பதிவு செய்த நாள்

26 ஆக் 2017
16:58

  உரைநடை மாற்றம், சொற்சிக்கனம், குறுகத்தரிக்கும் வாக்கிய அமைப்பு, அறிவியல் தமிழுக்கான தேவை என தமிழில் பெரும் மாற்றத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் சுஜாதா. கணையாழியின் கடைசிப் பக்கத்தில், ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்று முதலில் எழுதியவர், பிறகுதான் சுஜாத என்ற புனைப்பெயருக்கு மாறி வாசகர்களை ஈர்த்தார். 
‘நைலான் கயிறு’ உரைநடை எனக்கு அப்படித்தான் பிடித்தது. தபாலில் அதுபற்றி எழுதியதும் சுஜாதாவுடன் தொடர்பு ஏற்பட்டது. தனது இரு மகன்களுடன் தானே காரை ஓட்டிக்கொண்டு கோவை வந்தார். கோவை முருகன் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்படியே எங்களுடைய பல்பொருள் அங்காடியான சிதம்பரம் அன் கோவிற்கும் அவரை அழைத்து வந்தேன். இது நடந்தது 1974-75ல். 
1979ல் விஜயா பதிப்பகம் வாசகர் திருவிழா கோவை டவுன்ஹாலில் நடைபெற்றது. அதில் சுஜாதா நூல்களை இமயம் பதிப்பகம் வீர ராகவனுக்கு (அவர்தான் அன்றைக்கு சுஜாதாவின் நூல்களைப் பதிப்பித்திருந்தார்) தந்தியடித்து வாங்கினோம். நல்ல விற்பனை. அதேசமயம் சுஜாதாவின், ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ நாவலுக்கு விழா எடுக்கிறோம். இப்போது மாநகராட்சி மாமன்றமாகச் செயல்படும் விக்டோரியா அரங்கம் தான் அன்று விழா நடந்த இடம். இப்போது மேயர் வீற்றிருக்கும் இடம்தான் அப்போது பேச்சாலர்கள் பேசுவதற்காக போடப்பட்டிருந்த மேடை. அன்றைக்கு அரங்கின் ஒருநாள் வாடகை 25ரூபாய்.
‘கரையெல்லாம் செண்பகப்பூ’ நாவலை திரைப்படமாக எடுக்க அந்தக் காலக்கட்டத்துல் தான் தயாரிப்பாளர்டன் கவிஞர் புவியரசு பேசிக் கொண்டிருந்தார். ‘இந்திய பாஸ்போர்ட்’ என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் பிரபலமான ரவிச்சந்திரன், பூங்கொடி சண்முக சுந்தரம் என்ற அந்த படத்தின் தயாரிப்பாளருடன் அளவளாவிக் கொண்டிருந்தார். அரங்கில் மூலைக்கு மூலை சிட்டுக்குருவிகள் கூடுகட்டியிருந்தன. அவை ஒரு திக்கிலிருந்து இன்னொரு திக்கிற்கு பறந்து கீச் கீச் குரல் எழுப்ப அதில் ரொம்பவும் லயித்துப் போனார் சுஜாதா. 

 ‘விஜயா’ வேலாயுதம்
‘விஜயா’ வேலாயுதம்


வாசகர் திருவிழாவின்போது அவரையும், அவர் நாவலையும் பற்றி மைக் செட் போட்டுக் கூவியதும் வாசகர்கள் அந்தப் பகுதியில் நிரம்பினார்கள். கூட்டம் நடந்த டவுன்ஹால் அரங்க்த்திற்கு எதிரில் உள்ள சாலையைக் கடந்தால் சர்வோதயா சங்கக் கட்டடம். நிகழ்ச்சி முடிந்தபிறகு, அதன் செயலர் சர்வோதயா தண்டாயுதம், சுஜாதாவை தன் அலுவலகத்திற்கு குளிர்பானம் அருந்த அழைத்திருந்தார். சாலையைக் கடக்க முடியாத அலவுக்கு சுஜாதாவை வாசகர்கள் சூழ்ந்திருந்தார்கள். அவ்வளவு கூட்டம். பி1 காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்பு போட்டுத்தான் அவரை சாலையின் ஒரு பக்கமிருந்து மறுபக்கம் கூட்டிப் போக முடிந்தது.

 

இந்த களேபரங்களை எல்லாம் கவனித்த சுஜாதா, “என்னை சினிமா ஸ்டார் ஆக்கிடீங்களே!” என்று கம்மெண்ட் அடித்தார்! 
- விஜயா வேலாயுதம்.

(நன்றி - அமுதசுரபி இதழ்)

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)