பதிவு செய்த நாள்

28 ஆக் 2017
17:00

'என்னம்மா இப்புடி பண்றிகளேம்மா’ ’ரிங்டோ’னாய் அலறியதும் திடுக்கிட்டு எழுந்துபார்த்தேன். மணி 2.12. இந்த நேரத்தில் யாராக இருக்கும். பாஸ்கரன்தான் அழைத்திருக்க்கிறான்.
‘என்ன பாசு இந்த நேரத்துல..?’
‘நாய்.. நாய்..’ என்றான்.
‘நாயா.. ஏண்டா நடுராத்திரியில போனப்போட்டு திட்டுற..!’ என்றேன்.
‘இல்ல.. மு..முட்டு சந்து.. வண்டி.. தி..திலகர் தெரு..’ அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை. அதை சொல்வதற்கே வார்த்தை பிசிறடித்தது. ஏதோ விபரீதம் என்பதை மட்டும் உணர்ந்தேன்.
சட்டைப் பேண்டை மாட்டிக்கொண்டேன். கதவை தாழிடச் சொல்லலாமென்று என் மனைவி தீபாவை எழுப்ப தோளைத் தொட்டேன். ‘அந்த சண்டாளி, மாமியாரை தூக்கிப்போட்டு மிதிடி.’ தூக்கத்திலும் சீரியலில் இருந்தாள்.
சத்தமில்லாமல் கதவை சாத்திவிட்டு, செருப்பணிந்துகொண்டு, பைக்கை சாய்த்து மிதித்தேன்.
பத்து நிமிட பயணத்தில் திலகர் தெரு, முட்டு சந்துக்கு வந்தேன்.
முணகல் சத்தம் மட்டும் கால்வாய்ப் பள்ளத்திலிருந்து கேட்டது. எட்டிப்பார்த்தேன்.
பாஸ்கரன்தான். பைக்கோடு விழுந்து கிடந்தான். வலது காலைப் பிடித்துக்கொண்டு வலியில் துடித்துக் கொண்டிருந்தான். பதற்றத்தோடு ஓடிச்சென்று மேலே தூக்கினேன். அவன் பிடித்திருந்த காலைத் தொட்டேன். மேலும் அலறினான்.
உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். இந்த நேரத்தில் ஆட்டோ தேடிப்பிடித்து கூட்டிவருவது சாத்தியமில்லை என்று தோன்றியது. ‘பைக்கை பார்த்து ஓட்டக்கூடாதா..பாசு...ஆமா இந்த நேரத்துல இங்க எதுக்குடா வந்தே..?’
'மெதுவாத்தான் வந்தேன். நாலஞ்சு நாய்ங்க வெறிபுடிச்ச மாதிரி விரட்டிக்கிட்டு ஓடி வருதுங்க. தப்பிச்சிடலாம்னு வேகமா வந்து பள்ளத்துல விட்டுட்டேன்’
‘எப்பவுமே ஒண்ணு புரிங்சுக்க பாசு. நாய்ங்க விரட்டும்போது ‘சுச்..சுச்சூ.. சூ..ச்சூ’ ன்னு நாய்க்கும் நமக்கும் நாலு ஜென்ம பந்தம் இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டே ’எஸ்கேப்’ ஆயிடணும். இதான் நாய்ங்களோட ‘சைக்காலஜி’.
‘டேய் யப்பா..உன் சைக்காலஜி..பையாலஜி’ எல்லாம் ஆஸ்பத்திரில சேர்த்துட்டு அப்புறம் வெச்சிக்ககூடாதா.. கால் வீங்குதுடா..அம்மா..ஆ..’
அவன் சொல்வது 100% சரியாகப்படவே.... ‘சரி என் பைக்ல ஏறி அசங்காம உட்கார். அடிச்சுப் பிடிச்சு அஞ்சு நிமிஷத்துல ஆஸ்பிடல் போயிடலாம்’ என்ற என் ’அ’ ரைமிங்கை ரசிக்கவில்லை. அலறுவதில் மட்டுமே குறியாக இருந்தான்.
‘எதுக்கு.. ’எஸ்கேப்’ ஆனவன் திரும்ப வந்துட்டான்னு அதே நாய்ங்க கடிச்சி குதறவா..? அடுத்த ஆளுக்கு தெரு முனையிலயே வெயிட் பண்ணிட்டு இருக்கும்.
ஆட்டோ பிடிடா, ‘என்றபோது, ஒரு வாகனம் புள்ளியாய் தொடங்கி, முட்டைக்கண் ஒளியோடு பூதாகரமாக வந்து நின்றது.
அது, நீங்கள் மற்றும் நான் நினைத்தது போலவே போலீஸ் ‘பேட்ரல்’ வண்டிதான்.
