பதிவு செய்த நாள்

31 ஜன 2017
11:51
எழுத்தாளனுக்கு வாழ்க்கையும் குறைவு அனுபவமும் குறைவு. - அசோகமித்திரன்

 வீன தமிழ் படைப்பிலக்கிய தளத்தில் மிகமுக்கியமான எழுத்தாளர் அசோகமித்திரன். கடந்த அரை நூற்றாண்டுகாலமாக சிறுகதைகள், நாவல்கள் மற்றும் கட்டுரைகள் என பல்வேறு தளங்களிலும் இயங்கிய ஆளுமை. மொழிப்பெயர்ப்பு நூல்களிலும் தனிமுத்திரை பதித்த. அசோகமித்திரனின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிறமொழிகளிலும் வெளியாகியுள்ளன. தனது ‘அப்பாவின் சிநேகிதர்’  சிறுகதை தொகுப்புக்காக 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற அசோகமித்ரனின் இலக்கிய பங்களிப்புகளுக்காகத் தமிழக அரசு விருது, தமிழ்பாரத் பாஷா விருது,   உட்பட பல்வேறு இலக்கிய அமைப்புகளின் விருதுகளும் வழங்கப்பட்டன. எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் இயல்பாகவும், எளிமையாகவும் எண்பத்தைந்து ஆண்டுகால அனுபவங்களின் திண்ணையாக வாழ்ந்த அசோகமித்திரன், தனது இறுதிகாலத்தில் நுால்வெளி.காம்க்கு  அளித்த நேர்காணல்

 

 உங்களின் பல கதைகள்  ஐதராபாத்தை கதைக்களமாக வைத்து  எழுதப்பட காரணம் என்ன ?

எனக்கு சொந்த ஊர் சென்னைதான். அப்பாவின் வேலை நிமித்தமாக ஐதராபாத்தில் இருந்தோம். எங்க அப்பா காலமான பிறகு 1952ல் அங்கு இருக்க பிடிக்காமல் சென்னைக்கு வந்து விட்டோம். எஸ்.எஸ்.வாசன் என் அப்பாவின் சிநேகிதர். அவர் எனக்கு ஜெமினி ஸ்டூடியோவில் பி.ஆர்.ஓ., வேலை போட்டு கொடுத்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக அத்துறையில் இருந்தேன். எனக்கு சினிமா மீது ஆர்வம் இல்லை, இலக்கியத்தில்தான் ஆர்வம் அதிகம் இருந்தது.  செகந்திரபாத்தில் இருந்தபோது எழுதிய கதைகள் தனி தொகுப்பாகவே வந்துள்ளது. இங்கு வந்த பிறகுதான் நிறைய எழுதினேன்.

 எழுத்தாளர் அசோகமித்ரன் வாசகர்களால் கவனிக்கப்பட நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாகச் சொல்லியிருக்கிறீர்களே?

நான் எழுத துவங்கி 25 ஆண்டுகளுக்கு பிறகுதான் ஓரளவுக்கு கவனிக்கப்பட்டேன். இன்றைக்கு இருப்பது போல், அன்றைக்கு இவ்வளவுக்கு பிரபலமான பத்திரிகைகள் எல்லாம் இல்லை. ஜீவானந்தம் நடத்திய ‘தாமரை’  கி.வா.ஜ., நடத்திய ‘கலைமகள்’ போன்ற பத்திரிக்கைதான் வந்தன. இவை இரண்டும்  நல்ல தரமான பத்திரிகைகள்.  ஆரம்ப காலத்தில் இது போன்ற பத்திரிகைகளில்தான் எழுதினேன். இதற்கு அதிக வாசகர்கள் கிடையாது. அதனால் அங்கீகாரம் என்பது உடனே கிடைத்துவிடாது. நான் நீண்ட காலத்துக்கு பிறகுதான் அறியப்பட்டேன்.

இதுகுறித்து உங்களுக்கு வருத்தம் இருந்தா ?

