பதிவு செய்த நாள்

30 ஆக் 2017
14:59

  ‘அமெரிக்க தேசியப் பூங்காவின் தந்தை’ எனப் போற்றப்படுபவர் ‘ஜான் முயிர்’. சுற்றுச்சூழல் ஆர்வலரும் எழுத்தாளருமான இவர், ஸ்காட்லாந்து நாட்டில் டன்பார் என்னும் இடத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வி மட்டும் பயின்று மெக்கானிக்காகப் பணிபுரிந்தார்.
அமெரிக்காவில் குடியேறிய பிறகு, பல இடங்களுக்கும் பயணம் செய்ததில் இவருக்கு இயற்கை, தாவரங்கள், புவியியல் மீது பெரும் ஆர்வம் ஏற்பட்டது. முதன் முதலாக வில்லி, கெண்டுகி முதல் சவானா ஜார்ஜியா வரை ஆயிரம் மைல் தொலைவுக்கு நடந்து சென்று சாதனை புரிந்தார். அமேசான் நதி புறப்படும் இடத்தில் இருந்து, அது கடலில் கலக்கும் பகுதி வரை, இயற்கை நடை பயின்றார். இயற்கை தொடர்பான பல அரிய தகவல்களைச் சேகரித்தார்.

ஜான் முயிர்
ஜான் முயிர்


யோமிஸ்ட் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பயணம் செய்து, அங்குள்ள இயற்கைச் சூழல் பற்றிய தகவல்களை கட்டுரையாக எழுதினார். அந்தப் பகுதி, 1905ம் ஆண்டு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இதுதவிர, வெஸ்டர்ன் காடுகளைப் பாதுகாக்கவும் போராடினார். இவரது முயற்சியால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக, பல மலைப்பகுதிகள் தேசியப் பூங்காக்களாக அறிவிக்கப்பட்டன.
பூங்காக்கள், கடற்கரைகள், மலைகள், கல்லூரிகள் என பல இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. ‘இந்த உலகத்தில் ஒவ்வொன்றும் மற்றொன்றோடு தொடர்பு கொண்டிருப்பதால், எந்த ஒரு தொடர்பை அறுத்தாலும், இயற்கையின் மற்ற அம்சங்கள் எல்லாம் தொடர்பற்று உடைந்துபோகும்’ என வலியுறுத்தினார். ஜான் முயிர் தன் வாழ்நாள் முழுக்க இயற்கையை நேசிப்பதிலும், பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.
தி சியரா கிளப்
அமெரிக்காவின் காடுகளைப் பாதுகாக்கவும், சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்தவும் அழிந்துவரும் உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ‘தி சியரா கிளப்’ என்ற அமைப்பை, 1892ல் தோற்றுவித்தார். சியாரா மலைத் தொடர் அழிக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகளை ஜான் முயிர் எழுதினார். சியாரா அமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
- ப.கோபாலகிருஷ்ணன்

“மலைகளில் ஏறிப்பார், அவை உனக்குக் கதைகள் சொல்லும். மரக்கிளைகள் வழியே சூரியக் கதிர்கள் பாய்கையில் இயற்கையின் அமைதி உன் உள்ளத்தை ஊடுருவிச் செல்லும். தென்றல் உன்னைத் தாலாட்டும், பெருங்காற்று தன் சக்தியைக் காட்டும். இலையுதிர் காலத்தில் உதிரும் சருகுகளைப் போல் உன் கவலைகள் எல்லாம் மறைந்துவிடும்.”
- ஜான் முயிர்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)