‘யோவ் இங்க வா..’ மரியாதையாக அழைத்தார் உள்ளே இருந்த காக்கி. அருகே சென்றேன். என்னய்யா பண்ற..?’
‘சார் என் ஃப்ரெண்ட்டு..பள்ளம்னு தெரியாம பைக்ல வந்து விழுந்துட்டான்’.
‘சரக்கா.. வந்து வாய ஊதசொல்லு..?’
‘ரொம்ப நல்ல பையன் சார். குடிக்கிற பழக்கம் இல்லை’
‘இந்த நேரத்துல இங்க எதுக்கு வந்தான்..?’ என்று முடிக்கும் முன் பாசு வலியால் துடித்தான்.
‘ரொம்ப அடிபட்டிருக்கும் போலருக்கே. பக்கத்துலதான் எலும்பு முறிவு ஹாஸ்பிடல் இருக்கு. கூட்டிட்டுப்போ’
‘அதுக்குத்தான் சார் ஆட்டோ ஏதாவது வரும்னு பார்க்கிறேன். ரொம்ப நேரமா காணோம்.’ நீங்க ஒரு சின்ன ’ஹெல்ப்’ பண்றிங்களா..?’
‘என்னது..?’
‘காவல்துறை எங்க நண்பன்கிறதால கேக்கிறேன். உங்க வண்டியில ஹாஸ்பிடல்ல இறக்கிவிட முடியுமா..? ப்ளீஸ் சார்’ என்றேன்.
1..2...3..4..5.. வது நொடியில் ‘சரி உட்கார வையி. ஆட்டோன்னா இருநூறு கேட்பான்.’ என்றதில் அவரின் எதிர்பார்ப்பு புரிந்தது.
‘நீங்களும் ஒரு கை பிடிக்கணும்’ என்றதும், இறங்கி வந்து பாஸ்கரனை ஒரு தோளில் வாங்கிக்கொண்டவரிடமிருந்து மெல்லிய ஆல்கஹால் வாசனை.
அடுத்த அரை மணியில் ஹாஸ்பிடல் வாசலில் இருவரையும் இறக்கிய காவல், தன் கடமையை செய்துவிட்டு ரூ.100-டன் சென்றது.
அந்த மருத்துவமனையின் பெயர் பலகையில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் ’கரண்ட்’ டை கையில் பிடித்துக்கொண்டு ஒளிர்ந்தது. எலும்பு முறிவு எழுத்துக்களில் ஆங்காங்கே எழுத்து முறிவு ஏற்பட்டு ’பெயிண்ட்’ உதிர்ந்திருந்தது.
வாசலில் யாரையும் காணோம். உள்ளே நிசப்தமாய் இருந்தது.
பாஸ்கரனை வாசல் படிக்கட்டில் அமரவைத்தேன். அவன் அலறல் இப்போது அதிகமாகியிருந்தது.
‘ஹாலோ.. உள்ள யாராவது இருக்கிங்களா..?’ குரல் கொடுத்த மூன்றாவது நிமிடத்தில் ’பல்க்’ காக ஒரு நர்ஸ் தூக்க கலக்கத்தில் ’பாம்..ம்ம்..ம்ம்’  என ரயில் எஞ்சினுக்கு ’எபெக்ட்’ போடும் அளவுக்கு கொட்டாவி விட்டபடி நடந்து வந்தாள். பக்கத்து ரூமிலிருந்து வருவதற்குத்தான் அந்த மூன்று நிமிடங்கள்.
ஹாலில் இருந்த டியூப் லைட்டை உயிர்ப்பித்தபடி ’யாரு வேணும்..?’ பூட்டியிருந்த இரும்பு ’கிரில்’ கதவுக்கு அந்த பக்கமிருந்து கேட்டாள்.
‘ப்ரெண்டுக்கு அடிபட்டிருக்கு, டாக்டரை பார்க்கணும்.’ என்றதும், எந்தவித பதற்றமோ, வேகமோ இல்லாமல் ’இருங்க வர்றேன்.’ என்றபடி சாவி எடுக்க உள்ளே சென்றபோதுதான் அதை கவனித்தேன். இரண்டு நாய்கள் கதவு ஓரத்திலிருந்து தலையை தூக்கிப் பார்த்தது.
‘என்ன மேடம் நாயெல்லாம் இருக்கு. எப்படி உள்ள வரமுடியும்..?’ என்றேன்.
‘ஹாஸ்பிடல் நாய்ங்கதான். ஒண்ணும் பண்ணாது. ஓரமா ஒதுங்கி வாங்க’  
‘இதுங்க இனத்தாலதான் ஒருத்தன் பேஷண்டாயிருக்கான். இங்கையும் நாயா..? இதுங்களப் பாத்தான்னா.. வரவே மாட்டான்.  ப்ளீஸ் கொஞ்சம் வெளியே விரட்டி விடுங்களேன்’ என்றேன்.