 எனக்கு அப்படி ஒரு வருத்தம் இருந்ததில்லை. பொதுவாக, ஒருவர்  உழைத்து எழுதியதை இன்னொருவர்  உட்கார்ந்து படிக்க வேண்டியிருக்கிறது. அதுவும் உழைப்புத்தான். அதில் இன்னொரு மனிதனின் உழைப்பு தேவை என்கிறபோது அங்கீகாரம் தாமதமாகதான் கிடைக்கும். இன்றைக்கும் கூட ரொம்ப அறியப்பட்ட எழுத்தாளன் என்று  என்னை நான் நினைத்துக்கொள்வதில்லை. என் கதைகளை எத்தனைபேர் படித்து இருக்கிறார்கள் என தெரியவில்லை. என் புத்தகங்களும் பெரிதாக விற்பனையாகவில்லை. கவிஞர் வைரமுத்து ஒரு சிறுகதை தொகுப்பு வெளிட்டு இருக்கிறார். அதில் ஒரு பிரதியை எனக்கு கொடுத்து அனுப்பி இருந்தார். அந்த நுால் வெயீட்டு ஒரு மாதத்துக்குள், 22 பதிப்புகள் வந்துள்ளன.  இதுதான் இன்றைய நிலை.  உங்களை போன்ற இலக்கிய ஆர்வலர்கள் என் கதைகளை படிக்கிறார்கள் அவ்வளவுதான் அது போதும்.

ஆங்கில வாசகர்களிடம் வரவேற்பு எப்படி இருந்தது ?

அன்றைக்கு வெளிநாட்டவர்கள் குறிப்பாக, அமெரிக்கர்கள் இந்திய இலக்கியங்களையும் எழுத்தாளர்களையும், மதிப்பதில்லை. நான் இந்திய இலக்கியங்களை மட்டுமல்லாமல் லத்தின் அமெரிக்க இலக்கியங்கள் மற்ற ஆங்கில இலக்கியங்களையும் தொடர்ந்து படித்ததால் என் எழுத்தில் அதன் தாக்கம் இருந்தது. அதனால் ஆங்கில வாசகர்கள் என் எழுத்தை ஏற்றுக்கொண்டனர். ஆங்கில பத்திரிக்கைகளில் பல கதைகள் பிரசுமாகி உள்ளன. இல்லுஸ்ட்ரேட் வீக்கிலியில் மட்டும் 15 கதைகள் வெளி வந்துள்ளன. அதன் எடிட்டராக இருந்த வில்லியம் ஹென்ட்ரி ஒரு வெள்ளைக்காரர். அவர் தொடர்ந்து என் கதைகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.

ஆங்கிலத்தில் கதை எழுதிக்கொண்டிருந்த நீங்கள் தமிழில் எப்போது எழுத தொடங்கினீர்கள்?

ஆரம்பகாலத்தில் ஆங்கிலத்தில்தான் அதிகம் படிப்பேன், எழுதுவேன். பிறகுதான் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. அப்போது தமிழில், பெரிய காவியங்கள், வரலாற்று கதைகள் மட்டுமே இருந்தன. எழுதியவர்கள் அதீதமான வர்ணனைகயோடு, மிகையான கற்பனையோடும் எழுதினார்கள். எனக்கு அதில் இருந்து மாறுபட்டு எளிமையாகவும், எதார்த்தமாகவும் எழுத வேண்டும் எனத் தோன்றியது. ஆரம்பத்தில் சிறு பத்திரிக்கைகளில் என்கதைகள் வெளிவந்தன. பணம் எதுவும் கொடுக்கமாட்டார்கள். தீபம், ஆனந்த விகடன் போன்ற இதழில் வந்தால் 5 ரூபாய் 10 ரூபாய் கொடுப்பார்கள். . அந்த காலத்தில் தமிழ் எழுத்தாளர்கள் யாரும் ஆங்கிலத்தில் கதை எழுதுவதில்லை. ஆனால், அதை நான் துணித்து செய்தேன்.

இந்திய ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன் கதைகள் பற்றி உங்கள் கருத்து என்ன ?

ஆர்.கே.நாராயணனின் உடன் பிறந்த சகோதரர் ராமச்சந்திரன்  என் நண்பர். அவர் என்னோடு வேலை செய்தார். அவரோடு அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்வது வழக்கம். 1962ல் ஆர்.கே.நாராயணனனை சந்தித்தேன். அவரது கைடு நாவலை என்னை தமிழில் மொழி பெயர்க்க சொன்னார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன். பிறகு சரியாக செய்ய முடியுமா என்ற தயக்கம் இருந்தது. நம்பிக்கை வரவில்லை விட்டு விட்டேன்.

எழுத்துலகில் உங்களது ஆரம்பகாலக்கட்டத்தில்  கல்கி, நா.பா., தி.ஜா., ஆகியோர் பிரபலமான எழுத்தாளர்கள் அவர்களின் எழுத்துபாணி பற்றி...

