பதிவு செய்த நாள்

06 செப் 2017
13:46

  “தெலுங்கு இனம் நிறைவான ஒலிபடைத்த இனம்” என்று சினிமாக் கவிஞர் ஒருவர் சொன்னதுபோல் தெலுங்கு இனம் ஆதி முதலே இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துகொண்டே தனக்குரிய பண்பாட்டு, வரலாற்றுச் சிறப்புடன் ஒளிர்ந்து

கொண்டிருக்கும் இனம். இந்திய நாட்டு அரசியல், சமூக, பண்பாட்டு வரலாற்றில் தெலுங்கர்கள் எப்போதும் முதன்மை வகித்து வந்திருக்கிறார்கள். தெலுங்கர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் வலசை சென்று அங்கே இருப்பவர்களுடன் ஒன்றுபட்டு, அங்கங்குள்ள சமூக, பொருளாதார, பண்பாட்டுப் பழக்க வழக்கங்களுடன் இணைந்த நிலையில், தங்களுடையதான பண்பாடுகளையும் சம்பிரதாயங்களையும் போற்றிப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.
கிறிஸ்துகாலத் தொடக்கத்தில் பெளத்த மதத்தைப் பின்பற்றி, பெளத்த இலக்கியங்களைப் படகுப்பயணம் மூலமாக அயல்நாடுகளுக்கு எடுத்துச் சென்று, அங்கே பெளத்தமதப் பிரசாரங்களை நிகழ்த்தி, இந்தியப் பண்பாட்டையும் சம்பிரதாயங்களையும் அந்தந்த நாடுகளில் நிலைநாட்டிய பெருமை இவர்களுடையதுதான். அதற்குப் பின்னரான காலத்தில், தெலுங்கு சேனாதிபதிகள் சாளுக்கிய, காகதீய, விஜயநகர ராஜ்யங்களில் பல முக்கிய பதவிகளை வகித்தார்கள். 1565-ஆம் ஆண்டு தாளிக்கோட்ட யுத்தத்தில் விஜயநகர மன்னர்கள் தோற்றுப்போன நிலையில் அவர்கள் முதலில் பெனுகொண்டா பகுதிக்கு ஓடிப்போய் அங்கே சிறிதுகாலம் ராஜ்ய பரிபாலனம் செய்ததாக வரலாறு கூறுகிறது. முகலாய வீரர்கள் இவர்களை பெனுகொண்டாவில் பின்தொடர்ந்து தாக்கியதால் விஜயநகர மன்னர்கள் சந்திரகிரி சென்றடைந்து, அங்கே சில ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள்.