‘பாண்டி-பூர்விகா வெளியில போங்க’ என்றதும், பாண்டி எழுந்து பின்னங்காலை முடிந்தமட்டும் பின்னால் நீட்டி.. நெட்டிமுறித்துவிட்டு உள் பக்கமாக ஓடியது. கூடவே பூர்விகாவும். இந்த விசயம் பாசுவுக்கு தெரியாமல் மறைப்பதுதான் புத்திசாலித்தனம்.  
‘வா..பாசு போலாம்.’  தூக்கிவிட்டு, அவனை தாங்கி படியில் ஏறினேன்.
‘அ..ம்மா ஸ்...ஸ் ’அவசர சிகிச்சை’ ன்னு போட்டிருக்கு. ஒரு அவசரத்தையும் காணோமேடா.. ஆஸ்பிடலா நடத்துறாங்க..’
‘கால் வலியிலயும் இட்லி சாப்பிடுறியா பாசு..’  
‘இட்லியா.. என்னடா சொல்ற..?’  
‘கம்யூனிசம் பேசுறியான்னு கேட்டேன்...?
‘கத்தியில முருகதாஸ் சொல்லியிருப்பாரே’
பாசு முறைத்துக்கொண்டே கடைசி படியில் கால் வைக்க, அந்த  நர்ஸ் வந்து கதவை இன்னும் அகலமாக தள்ளினாள்.
‘இவருதான் பேஷண்டா..? அப்படியே கூட்டிப்போய் செகண்ட் ப்ளோர், ஏழாம் நம்பர் அறையில படுக்க வெச்சிட்டு, நீங்க மட்டும் கீழ வாங்க’ என்றாள்.

‘சும்மா லேசாதான் அடிபட்டிருக்கு. ஆயில்மெண்ட் போட்டு இப்படியே அனுப்பிடுங்களேன். என்றேன்.
‘லேசான அடின்னு  நீங்களா முடிவு பண்ணாதிங்க.’ என்று பாசுவின் நாக்கை நீட்டசொன்னாள். பின், இடது கண்ணை திறந்து பார்த்தாள்.
‘அடிபட்டது கால்ல’ என்றேன்.’
‘எனக்கு தெரியும்.’ என்று திரும்பி முறைத்துவிட்டு, இடது கையை அழுத்திப் பார்த்து ‘வலிக்குதா..?’ என்றாள்.
பாஸ்கரன் ‘இல்லை’ என்றான். அடுத்து, காலில் அடிபட்டு வீங்கியிருந்த இடத்தை அழுத்திப்பார்க்க, பாசு வலியில் துடித்தான்.
‘கண்டிப்பா இது ’பிராக்‌ஷர்’ தான். பெட்டுல ஒருவாரம் வெச்சிருந்துதான்.
‘ட்ரீட்மெண்ட்’ பண்ணமுடியும்.’ என்றாள் கறாராக. வேறு வழி தெரியவில்லை. சரியென்று தலையாட்டினேன்.
அந்த நர்ஸ் சொன்ன ஏழில் படுக்கவைத்துவிட்டு கீழே வந்தேன். ’நர்ஸ் யாரிடமோ செல்போனில் பேசிக்கொண்டிருந்தாள். ‘ஆமா சார். கால்ல அடிபட்டிருக்கு. போக பாத்தாங்க நான் விடலை. அட்மிஷன் போட்டுட்டேன். ஓகே சார். ஒரு வாரத்துக்கு தாங்குவாங்க.’ என்றவள் என்னை பார்த்ததும் செல்லை இதயத்தருகே வைத்தாள். 

ஒரு வாரத்துக்கு காலில் என்ன வேலை இருக்க முடியும்..? டாக்டர் வந்ததும் பேசிக்கொள்ளலாம் என்றிருந்தேன்.
அதே நர்ஸ் ஒரு A4 அளவு பிரிண்டட் சீட்டை என் கையில் கொடுத்தாள். ’இந்தாங்க ஃபாரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு, இப்ப ஒரு ’சிக்ஸ்’ தவுஸண்ட கட்டிடுங்க. அரை மணி நேரம் கழிச்சு இன்னொரு ஐயாயிரம் கட்டுங்க.’ 

‘அடுத்த அரை மணியிலயே இன்னொரு ஐயாயிரமா மேடம்.. ஒரு காபி சாப்பிட பத்து நிமிஷம் ஆகும். நாப்பது நிமிஷத்துல கட்டினா பரவாயில்லையா..?’