கல்கியின் எழுத்து பாணி தனி. ஜானகிராமன் நன்றாக எழுதுவார், நிறைய எழுதுவார். நா.பா.வுக்கு நல்ல ரசனை உண்டு. அப்போது எழுதிய பலர் நீட்டிமுழக்கி எழுதினார்கள். அது கோஷமாகவும் இருக்கும். எனக்கு அது பிடிக்காது. எதையும் எதார்த்தமாகவும், இயல்பாகவும் சொல்லவேண்டும். அதனால் எனக்கான ஒரு நடையை நான் உருவாக்கி கொண்டேன். 

அதனால் தான் சரித்திர கதைகள் பக்கம் நீங்கள் ஆர்வம் காட்டவில்லையா? 

சரித்திரக்கதை எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லை. “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்...” என்று கதை ஆரம்பிக்கும். நேற்று என்ன நடந்தது என்பதையே நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்ன நடத்தது என்று நான் எப்படி கதை எழுத முடியும். சரி அது கதை, அது அப்படித்தான் இருக்கும்.

 ஆனால் கல்கியின் படைப்புகள் இன்றைக்கும் வாசகர்களால் கொண்டாடப்படுகின்றனவே? 

கல்கியின் பொன்னியின் செல்வன், பாத்திபன் கனவு எல்லாம் அமரகாவியமாகும். அது நாட்டுடமை ஆக்கப்பட்டதால் எல்லா பதிப்பாளர்களும் பதிப்பித்து விற்பனை செய்கின்றனர். கல்கியின் படைப்புகளில் எனக்கு பிடித்து தியாகபூமிதான். அது சரித்திரக் கதையல்ல, சமூக நாவல். தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு ஏழை பிராமணன் தன் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுக்க என்ன என்ன சிரமப்படுகிறான் என்பதுதான் அந்த நாவல். கல்கியில் படைப்புகளில் மிக உன்னதமான படைப்பு அது. கள்வனின் காதலியும் சமூக நாவல்தான். அது கொஞ்சம் ரொமாண்டிக்கான நாவல். அது ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து அதை  எழுதியனார். திருநெல்வேலியில் சங்கரலிங்கதேவன் என்ற ஒரு கள்ளர் இருந்தார். அவர் திருட்டு, கொலை, கொள்ளை ஈடுபட்டு வந்ததால் போலீஸ் அவரைச் சுட்டுடாங்க. அந்தக் கள்ளன் பயன்படுத்திய துப்பாக்கி கூட மியூசியத்தில் இன்னும் இருக்கிறது. அவரை பற்றிய கதைதான் கள்வனின் காதலி. அந்த கள்ளன் பாத்திரத்தை நல்லவனாக பாவித்து கல்கி இந்த நாவலை எழுதி இருக்கிறார். அவர் செய்தது எல்லாம் குற்றமில்லை என்பது மாதிரி கதை போகும். அதை சினிமாவாகவும் எடுத்தனர். சிவாஜியும், பானுமதியும் அதில்  நடித்ததார்கள்.

கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? 

அவர் மிகவும் சென்சிடீவான மனிதர். நான் எதாவது சொன்னால் அவர் கோபித்து கொள்ள கூடும். அதனால், நன்றாக இருக்கிறது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

கவிதை, நாவல், சிறுகதை இதில் எதை சிறந்த வடிவமாகக் கருதுகிறீர்கள் ?

கவிதை என் துறையே இல்லை. அது குறித்து என்னை பதில் சொல்ல சொல்கிறீர்கள். ஒரு கவிஞன் தன் கவிதையில் என்ன  எழுதி இருக்கிறான் என்பதை விட அதை படிப்பவர்கள், அதுகுறித்து கருத்து சொல்பவர்கள், ஆயிரம் கற்பனையுடன் விளக்கம் சொல்கிறார்கள். ஆத்மாநாம் கவிதை ஒன்றை படித்தேன். அந்த கவிதையில் அப்படி ஒன்றும் அர்த்தமாக இல்லை. ஆனால், அதைப்பற்றி பிரமராஜன் ஆறு பக்கத்தில்  எழுதுகிறார். அவ்வளவு எழுத அதில் அப்படி என்ன  இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. 

அந்த காலத்தில் கவிதை அர்த்தமுள்ளதாகவும், தேவையானதாகவும் இருந்தது. இன்றைக்கு அப்படி இல்லை. நவீனம், பின்நவீனம் என்றெல்லாம்கூட வகைப்படுத்தப்படுகிறது. அப்படிச் சொல்லவேண்டிய அவசியமில்லை. வடிவத்தை பொறுத்தவரை சிறுகதைதான் நேர்த்தியான வடிவம். சிறுகதையில்  கிடைக்கும் வடிவ அமைதி நாவலில் கிடைக்காது.  சின்ன நாவல் எழுதுகிறார் நாவல் வளர்ந்து கொண்டே போகும். அதிலும் சிலர் வடிவமைதியுடன் எழுதுவர். டால்ஸ்டாயின்  ‘போரும் அமைதியும்’நாவலில் அது இருக்கிறது.

