பதிவு செய்த நாள்

23 ஆக் 2017
12:03

தினான்காவது முழுச்சுற்றை தொடங்கியிருந்தான். ஒரு நல்ல ஒட்டப்பந்தயவீரன் இவன். அபிமானத்திற்கு உரியவன் என்றும் பந்தயத்தில் வெற்றியடைந்து ஒரு புதிய வெற்றி இலக்கைப் பதிவு செய்யக் கூடியவன் என்றும் செய்தித்தாள்கள் அறிவித்திருந்தன. பல வருடங்களாக ஒரு புதிய உச்சபட்ச வெற்றி இலக்கின் பதிவுக்காகக் காத்துக் கொண்டேயிருந்தார்கள் அவர்கள்.சாதாரணமாக இது போன்ற ஒரு முறியடித்தலுக்கு எப்போதுமே ஒருவர் காத்துக் கொண்டிருப்பார். அதுவும், ஒளியின் வேகம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்ற பிரேசில் நாட்டு இயற்பியல் வல்லுநரின் இந்தக் கோட்பாடு வேறு இப்போது பேசப்பட்டுக்கொண்டிருந்தது; வல்லுநரை பைத்தியக்காரனாக இருப்பான் என்று நினைத்தான் இவன் . இதன் பொருள் என்னவாக இருக்கும்? தன்னையே கேட்டுக் கொண்டான் பந்தயவீரன். முந்தைய வெற்றி இலக்கை முறியடிக்கும் படியான தகுதி மனநிலையில் இவன் இருந்ததாக எல்லோரும்  கூறினார்கள்.
ஆக, ஜன்ஸ்டீன் ஏதாவது பிழை செய்திருப்பாரோ? அல்லது ஒளியும் கூட தனது முந்தைய வேக இலக்கை முறியடிக்க முயன்று கொண்டிருக்கிறதோ? பதினைந்தாவது சுற்றின் போது மக்கள் கூட்டம் பந்தயத்தடத்தைச் சுற்றி சேர்ந்து நின்று கொண்டனர்; ஏற்கனவே, போதிய வகையில் முதன்மை நிலையில் தான் இருந்தான். எல்லோரையும் பின்தள்ளிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான். ஓடுவதற்கென்றே பிறந்தவனல்லவா!
வெயில் மைதானத்தைச் சஇளஞ்சூடாய் வைத்திருந்தது. ஓடுவதற்கென்றே பிறந்தவன் என்றவார்த்தைக்கு என்ன அர்த்தம் கற்பிக்கமுடியும்? பந்தயத்தின்  மூன்றில் இரண்டுபங்கைக் கடந்திருந்தான்.   தொடக்கத்திலேயே மற்ற போட்டியாளர்களிடமிருந்து அவன்மட்டும் வேறுபட்டுக்கொண்டிருந்ததை எல்லோருடைய கண்களும் கவனிக்கத்தவறவில்லை.
கட்டுப்பாடுடனான ஒழுங்கு லயத்துடன், ஆரம்பத்திலேயே எல்லோருடைய கவனமும் அவன்மீதே குவிந்திருந்தது. யாரும் எதிர்பாராதபோது அவன் பின் தங்கியிருந்தான். இறுதிக்கட்டத்திற்காக சக்தியை சேமித்துவைக்கும் யுக்தி இது. தனக்குப்பின்னே யாருமில்லாத உணர்வை அவன் நெருங்கியிருக்கக்கூடும். எந்த நீள்வட்டப் பந்தயத்திடலைச் சுற்றித் திரும்பத்திரும்ப இவன் ஓடிக்கொண்டிருந்தானோ அதன் மருங்கில் அவனுடைய பயிற்சியாளர் நேரத்தை வைத்த கண் வாங்காமல் உற்றுநோக்கிக்கொண்டிருந்தார்.