‘டாக்டர் என்னை திட்டுவாரு’ என்றவளின் தலையில் விரல்கள் முட்டியில் எச்சிலை தடவி, நடுமண்டையில் ‘நச்’ சென்று குட்ட வேண்டும் போல் இருந்தது.  ஆனால், முடியாது ஏனென்றால் பாசு என் உயிர் நண்பன்.
இறங்கி வந்து.. அருகிலிருந்த ஒரு ATM-மில் மொத்தம் இருந்த ஆறாயிரத்து நூறிலிருந்து, நூறை மட்டும் விட்டுவைத்தேன்.
ஆறாயிரத்தை கட்டிவிட்டு ரசீது வாங்கிக்கொண்டு மேலே வந்தேன். பாசு நிமிர்ந்து உட்கார்ந்து முதுகுக்கு தலையணை வைத்திருந்தான். டிவியில் சிவகார்த்திகேயனோடு ஸ்ரீதிவ்யா ஆடிக்கொண்டிருந்தார்.
‘பிரபா.. இது வ.ப.வா.சங்கம்தானே..?’ என்றான்.
‘அப்படித்தான் தெரியுது’ என்றபோது,  நர்ஸ் மூச்சுவாங்கியபடி மேலேறிவந்து பாசுவை குப்புறப்படுக்கச் சொல்லி, பெல்டை தளர்த்தி ஊசியொன்றை, போட்டுவிட்டு போனாள்.
‘பிரபா.. சும்பா விடக்கூடாதுடா. எதாச்சும் பண்ணனும்.’ என்றான்.
‘ஆமா பாசு. ஓவரா பணம் கேட்கிறாங்கில்ல. கால் சரியாகட்டும். எதாச்சும் பண்ணுவோம்’ ஆறுதல் படுத்தினேன்.
‘அதில்ல பிரபா. அந்த நாய்ங்களை’ பல்லை நறநறவென்று கடித்தான்.
‘ஆளுக்கொரு உருட்டுக்கட்டையோடு.. என்னைய மாதிரியே அதுங்கள விரட்டி விரட்டி..’ என முடிக்கும் முன்.
‘சட்டத்தை நாம கைல எடுத்துக்கக் கூடாது பாசு. அகிம்சையா போராடுவோம். நகராட்சிக்கு போன் போட்டு பிடிச்சுக் கொடுப்போம். அப்படி இல்லேன்னா நீ விழுந்த குழிய மூட ஏற்பாடு செய்வோம். இதுதான் நமக்கும், நாட்டுக்கும் நல்லது. என்றபோது அவனிடமிருந்து மெல்லிய குறட்டை.
விடிய ஆரம்பித்தது. பாசு அம்மாவுக்கு போன் செய்து வரச்சொன்னேன். வந்தார். பாசு வலியில் அலறுவதைப் பார்த்து கண்கலங்கினார். சினிமா அம்மாக்கள் போல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவில்லை. அருணா வந்தான். வெங்கட், வீரா, தாமஸ், வந்தார்கள். ஒவ்வொவரிடமும்  ’நாய்..திலகர்.. முட்டுசந்து..வலி என ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்தான் பாசு.
அனைவரிடமிருந்தும் வந்த ஒரே மாதிரியான பரிதாப ’ரியாக் ஷனையும், விதவிதமான நாய்களிடம் நடந்துகொள்ளும் விதங்கள் மற்றும் ஃபிளஸ்பேக்கு+ புத்திமதிகளைப் பெற்றுக் கொண்டு, சோர்ந்து போயிருந்தான். தாமதமாக வந்த அழகேசனுக்கு நான்தான் விளக்கவேண்டியதாய் இருந்தது. ’அந்த நேரத்துல அங்க எதுக்குப் போனானாம்..?’  என்ற அவனது கேள்விக்கு பதில் தெரியாததால், உதட்டை பிதுக்கினேன்.
நண்பர்கள் சிலர் வரமுடியாததற்கான காரணத்தை யோசித்து, ஒரு முறைக்கு நான்கு முறை, சொல்லி சரிபார்த்துக் கொண்டு போனில் வருத்தப்பட்டார்கள்.

காலை 7.30 மணிக்கு பகல் ’ஸிப்ட்’க்கு இரண்டு நர்ஸ் வந்திருந்தார்கள். அதில் ஒரு நர்ஸை எங்கோ பார்த்திருக்கிறேன். அவரிடம் ’ டாக்டர் எப்போ வருவார்..?’ என்றேன்.
‘இப்போ வந்துடுவார்’ என்றபோது...வந்தார்.
