பதிவு செய்த நாள்

28 ஆக் 2017
15:48

  ஆதியில் நாங்கள்
ஆடைகளின்றி திரிந்தபோது
வனங்கள் எங்கள் வீடுகளாய் யிருந்தது.
தடாகங்களும் நீர்த்துறைகளும்
காட்டு ஓடைகளும் கசியும் சுனைகளும்
எங்கள் பிள்ளைகளின்  தாகந்தீர்த்தன...
மந்திகள் மரைகள்
அலுங்குகள் வேங்கைகள்
வெளிமான் நரிகள் கடமான் எருதுகள்
பன்றிகள் புலிகள் பேருயிர் யானைகள்
எல்லாம் எங்களோ டியைந்தே வாழ்ந்தன..
பல்வகைப் பூச்சிகள் பறவைகள் பாம்புகள்
வளங்கொண்ட தாவரம் வானெழுந்த மரங்களென
வனமும் வனம் சார்ந்த வாழ்வுமெங்கள் வாழ்வு.

சதுப்பு வெளியும் பசும்புற்காடும்
மேகங்கள் முட்டித் ததும்பும் மலைகளும்
அணிநிழற் அரண்களோடு அமைந்த தொல் பழங்குடி.
பன்றிகள் கிளர்ந்த குழிக்குள் விதைத்து
வரகுச் சாமை பயிர்கள் வளர்த்தோம்.
பசுத்தயிர் கொண்டு நெய்யுருவாக்கி
நெருப்புக்கு நாங்கள் பூசைகள் படைத்தோம்.

செல்வங்களெல்லாம் பிள்ளைகளென்று.
சுற்றமாய் விதைத்து சோற்றைப் பகிர்ந்தோம்.
வேட்டைகளாடி ஊண்கள் சமைத்து
காட்டின் எல்லையுள் கவலையறத் திரிந்தோம்.
மன்னர்களென்பார் முதலிலே வந்தனர்.
மாக்களைக் கொன்று மார்தட்டிக் கொண்டனர்.

வெள்ளையரென்பார் பின்னே நுழைந்தனர்
கண்ட விலங்கையும் குழல்கொண்டு சுட்டனர்.
சிங்கவால் குரங்குகள் சிறுநரி முயல்கள்
என்று தொடங்கி பல்லுயிர் மாண்டன.
காடுகளென்பது கொலைக்களமாகிட
வேடுவர் நாங்களோ வேலைக்காரனாகினோம்.

தேனைக் கண்டதும் குடிக்கக் கேட்டான்.
மானைக் கண்டதும் வெடிக்கச் சுட்டான்
மரங்களை முகர்ந்தவன் வாசனை என்றான்
எங்கள் வனத்திணை வெட்டிடப் பணித்தான்.
சுள்ளிகள் தறிக்கும் சோளகன் கையோ
சந்தனத் தேக்கை சரித்துப் போட்டது.

சங்கடம் தீர்த்திடும் சமீன்களின் சந்ததி
பேருயிர் கண்டது பேருவகை கொண்டது
வரிப்புலி கொன்று வலதுகாலூன்றி
பெருந்தவத்  தோரணையில் புகைப்படம் எடுத்தது

ஆட்சிகள் மாறி சாட்சிகள் கூற
ஆயுதங்களோடு அரசுகள் வந்தன.
ஆஹா இனி யெதும் துயரில்லை என்கையில்
வனங்களை ப் பிரித்து வேலிகளிட்டன
சுனைகளைத் துளைத்து சுரங்கங்கள் தோண்டின
பதறித்துடித்த பழங்குடி எங்களை
பகைவன் என்றெண்ணி பலித்து விரட்டின.

ஆனையும் புலியும் அடிமைகளாகிட
ஆதிக்காடு அரவமற்றுப் போனது
மலைகளின்  நதிகள் அணைகளில் முடங்கிட
தாவர உண்ணிகள் தாகத்தில் மடிந்தன
காணியும் கழனியும் கைவிட்டுப் போக
காட்டுமூங்கிலுக்கு வாழ்வென்ன கேடு
மூச்சை இசைத்து  மண்விட்டு ஓடு

எல்லைகளற்று விரிந்த  வனமோ
மெல்லமெல்ல  மழிக்கப்பட்டது
ஒன்றுகூடி உண்டு வாழ்ந்த கூட்டமோ
ஊருக்கு வெளியே கூழுக்கு அலைந்தது

வேண்டிய அனைத்தும் வனமே தந்திட
தேவைகளென்று ஏதுமிலாதோர்
தேங்காய்ச்சில்லுக்குக் கூலிகளானோம்
ஆதிக்குடிகள் ஆரண்யமிழந்து
சாதிப்பட்டியலில் தாழ்ந்தவரானோம்

எதுவும் இல்லை எங்கள் கைகளில்
ஏழைகளாகினோம் இசக்கியின் பிள்ளைகள்.
வசந்த வாழ்வுக்கு வனத்தைக் கொன்று
வயிறு வளர்த்தவர் ஆசைகள் காட்டினர்
காகிதப் பணமே வாழ்வென்றாக்கிட
காடரின் மகன்கள் கோடரி தூக்கினோம்

அன்றைக்கு விழுந்த அடிமரத் தழும்பில்
பீய்ச்சியடித்தது வனப்பேச்சி ரத்தம்தான்.
மரங்கள் எங்கள் மூதாதை என்று
இரங்கல் கூட்டத்தில் இனி அழுதென்ன செய்யட்டும்!
- ஜீவானந்தம்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)