தமிழில் உங்களை பாதித்த  எழுத்தாளர் யார்?

நான் ஐதராபாத்தில் இருந்தபோது, ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் போன்ற இதழ்கள் கிடைக்கும். அப்போது கலைமகள் இதழில் புதுமைபித்தனின் ‘சித்தி’ கதை பிரசுரமாகி இருந்தது. அதைப் படித்து வியந்து விட்டேன். தமிழில் எழுதினால் இப்படித்தான் கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் அப்போது தோன்றியது. எனக்கு பிடித்த எழுத்தாளர் புதுமைபித்தன்தான். ஆங்கிலத்தில் சார்லஸ் டிக்கன்ஷனை பிடிக்கும்.

உங்கள் காலத்தில் எழுதிய பெண் எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்களேன் ?

அப்போது, லட்சுமி, அனுத்தம்மா, வை.மு.கோதைநாயகி, ஆகியோர் எழுதினர். இவர்கள் எழுத்து மிகவும் ஆத்மார்த்தமாக  இருக்கும்.  வாழ்க்கையின் நெருக்கடிகளை மையமாக வைத்து கதைகள் எழுதுவார்கள். இதில் லட்சுமி நிறைய எழுதினார். அவருக்கு வாசன் விகடனில் நிறைய வாய்ப்பு கொடுத்தார். அவருக்கு பெண் வாசகர்கள் அதிகம் உண்டு. 

ஒரு எழுத்தாளராக நீங்கள் எழுத நினைத்த விஷயங்களை எல்லாம் எழுதி முடித்து விட்டோம் என்று நிறைவாக உணருகிறீர்களா? 

நிச்சயமாக இல்லை. எனக்கு மட்டுமல்ல, எந்த எழுத்தாளனாலும் அப்படி நினைக்க முடியாது. காவியங்கள் படைப்பவர்களுக்கு வேண்டுமானால் அப்படி நினைக்கலாம். உதாரணமாக, வால்மீகி ராமாயணத்தை எழுதினார், கம்பர் அதை தமிழில் எழுதினார். இவர்களுக்கு திருப்தி ஏற்படலாம். ஆனால் சமகால எழுத்தாளருக்கு அப்படி தோன்றாது.

மகாபாரதத்தை ஜெயமோகன் நாவல் வடிவத்தில் எழுதி வருகிறாரே,  படித்தீர்களா ?

நான் ஒரு பாகம் படித்தேன். ஜெயமோகனுக்கு ஒரு சரணம் இருக்கிறது. அவர் ஆற்றலில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆனால், மகாபாரதமே பெரிய படைப்பு அதில் ஒரு லட்சம் ஸ்லோகங்கள் இருக்கின்றன. அதை இன்னும் அதிகமாக எழுத வேண்டுமா? எனத் தோன்றுகிறது.

உங்கள்  சினிமா துறை அனுபவங்கள்...

அப்படி எல்லாம் பெரிதாக எதுவும் இல்லை. சொல்லப்போனால் இன்றைய சினிமா பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அன்றைக்கு திரைக்கதைகளில் ஒரு அமைப்பு இருந்தது. கதைக்கு ஏற்ப நடிகர்கள் நடித்தனர். இன்றைக்கு அப்படி இல்லை. மிகவும் முரட்டுத்தனமான, வன்முறையான கதைகளாக இருக்கிறது. இன்றைய சமூகச்சூழல் அப்படி இருக்கலாம், அதை கதையில் முழுமையாக பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

ஜெயகாந்தன்எழுத்து பற்றி ...

நான் எழுத துவங்கிய பிறகுதான் அவர் எழுத துவங்கினார். அவரது கதைகள் ரொம்ப சத்தம் போடுவது மாதிரியும், உரக்க பேசுவது மாதிரியும் எனக்கு தோன்றும். அப்போது, ஆனந்த விகடனில் முத்திரை கதைகள் வரும். அவரது கதைகளை போடவில்லை என்றால் சண்டைக்கு போய்விடுவார். அவர் கதைகளில் நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறார். ஆனாலும், அவரை ஒரு முன்மாதிரியாக வைத்துக் கொள்ளத் தோன்றவில்லை.