பெம்மஸானி வம்சத்தார்கள் விஜயநகர மன்னர்களுக்குக் கப்பம் கட்டும் சிற்றரசர்களாகக் கண்டிக்கோட்டை என்ற கோட்டைப் பகுதியைச் சில நூற்றாண்டுகளாக ஆண்டு வந்தார்கள். நிஜாம் நவாப் சேனாதிபதி மீர்ஜும்லா 1662-ஆம் ஆண்டில் கண்டிக்கோட்டை மீது படையெடுத்து நயவஞ்சகமாக அக் கோட்டைப் பகுதியை வசப்படுத்திக் கொண்டதால் கண்டிக்கோட்டையின் கோட்டைத் தளபதியாக இருந்தவன் தன் படைவீரர்களுடன் தெற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்ததாக வரலாற்றாசிரியர் கொஸராஜு ராகவய்யா செளத்ரி தனது ‘த்விபத காவிய’த்தில் தெரிவிக்கிறார்.
முஸ்லீம் படை கண்டிக்கோட்டைப் படையைத் தோற்கடித்ததால், அந்தப் படையின் அட்டூழியங்களை எதிர்கொள்ள முடியாமல் தங்கள் பெண்களின் மானத்தையும் உயிரையும் காப்பாற்றிக்கொள்ள, ஆந்திராவின் தென்பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கிலான தெலுங்குக் குடும்பங்கள் தெற்குதிசை நோக்கி வழிநடந்து தமிழ்நாட்டின் பாண்டியநாட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்தனர். அவர்களில் சிலர் அந்தந்த மன்னர்களின் ஆட்சியிலான படைவீரர்களாகச் சேர்ந்தார்கள்; வேறு சிலர் அங்கிருந்து கரிசல் நிலப்பகுதியில் அடைக்கலமாகப் புகுந்து நீர்வளத்துக்கான வசதிகள் செய்துகொண்டு, அங்கிருந்த காட்டுப்பகுதிகளைப் பண்படுத்தி விவசாயம் செய்யத் தொடங்கினார்கள்.
அவர்கள் பல நூற்றாண்டுகளாக அங்கேயே குடியிருந்து, அங்கங்கே இருந்தவர்களுடன் பழகி, அவர்களுடன் ஒன்றிப்போய் விட்டாலும், தங்களுடைய தாய்மொழியையும் சம்பிரதாயங்களையும் பரம்பரை பரம்பரையாகக் காப்பாற்றி வருகிறார்கள். சில தெலுங்கர்கள் தஞ்சாவூர் சாம்ராஜ்யத்தை ஆண்ட விஸ்வநாத மன்னரின் படைத்தளபதிகள் கெளரவமாக அந்தந்தப் பகுதிகளுக்கு நாயகர்களாக (நாயக்கர் - தலைவர்), ஜமீந்தார்களாக, கப்பம் கட்டுபவர்களாகத் தலையெடுத்து வளர்ந்ததாகத் தெரிகிறது.
இவ்விதமாக நிலைநின்றவர்களில் சில தெலுங்கில் கவிதைகளையும் காவியங்களையும் படைத்தார்கள். தஞ்சாவூரை 1535 - 1675 காலப்பகுதியில் ஆட்சி செலுத்திய தெலுங்கு நாயக்கர்கள் நிறுவிய, ‘சரஸ்வதி மஹால்’ நூலகத்தில் இந்த இலக்கியப் படைப்புகள் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. இவை மட்டுமல்லாமல் 17, 18, 19ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல இலக்கியப் படைப்புகள் ஏட்டுச்சுவடிகளாக சரஸ்வதி மஹாலில் பாதுகாக்கப் பட்டன. இங்கிருந்த ஆயிரக்கணக்கான மூல இலக்கியப் படைப்புகளில் கால்பகுதி மட்டுமே நமக்கு இப்போது புழக்கத்தில் இருக்கிறது. இதில் சில ஆயிரம் எழுத்துப் பிரதிகளை மட்டுமே தமிழக அரசு அச்சிட்டிருக்கிறது.
அன்னமய்யா எழுதிய 32 ஆயிரம் கீர்த்தனைகள், தியாகப்பா எழுதிய 24 ஆயிரம் கீர்த்தனைகள் ஆகியவற்றில் சில மட்டுமே அந்த நூலகத்தில் நமக்குக் காணக் கிடைக்கின்றன. தெலுகு பாஷா ஸமிதி (தெலுங்கு மொழி வளர்ச்சிக் கழகம்) மூலமாகத் தெலுங்கு அரசாங்கங்களான ஆந்திர பிரதேசமும், தெலுங்கானாவும் தனித்த முயற்சியெடுத்து அந்த மூலப் எழுத்துப் பிரதிகளை உரிய முறையில் வெளியிட்டு அவற்றை மறுபதிப்பு செய்து அந்தப் பிரதிகள் கிடைக்கச் செய்வதற்கான வழிவகைகளைச் செய்யவேண்டும்.
பாண்டிய மண்டலத்துப் புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு வலசை போன தெலுங்குக் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீராயங்குல ஸ்ரீகிருஷ்ண ராஜநாராயண பெருமாள் ராமானுஜம் நாயக்கர் (கி.ரா. அல்லது கி.ராஜநாராயணன் என்பதாக அறியப்பட்டிருப்பவர்) “கோபல்ல கிராமம்” என்ற தெலுங்கு சார்ந்த  தலைப்பில் தமிழில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். இந்நாவலில், கி.ரா தமது முன்னோர்கள் தென் ஆந்திரா பகுதியிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு வலசை போன வழிமுறையை விவரித்திருக்கிறார்.
வழி நெடுக அவர்கள் அனுபவித்த அல்லல் அனுபவங்கள், பாண்டிய மண்டலத்தில் அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள், அவர்கள் அந்த வட்டாரத்தில் இருந்து அடர்காடுகளைச் சீர்திருத்தியது, கரிசல் நிலத்தைப் பண்படுத்தி வேளாண்மைக்கு உகந்ததாகச் செய்தது, காட்டு விலங்குகளை வசப்படுத்திப் பயன்படுத்தும் விவசாயிகளாக மாறியது, சமூகத்தில் தலைமை ஏற்றது ஆகிய விவரங்களைத் தெலுங்கு மற்றும் தமிழ் வட்டார மொழிகள் கலந்து “கோபல்ல கிராமம்” நாவலை எழுதியிருக்கிறார். அந்த நாவல் தமிழ் இலக்கிய உலகை ஒரு குலுக்கு குலுக்கியிருக்கிறது.