‘ஐயாம் டாக்டர் ஆர். ராமஜெய பர்குணன், ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் ஃபிரம் லண்டன்’ என்றார். இரண்டு தம்பிராமையாவை இறுக்கி கட்டியதுபோல இருந்தார். நெஞ்சுக்கு மூன்று இன்ஞ் கீழே இறக்கி பேண்டுக்கு ’பெல்ட்’ போட்டிருந்தார். கருப்பு ஹெச்சில், ஸ்கேலில் கோடு போட்டதுபோல் பிசிரில்லாமல் மீசை வரைந்திருந்தார்.
‘தம்பி பேரு என்ன..?’ என்றார். பாசுவின் கையில் நாடிபிடித்துக் கொண்டே.
‘பாஸ்கர்.’என்றான்.
‘பாஸ் என்கிற பாஸ்கரனா..’ என்று கேட்டுவிட்டு இந்த ஆண்டின் சிறந்த ஜோக்கை சொல்லிவிட்டது போல் பொத்துக் கொண்டு சிரித்தார். ’ ஐயாம் தமிழ் மூவி விரும்பி பார்ப்பேன் லாஸ்ட்டா நான் பார்த்த மூவி அதுதான். வெரி குட் ஃபிலிம்.’  என்றார்.
‘அது வந்து ரொம்ப வருஷம் இருக்கும் சார். அதுக்கப்புறம் 1200 படத்துக்கு மேல வந்திருக்கு.’
என்றதும் எரிச்சல் வந்திருக்குமோ என்னவோ, திரும்பி என்னைப் பார்த்தார். ’குச்சி மிட்டாய்க்கு சட்டை போட்ட மாதிரியிருக்கானே யாரு இந்த பையன்..?’
‘என் ஃப்ரெண்ட் சார்’ என்றான் பாசு.
நூறு கிராம் ஏளனத்தை என் மீது தூக்கி எறிந்துவிட்டு, பாசுவிடம்..  
‘நாய் விரட்டினதுல விழுந்துட்டதா சொன்னாங்க. சுமார் எத்தனை நாய்கள் இருக்கும்..?’
‘ஆறேழு இருக்கும் சார்’
‘அத்தனையும் ஆணினமா, பெண்ணினமா..?’
டாக்டருக்கு தெரியாமல், என்னைப் பார்த்து பல்லைக் கடித்தான் பாசு.
‘டாக்டர் கேக்குறாரு சொல்லு பாசு. நாய்ங்க விரட்டும் போது திரும்பி குனுஞ்சி பாத்த..?’
படுத்தபடியே கையில் ஏதேனும் தட்டுப்படுகிறதா என்று பாசு துலாவுவதை அறிந்து அமைதியானேன். ஆனாலும், அவர் விடுவதாக இல்லை.
‘எனக்கென்னவோ ரெண்டு இனமும் இருந்திருக்கும்னு தோணுது. அத்தனையும் அவ்வளவு வெறியோட விடாம விரட்டியிருக்குன்னா அதுங்களுக்கு உங்களால ஏதோ அசொளகரியம் ஏற்பட்டிருக்கணும். இல்லைனா எதுக்கு வெறிகொண்டு துரத்தப்போவுது.’ என்று பாசு கையை விட்டுவிட்டு, ‘நர்ஸ்’ என்றார்.
‘த்தோ..சார்.’ என்றபடி ஒரு அடி முன்னால் வந்து நின்றாள். அந்த எங்கேயோ பார்த்த நர்ஸ்.
‘எடுக்க வேண்டிய எல்லா ஸ்கேனிங்கும் எடுத்திட்டிங்களாம்மா..?’
‘இல்லை சார். இனிமேதான் எடுக்கணும்.’
‘இந்த மாசம் சம்பளம் வாங்கிட்டியாம்மா..?
‘வாங்கிட்டேன் சார்.’
‘ம்..அந்த திமிர்லதான் இவ்வளவு அலட்சியமா இருக்கியாம்மா..?  எடை மிஷின்லேர்ந்து, ஈ.சி.ஜி மிஷின் வரை எதுக்குமா வாங்கி போட்டிருக்காங்க. ஆயுத பூஜைக்கு, பூஜை போட்டு பொறிகடலை சாப்பிடவா..?  வர்ர பேஷண்ட்டுங்க என்ன நினைப்பாங்க. இந்த ஆஸ்பிடல்ல எந்த எக்யூப்மெண்ட்டும் இல்லைன்னு தப்பா பேச மாட்டாங்க..? எடுக்கணும். எல்லாத்தையும் இன்னைக்கே எடுக்கணும்.’ என ‘நாயகன்’ கமல் ஸ்டைலில் சொல்லிவிட்டு விருட்டென்று கிளம்பிப் போனார்.