க.நா.சுப்பிரமணியம், சுந்தர ராமசாமி போன்றவர்கள் வெகுஜன ரசனையில் இருந்து மாறுபட்ட கதைகளை எழுதினார்கள் அவை உங்களுக்கு பிடித்திருந்ததா..?

சுந்தர ராமசாமி ‘ஒரு புளியமரத்தின் கதை’ என்ற நாவலை சரஸ்வதி என்ற பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தபோது அது பாதியில் நின்று விட்டது. பிறகு, அதை தமிழ் புத்தகாலயம் கண.முத்தையா புத்தகமாக போட்டார். ‘அக்கரைச்சீமை’, ‘பிரசாதம்’ ஆகிய புத்தங்களும் வெளிவந்திருந்தது. சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் சுந்தர ராமசாமியில் கதைகளை பற்றி, நான்கு பாராட்டி பேசிவிட்டேன். அவ்வளவுதான் அங்கு வந்திருந்த தி.க.சி.,க்கு ரொம்ப கோபம் வந்து விட்டது. ‘நீங்கள் எப்படி அப்படி பேசலாம்’ என்று ஆவேசமாகிவிட்டார். க.நா.சு., கதைகள் பிடிக்கும் அவர் கட்டுரைகளும் நன்றாக எழுதுவார். ஆனால், அவருக்கு அனுபவங்கள் குறைவு. எப்பவுமே எழுத்தாளனுக்கு வாழ்க்கையும் குறைவு அனுபவமும் குறைவு. அவர்கள் பாவம்  ராயல்டியை நம்பி வாழ்கிறவர்கள்.

அசோகமித்ரனுக்கு சுயசரிதை எல்லாம் எழுதவேண்டிய வேலை எனக்கில்லை என்று தெரிவித்திருந்தீர்களே! 

வாழ்க்கை வரலாறு எழுதும் அளவுக்கு அப்படி என்ன நான் சாதித்து விட்டேன். அதற்கு பெரிய அனுபவங்கள் வேண்டும். நாஞ்சில் நாடன் போன்றவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும். கோவை ஞானி, நாஞ்சில் நாடன், சி.ஆர்.ரவீந்தரன், கவிஞர் புவியரசு போன்ற படைப்பாளர்கள் முக்கியமானவர்கள். கோவை ஞானி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. என் கதைகளை படித்துவிட்டு ‘நீங்க நல்லா எழுதுறீங்க’ என்று சந்திக்கும் போதெல்லாம் சொல்லுவார். சி.ஆர்.ரவீந்தரன் எனக்கு நிறைய கடிதங்கள் எழுதுவார். கடிதங்கள் மூலமாகவே உரையாடுவார்.

இன்றைய நவீன படைப்பிலக்கிய போக்கு மற்றும் படைப்பாளர்கள் பற்றி கூறுங்களேன் ?

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் நிறைய படிக்கிறார்கள், நிறைய எழுதுகிறார்கள். ஆனால், பெரிய வால்யூம், வால்யூம்களாக எழுதுகின்றனர். அதுதான் பயமாக இருக்கிறது. இருவரும் திரைப்படத்துறையிலும் எழுதுகிறார்கள். ஆனால் கதை எழுதுவது போல், சினிமாவில் சுதந்திரமாக எழுத முடியாது. அங்கு இயக்குனர்களில் ‘டாமினேஷன்’ அதிகம். படத்தின் இயக்குனர் கதை, திரைக்கதை மற்றும் பாடல்களை எழுதுவதோடு, இசை, ‘எடிட்டிங்’ கையும் சேர்த்து இயக்குனரே செய்கிறார். அது எப்படி சரியாக செய்ய முடியும். சத்தியஜித்ரே போன்ற பெரிய இயக்குனர்கள் எல்லாம் நல்ல நாவல்களை தேர்ந்துதெடுத்து அதைப் படமாக எடுத்தனர். தமிழ் சினிமாவில் அது போன்ற முயற்சிகள் இல்லை அல்லது குறைவு.

உங்களுக்கு எப்போதாவது இயக்குனராகும் ஆசை இருந்ததா?

கதை எழுதும் போதும், அந்த கதையை வாசகன் வாசிக்கும் போதும் இருவருக்குள்ளும் ஒரு கற்பனை உலகம் உருவாகிறது. இதை சினிமாவில் செய்ய முடியாது. அதற்கான சுதந்திரம் குறைவு. அதனால் அப்படி ஓர் ஆசை எனக்கு ஏற்படவே இல்லை.
சந்திப்பு: தென்பாண்டியன், கவிமணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)