பதினேழாவது சுற்று, வெற்றிக்கு இன்னும் ஏழு நீள்வட்டமடிக்கவேண்டும். காற்று துறந்து மூச்சு வாங்கி, தாகமெடுக்க களத்தை இரையாகத் தின்றபடி கடந்து கொண்டிருந்தான். ஒரு வேளை, ஒளியின் வேகம் நிலையான ஸ்திதியில் இருக்கும் பட்சத்தில், இப்போது வரை மாற்ற முடிந்திடாத  சாதனையைத் தகர்த்தாகவேண்டும். யாரோ ஒரு பழம் பெரும் ஓட்டயப்பந்தய வீரனின் வெற்றி இலக்கை முறியடிப்பதுதான் இங்குள்ள ஒரே பிரச்சனையாகக் கருதப்பட்டது.
முன்கூட்டியே கணிக்கப்பட்டிருந்த ஒன்றை நாம் நிறைவேற்றுவோமா என்று தனது இருபத்தோராவது சுற்றின் போது அவனுக்குள் எண்ணங்கள் உதித்தன. வனப்பும் இளமையும் கொண்ட மானின் ஓட்டத்தைப்போல, ஒரு  கம்பீரம் அவனுள்ளிருந்தது. ஓடுதல் என்பது இவனுக்கு எந்தப்பிரச்சனையையும் ஏற்படுத்தவில்லை.
அறிவிப்பாளர்களும், காமிராக்களும் அவனையே மொய்த்தபடியிருந்தனர். ஆம் இப்போது அவன் முன்னேறிக்கொண்டிருக்கிறான்.  நாணல்காட்டைப் புயலொன்று கடந்துசெல்வதுபோல. பார்வையாளர்களின் குரல்கள் இடைவிடாது அவன் பெயரையே உச்சரித்துக்கொண்டிருந்தன.
பயிற்சியாளர் நேரத்தை உற்றுநோக்கிக்கொண்டே இருந்தார். வெயில் உச்சிக்குச் சென்றுகொண்டிருந்தது. ஒரு சதுரங்க அட்டையைப்போல நீள அகலமாயிருந்த கொடியினை அசைக்கத் தொடங்கியதுமுதல் இதோ சில நொடிகளுக்குமுன்பே பதினேழாவது எண்ணுடைய வீரனைக் கடந்ததுமுதல்  ஓடிக்கொண்டே இருக்கிறான் இரையினைக்கவ்வத் துரத்தும் வேங்கையினைப்போல.
இன்னும் மூன்று அவ்வளவுதான். நாணிலிருந்து வெளியேறி இலக்கைநோக்கிப் பயணிக்கும் அம்பு ஒன்று திடீரென்று வேகமெடுக்கமுடியுமா. முடிந்தது. அப்படித்தான் அவன் வெளிப்பட்டான். பந்தையக் கோடுகளை வாயுவேகத்தில் பின்னுக்குத்தள்ளிக்கொண்டிருந்தான்.  ஒரு புதிய வெற்றி இலக்கத்தைப் பதிவு செய்யவே இவன் ஓடிக்கொண்டிருந்தான். ஆனால், இப்போது அவனுக்குள் ஓடுவதை, நிறுத்த வேண்டும் என்ற இந்த அடக்கமுடியாத ஆசை. மீண்டும் எழவே முடியாதபடி பந்தயத்தடத்தின் ஒரு பக்கமாய் படுத்துக் கொள்ள வேண்டும் போலத் தோன்றியது. பந்தயத்தடத்தின் பக்கவாட்டில் உட்கார்ந்து மேலே வானத்தைப் பார்க்கவேண்டும். கண்டிப்பாய் மரங்கள் இருக்கும், பின்னிப் பிணைந்திருக்கும் கிளைகள், படபடக்கும் இலைகள், ஒரு வேளை, உச்சியில் ஒரு கூடு கூட. மிகச் சிறிய இலைகள் தென்றலில் அசைந்து கொண்டு... எண்ணங்கள் அவனிலும் வேகவேகமாய்.
