலிருந்த நாற்காலியில் இவளை அமரச் சொன்னான் வரதராஜன். இவள் நாற்காலியில் அமர்ந்ததுமே அவன் இவள் கைகளில் ஒன்றைப் பிடித்துக் கொண்டான்.

சந்தைக்கடை அருகே தன் கையை அவனிடமிருந்து நேற்று இரவு பிடுங்கிக் கொண்ட வெண்ணிலாவுக்கு இப்போது பிடுங்கிக் கொள்ள எண்ணமில்லை என்றாலும் அந்த அறையில் நான்கைந்து பேர் படுத்திருக்க இவன் கைப்பிடித்தது கூச்சமாய் இருந்தது. 

‘என்னை மாதிரி எத்தனை பேரோ உங்களுக்கு? அந்த தடியன் வரிசையா பேர் சொன்னானே!” பாதுகாப்பான ஒருவனிடம் தான் மனதை பறிகொடுத்திருக்கிறோமா? என்று பெண்கள் எந்த நேரமும் தான் விரும்பியவனைப் பற்றி ஒரு சந்தேக்க் கண்ணோடு தான் இருப்பார்கள். அதற்கு இவளும் விதிவிலக்கல்லவே!

”எனக்கு அவனுகளை யார்னு கூட தெரியல வெண்ணிலா. உன்கிட்ட பிரச்சனை பண்றாங்கன்னு தெரிஞ்சதும் தான் நான் வந்து உன்னை கூட்டிட்டு போயிடலாம்னு பார்த்தேன். ஆனா அவனுக அப்படி சொன்னதால நானும் குழம்பிட்டேன்.”

”எனக்கு அடிதடின்னா அந்த இடத்துல நிற்கவே பிடிக்காதுங்க! அதான் சுமதியோட கிளம்பிட்டேன்” என்றவளுக்கு கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது. 

‘ஏய் வெண்ணிலா! அழ ஆரம்பிச்சுடாதேடி! உன்னைத் தவுத்து யார்கூட என்னால பழக முடியும்?” என்றபோது மருத்துவமனை தாதி அறைக்குள் வந்தார். இவனுக்கான ஊசி ஒன்றை அவர் போடுகையில் அவரிடம் வரதராஜன் அந்த விசயத்தைச் சொன்னான்.

“அப்படியா?” என்று கேட்ட தாதி அடுத்த நிமிடம் கடைசி கட்டிலில் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவனிடம் சென்று அதை பிடுங்கி சோதித்தாள். தாதிக்கு வந்த கோபத்தில் அவனை கட்டிலில் இருந்து எழச்சொல்லி வெளியே போகுமாறு சத்தமிட்டார்.

”என்ன சொன்னீங்க அவங்க கிட்ட?” என்றாள் வெண்ணிலா.

‘’அவன் காலையில இருந்து பக்கத்து பெட்ல இருக்குற பெண் தன் குழந்தைக்கு பால் கொடுத்துட்டு இருந்ததையெல்லாம் போட்டோ பிடிச்சுட்டு இருந்தான் அந்த பொண்ணுக்கே தெரியாம!  அதனால போய் செக் பண்ணிப் பாருங்கன்னேன்! அது உண்மைதான் போல!” என்றவன் கையை இவள் இப்போது இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். - வா.மு.கோமுவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)