டாக்டரின் ஆணைக்கு கட்டுப்பட்ட ஆண் மற்றும் பெண் நர்ஸ்கள், உடனடியாக ஒரு சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டு வந்தார்கள். பாசு அவனாகவே எழுந்து உட்காரப்போக, வேண்டாமென தடுத்து படுக்கையிலிருந்து அவர்களே தூக்கி உட்கார வைத்தார்கள்.
‘இதுக்கும் பில்லுல சேர்த்துடுவிங்களா நர்ஸ்’ என்ற எனது ’டைமிங்’ ஜோக்கை ஒரு நர்ஸ் மட்டும் புரிந்து கொண்டு ஸ்மைலினாள்.
காலையில் நாற்காலியில் ஏற்றி, ஒவ்வொரு அமானுஷ்ய அறைக்கும் தள்ளிக்கொண்டு போய் படுக்க வைத்து, தூக்கிவைத்து, உட்காரவைத்து..புளியை கரைத்து மதியம் ’லன்ச்’ க்குத்தான் எண் ஏழுக்கு வந்தோம். அந்த சந்தேகத்தை அந்த நர்ஸிடமே கேட்டேன். ’ஏன் சிஸ்டர் இதுக்கு முன்னாடி உங்களை டி.நகர் பாத்திரக்கடையில பார்த்திருக்கிறனே.’
‘ஆமா சார்.  இந்த ஹாஸ்பிடல் ஓனர்தான் அங்கேயும் கடை வெச்சிருக்கார். ஆளில்லைனா அங்க, இங்க மாறிமாறி இருப்பேன்.’
‘ஊசி கூட போடுவிங்களா..?’
‘சீக்கிரமா கத்துக்குவேன்’ என்றவளிடம் ’அப்போ பேஷண்ட்டுகளோட நிலைமை..?’ என் மாபெரும் கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்று கொண்டிருந்தாள்.
மீண்டும், மதியத்திற்கு மேல் டாக்டர் வந்தார். டாக்டருடன் கூடவே அவர் வயதையொட்டிய  இன்னொரு பெண் டாக்டரும் வந்திருந்தார். ஒரு நர்ஸ் கையில் பரிட்சை ’ரிசல்ட்’ பேப்பர் போல அடுக்கி வைத்திருந்ததிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து டாக்டரிடம் நீட்ட, அவர் அந்த எக்ஸ்ரே பேப்பர்களை வெளிச்சத்தில் தூக்கி தூக்கிப் பார்த்துவிட்டு, பெண் டாக்டருடன் ஆங்கிலத்தில்.. ’யா..யா.., எஸ்..,க்ளிப்., ஆஸ்பிடல் ரெண்ட்..’ கரெண்ட் பில்..’ ஒன்வீக்.. ஓகே..,’ என்றதை தவிற எதுவும் புரியவில்லை.
என்ன சொல்லப் போகிறாரோ என்ற பீதியுடன் பாசுவும், நானும் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, ’கங்கிராண்ட்ஸ் நீங்க அப்பாவாகப் போறீங்க’ என்ற தொணியில் ‘கவலைப்படாதீங்க பாஸ்கர். ஒரு ’மைனர்’  ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கும்’ என்றார்.
அடுத்த இரண்டாவது நாளில்.. பாசுவின் கத்தல், கதறல், விம்மல், விசும்பல் எதுவும் எடுபடாமல் போக, ஆபரேஷன் முடிந்துவிட்டது. காலில் கட்டுடன் படுத்திருந்தான்.
எதிர் ரூமிலிருந்து வெளிப்பட்டு பாசுவை காட்டியபடி ’ஏம்பா..தம்பிக்கு என்னாச்சு..? என கேட்ட, அந்த நடுத்தர பெண்மணி மஞ்சள் குங்குமத்துடன், ஒரு மரத்தடி காளிகாம்பாள் கோவிலை நிர்வாகிக்கும் பொறுப்பை ஒப்படைக்கலாம் போல சாந்த சொரூபியாக.இருந்தார்.
‘கால்ல அடிபட்டிருக்கும்மா’ என்றேன்.
‘கவலைப்படாதப்பா.. சீக்கிரம் குணமாயிடும். இந்த டாக்டரோட கைராசி அப்படி. மத்த ஆஸ்பத்திரி மாதிரி பணம் அதிகமாகாது.  நர்ஸுங்களும் சிடுசிடுப்பு காட்டாம நல்லா கவனிச்சுக்குவாங்க. நீங்க அவருக்கு என்ன வேணும்..?’
‘ஃப்ரெண்ட். நீங்க யாரைம்மா சேர்த்திருக்கிங்க..?’ மரியாதை நிமித்தமாக கேட்டேன்.