ஒரு பந்தயவீரன் ஒரு முறை கீழே விழுந்து விட்டான் என்றால் அவனைத் தொடுவது என்பது மறுக்கப்படுகிறது. அவனுடைய சுயதிடத்தால் அவன் எழுந்திருப்பானேயானால் அவன் பந்தயத்தை தொடரமுடியும். மீண்டும் அவன் எழுந்து ஓடுவதற்கு உதவிசெய்ய யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்தவிதிகளை எல்லாம் அவன் அறிந்திருந்தான்.
பிரேசில் நாட்டு இயற்பியல் நிபுணரைப் பொருத்த அளவில் எப்போதும் ஒரே நிலையில் இல்லாத ஒளியின் வேகத்தை மாற்றியமைக்கும் இதே தென்றல். “நான் ஒன்றும் விதிவிலக்கல்ல” ஒரு சில இரவுகளுக்கு முன்னர் ஒரு வயது முதிர்ந்த அபிமானி ஒருவரிடம் இவன் கூறியிருந்தான், “காலத்தை நெறியாள்வது எப்படி எனத் தெரிந்த சாதாரண ஒருவன் தான் நான்”.
உணர்ச்சி மேலிட்டு இவனுடைய பயிற்சியாளர் இவனை நோக்கி கையசைத்தர்; இன்னும் ஒரே ஒரு சுற்று, ஒன்றே ஒன்று. இவனது வேகம் குறைந்திருக்கவில்லை. விலா எலும்புகள் மீது தான் கையை வைத்துக்கொண்டு, மூச்சு விடுவதை சிரமப்படுத்தும் அந்த இறுக்கம். ஒரு முறை இப்படியொரு வலி வந்தது என்றால், கௌரவப் பிரச்சகை காரணமாய் யாரும் இது போல செய்வதில்லை என்றாலும் பந்தயத்திடல் விட்டு விலகிச் செல்ல வேண்டி வரும், அதோடு போட்டியும் முடிந்து விடும். இத்தனை வருடப்பயிற்சியில் அவன் கற்றிருந்த அந்த மண்ணீரல் அசௌகரியம்.
ஆதிகத் தொலைவு ஓடும் போதும், ஒரு அசாதாரண முயற்சியில் மட்டுமே தொல்லை தருவதாலோ என்னவோ, மற்றபடி எப்போதாவது மட்டுமே அபூர்வமாய் நம் போதத்தில் இருக்கும் ஒரு அங்கம். ஆனால் இப்போது, ஒட்டத்தை நிறுத்திக் கொண்டு, பந்தயத் தடத்தின் பக்கவாட்டில் ஓய்வெடுக்க வேண்டும், மரங்களைப் பார்த்துக்கொண்டு, ஆழமாய் மூச்சுவிட்டுக்கொண்டு... இதுவரை அறிந்திடாத, அடக்கமுடியாத ஏக்கம்.
சுற்றுக்கள் எல்லாமே ஒரே மாதிரிதான். இது இருபத்து மூன்றாவது சுற்றா அல்லது இருபத்து நாலாவதா, அல்லது பதினாறா, பதினேழா. . . .  பூர்த்தி செய்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டு தரையில் விழுந்தவனுக்கு நிகழ்ந்ததைப் போல்.
ஒடுவதற்கு இன்னும் மூன்று சுற்றுக்கள் இருந்தன என்றும் அவனிடம் அறிவித்தார்களே அதுபோல. தசைநார்கள் ஒரு முடிச்சாகிக்கொள்ள, எழும்ப முடியாமல், பாவம் அந்தப் பையன். அப்படியே அவன் எழும்பியிருந்தாலும் திரும்பவும் அவன் ஓடத்தான் ஆரம்பிக்க வேண்டும், அதற்கு முன்னால் அவன் மயங்கி விழமாட்டான் என்ற பட்சத்தில், ஆனால் இது போன்ற எதுவும் இவனுக்கு நிகழவே நிகழாது.