‘என் பையனுக்கு கை சுண்டுவிரல்ல அடிபட்டிருச்சின்னு வேலூர்லேர்ந்து கொண்டுவந்து இங்கதான் ’பெட்ல’ சேர்த்திருக்கேன். வந்து மூணு மாசம்தான் ஆகுது. இன்னும் ரெண்டு நாள்ல ’டிச்சார்ஜ்’ பண்றேன்னு டாக்டர் சொல்லிட்டாரு. ரொம்ப தங்கமான மனுஷன்’ என்றார்.
‘அப்படி தெரியலையே’ என்ற யோசனையுடன் விடைபெற்று, காபி சாப்பிட வெளியே சென்றுவிட்டு மீண்டும் ஆஸ்பிடலுக்குள் வந்தேன். வந்தவன் நேரே போகாமல் சிரிப்பு சத்தம் கேட்ட ஜன்னல் வழியாகப் பார்க்க, அங்கே மஞ்சள் குங்குமத்துடம் மேலும் மூன்று சாந்த சொரூபிகள். அவர்களின் பேச்சிலிருந்து அவர்கள் இந்த ’ஆஸ்பிடலின் புகழ் பரப்பும் குழு’ என்பது அப்போதுதான் புரிந்தது.
ஊரிலிருந்து பாசுவின் சித்தி வந்திருந்தார். வரும்போதே அத்தனை பூசாரிகளிடமிருந்தும் தாயத்து வாங்கி மாவு கட்டுக்கு மேல் கட்டியிருந்தார். ‘ஏம்பா இவ்வளவு நடந்திருக்கு அந்த நாய்ங்களா சும்மாவா விட்டிங்க..? என்றபடி என்னைப் பார்த்தார் சித்தி. 

‘சொத்தையா எழுதிவாங்க முடியும்..?’ என்ற என் வார்த்தையை வெளியே கசிய விடவில்லை. 

‘விடமாட்டேன் சித்தி விடவேமாட்டேன்.’ என்றவன் பார்வையை என்னிடம் திருப்பி.. ‘பிரபா.. என்ன பண்றேன்னு வேடிக்கை மட்டும் பாரு’ என்ற பாசுவின் கண்கள் இளஞ்சிவப்புக்கு மாறியது.
சில வாரங்களுக்குப் பிறகு... மருத்துவமனையிலிருந்து பாசு இறங்கினான். கூடவே நானும். எங்களை வழியனுப்பும் விதமாக பாண்டியும்-பூர்விகாவும் வாசலுக்கு வந்து வாலாட்டினார்கள்.
‘எல்லாம் இதுங்களால வந்தது.’  என்று காலருகே கிடந்த அரை செங்கல்லை எடுத்து அவைகள் மீது வீசினான். இரண்டும் லாவகமாக தப்பித்து ஓடியது.
‘சென்னை சிட்டியில ஒரு..ஒரு..ஒரு நாய் கூட ரோட்டுல நடமாட விடக்கூடாது’ என்று வில்லனை காலுக்கடியில் கிடத்திய க்ளைமாக்ஸ்’ ஹீரோ போல தம்கட்டி பேசினான். ’பிரபா...எனக்கு ஒரு சத்தியம் பண்ணித்தறியா..?’
‘சொல்லு பாசு.’
‘எங்க நாய்ங்களப் பார்த்தாலும் எனக்கு போன் பண்ணுவேன்னு சத்தியம் பண்ணு’ என்றான் கையை நீட்டி.
‘கார்ப்ரேஷன்ல பார்த்துக்குவாங்க விடு பாசு.’ என்றேன். ஆயிரம் முறை ஆறுதல் கூறினாலும் அதை ஏற்க தயாராகாத ’திருவிளையாடல்’ முருகனைப் போல் அடம் பிடித்தான்.
ஆபரேஷன் செய்ய ஒப்புக் கொண்டது போலவே சத்தியத்தையும் ஒப்புக்கொள்வதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. சத்தியத்தை அவன் கையில் அடிக்கவும், உடம்பை முறுக்கிக் கொண்டு ’எழுகவே படைகள் எழுகவே’ என்பதுபோல் படிகள் இறங்கினான்.
‘நல்லா ரெஸ்ட் எடு. பத்து நாள் எங்கையும் போகதே’  என்றுவிட்டு, அம்மாவிடம் ‘வெளியில போக அடம்பிடிச்சான்னா எனக்கு போன் பண்ணி சொல்லுங்கம்மா’ என்று ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தேன்.
வேலையின் காரணமாக நான் சில வெளியூர்களுக்கு செல்லவேண்டியிருந்தது. அந்த அலைச்சலில் ஒரு வாரம் பிஸியாக இருந்தேன். இரண்டு தடவை பாசுவிடம் போனில் பேசியதோடு சரி.
சென்னை வந்த பின், ஒரு நாள் பாசு கீழே விழுந்த திலகர் தெரு, முட்டு சந்து வழியாக எதேச்சையாக செல்ல நேர்ந்தது. அப்போது திடீரென என் பைக்கை முந்திக்கொண்டு ஒரு பளுப்பு நிற நாயொன்று தலைத்தெறிக்க ஓடிக்கொண்டிருந்தது. திரும்பிப் பார்க்க, பாசுதான் கையில் கருங்கல்லோடு அதை விரட்டிக்கொண்டிருந்தான்.
என்னைப் பார்த்ததும் கல்லை கீழே போட்டுவிட்டு ’கம்பெனிக்கு போகலையா பிரபா..?’ என்றான்.
‘என்னடா வேலை பார்த்துட்டு இருக்க..? இதே வேலையாதான் இருக்கியா..? வா வந்து உட்கார்.  ஆபிஸிக்கு எத்தனை நாள் லீவு போட்டிருக்கே..?’ என்றேன்.
‘இன்னும் நாலு நாள் இருக்கு. கால் சரியாயிடுச்சி பாரேன்’ என்று கால்களை உதறிக்காட்டினான்.
‘வண்டியில ஏறு.’
பாசுவை வீட்டில் விட்டுவிட்டு வந்த ஐந்தாவது நாள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டிலிருந்தேன்.
பாசு அம்மாவிடமிருந்து போன். ‘சொல்லுங்கம்மா’  என்றேன்.
‘இந்த பாசு பையன் பண்ற வேலைய வந்து பாருப்பா..’
‘என்னம்மா பண்றான்..?’
‘கொஞ்சம் வீடு வரைக்கும் வந்துட்டுப் போயேன்’
என்ன பண்ணியிருப்பான்...? பதற்றத்துடன் பைக்கில் பாசு வீட்டிற்கு கிளம்பினேன்.
பதினைந்தாவது நிமிடத்தில் பாசு வீட்டுக்கான படிகள் ஏறி கதவைத் திறந்தால்.
ஹாலில் இரண்டு வாரங்களேயான கறுப்பு நிற நாய்குட்டி ஒன்று வாலாட்டிக்கொண்டு, கிண்ணத்தில் இருந்த பாலை துளியூண்டு நாக்கால் நக்கிக்கொண்டிருந்தது. அதைப் போலவே குனிந்து படுத்துக்கொண்டு ‘சுச்சுச்சூ..குடி..குடி..சுச்சூ..’  என்று கொஞ்சிக் கொண்டிருந்தான் பாசு.
‘என்னடா..இது..?’ என்றேன்.
‘வா..பிரபா.. காலைல கடைக்குப் போயிட்டு வீட்டுக்கு வர்றேன்.. இந்த ’புஜ்சு’  காலை சுத்திக்கிட்டு கூடவே வருதுடா.. தள்ளிவிட்டாலும் போகமாட்டேங்குது.
‘ஈஈங்.. ஈஈங்’ கூப்டுக்கிட்டே படியேறி வீட்டுக்கே வந்திருச்சி...பார்க்கவே பரிதாபமா இருக்கு பிரபா. எப்படி பால் குடிக்குது பாரேன்.’ என்றான். குட்டிநாயின் தலையை தடவிட்டபடியே.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ’கிளம்பறேன் பாசு. சும்மாதான் வந்தேன்’ என்றுவிட்டு திரும்பி படிகள் நோக்கி நடக்க, எதிரே ஒரு அழகான இளம் பெண் படியேறி வந்து கொண்டிருந்தாள்.
‘இங்க பாஸ்கர்னு..?’  நின்று தயங்கினாள்.
‘இந்த வீடுதான். உள்ள இருக்கான். என்ன விஷயம்..?’
‘பக்கத்து தெரு, கொளதம் பிளாட்ஸ்ல இருக்கேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி. நான் டைலர் கடைக்கு வரும்போது கூடவே எங்க கறுப்பு நாய்குட்டி ஓடி வந்திருச்சு. பின்னாடியே வந்துகிட்டிருந்ததை திடீர்னு காணோம். எங்கேன்னு பார்த்தா இவரு தூக்கிட்டு ஓடி வந்துட்டாரு.’
‘நாலு நாளா நாய்குட்டிய தூக்கத்தான் என்னை ஃபாலோ பண்ணிருப்பார்னு நினைக்கிறேன்’ என்றாள் அப்பாவியாய்.
இப்போதுதான் பாசுவுக்கு நாய் மீது திடீர் பாசம் வந்ததற்கான காரணம் எனக்குப் புரிந்தது. ஆனால், அவனிடம் கேட்க எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் இருந்தது. ராத்திரி 2 மணிக்கு திலகர் தெருவுக்கு எதுக்கு போயிருப்பான்.
- எம்.ஜி.கன்னியப்பன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)