ஓடுவதென்பது மிகவும் இயல்பான ஒரு செயல் போலவும், ஏதோ, காலத்திற்கும் இவனால் இப்படி ஓட முடியும் என்பது போலவும், நோகாமல், மிக இயல்பாய் இவன் ஓடினான். இவனை ஏமாற்றியிருந்த, சீராக இல்லாத வேகத்தடன் செல்வது போல இப்போது தோற்றமளிக்கின்ற ஒளியைப் போலில்லாமல் மாறாத லயத்துடன், வேறுபடாத நீண்ட காலடித்தாவலுடன், ஏறக்குறைய முந்தைய வெற்றி இலக்கை முறியடிக்க இருந்தான்.
ஆனால், பந்தயப் பாதையின் பக்கவாட்டை நோக்கி மெதுவாகச் சரிந்து, பாதையின் ஒருபுறமாய், எல்லைக் கோட்டிலிருந்து ஒரு சில மீட்டர்கள் தள்ளி, எல்லைக் கோட்டிற்குக் கொஞ்சம் முன்பாக, மெதுவாக, தரைக்கு நழுவிக் கொண்டே, இவனுடைய தலையைத் தூக்கிக் கொண்டு, இந்த நின்று விடுதலில்; என்ன ஒரு விவரிக்க இயலாத சந்தோஷம் இப்போது; உயரமான மரங்கள், நீல வானம், மெதுவாய் நகர்ந்து செல்லும் மேகங்கள், சுருண்டு கொத்தாயிருந்த கிளைகள். . . .  அந்த இலைகள் அசைகின்றன, இவன் உயரே பார்க்கிறான், பறவைகளின் பறத்தல் லயத்தை கவனிக்கிறான்.. . .  இவனைச் சூழ்ந்து கொண்ட மக்களின் குழப்பமான ஆரவாரத்தை இவன் கேட்கவில்லை; இவனை அவமதித்ததுக் கொண்டு அவர்கள் வசைபாடிக்கொண்டிருந்தனர் என்பதில் சந்தேகம் இல்லை. மற்ற வீரர்கள் எல்லோரும் இவனைக் கடந்து செல்வதைப் பார்க்கப் பார்க்க, அவர்களுடைய குறுங்காற் சட்டையை பார்க்க . . .  சிலபேர் கடுமையாய் மூச்ச வாங்கிக் கொண்டு, தன் நெஞ்சை நோக்கிகைகளை உயர்த்திக் கொண்டு ஒருவன், நீ பூர்த்தி செய்யமாட்டாய், நீ எல்லைக்கோட்டை எட்டிவிடமாட்டாய். . .
இவன் பயற்சியாளர் கடுங்கோபத்துடன் இருந்தார். ஆனால், வான்வெளியில் உயரே, ஒரு மாயத்தோற்றச் சூழலில் மற்ற எவராலும் பார்க்க முடியாத மரங்கள் மிதக்கின்றன் சுளுக்குப் பிடிப்பால் சிரமப்பட்டுக் கொண்டு, நொண்டிக் கொண்டே வருகிறான் . அந்தப் பறவையை இதற்கு முன் பார்த்திருக்கிறேனா? . . . . . விளக்கம் கூறவியலாத இந்த நிகழ்வை அறிவிப்பாளர் வருணித்துக் கொண்டிருக்கிறார். இவனுடைய வேகம் ஒரே நிலையிலேயே தான் இருந்திருக்கிறது, ஆனால், திடீரென, அது நின்று விட விழைந்தது, ஒளியைப்போல. ஆக, வானை நோக்கித் தன் விழிகளை உயர்த்தினான்.
மூலம் : கிரிஸ்டினா பெரி ரோஸ்ஸி (உருகுவே நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர்)
மொழிப்பெயர்ப்பு  - பேராசிரியர் வெ.ரங்கநாயகி
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)