கி.ரா - நாராயணரெட்டி
கி.ரா - நாராயணரெட்டி

கி.ராஜநாராயணனின் மொழிலேயே சொல்ல வேண்டுமானால் “கோபல்ல கிராமம்” நாவலுக்கு உடம்பு தமிழ் என்றானால், ஆத்மா தெலுங்குதான் என்று சொல்ல வேண்டும். இந்தத் தமிழ் நாவலைத் தெலுங்குமொழி ஆர்வலர் நந்த்யால நாராயண ரெட்டி “கோபல்லெ” என்ற தலைப்புடன் தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாட்டு ஓசூர் மாவட்ட கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் சங்க நிறுவனர்களும், எழுத்தாளர் ரமேசும் பக்கத் துணையாக இருந்து உதவியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் நிலைநின்ற தெலுங்குக் குடும்பங்களின் பண்பாட்டையும் சம்பிரதாயங்களையும் கண்ணெதிரில் நடப்பது போன்று இந்த நாவல் விவரிக்கிறது. தெலுங்கு நாட்டில் தற்போதுள்ள தெலுங்கர்கள் மறந்துவிட்ட, தமிழ்நாட்டின் வழக்காற்றிலுள்ள தெலுங்கு வட்டாரச் சூழலை இந்த நாவல் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. தமிழில் எழுதப்பட்ட ‘கோபல்ல கிராமம்’ நாவல் முதன்முதலான வட்டார வழக்கு இலக்கியம்.
எங்கேயோ  தெற்கே தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கர்கள் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் தாய்மொழியை இன்றைக்கும் காப்பாற்றிக்கொண்டும், தெலுங்கு மாநிலத்திலுள்ள தெலுங்கர்கள் ஆங்கில, பாரசீக மொழிச் சொற்களின் தாக்கத்தினால் தற்போது புழங்க மறந்துவிட்டிருக்கும் தெலுங்கு வட்டார வழக்கை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கும் பெருமை நந்தியால நாராயண ரெட்டியைச் சாரும்.
தமிழ் மொழியிலுள்ள “கோபல்ல கிராமம்” நாவலைத் தெலுங்கில் ‘கோபல்லெ’ என்ற பெயரில் மொழிபெயர்க்க நேர்ந்தபோது, இந்தத் தெலுங்கு எழுத்தாளர்கள் குழு எதிர்கொண்ட இடர்ப்பாடுகளுக்கு அலுத்துப்போய், கண்ணீரை அடக்கிக்கொண்டு தவித்தபோது, தெலுங்கும் தமிழும் தெரிந்த நண்பர் திரு.ரமேஷ் மூலமாகத் தமிழுக்கு நிகரான தெலுங்கு வட்டார மொழிச் சொற்களை அந்த ‘கோபல்லெ’ நாவலுக்காகத் தேர்ந்தெடுத்ததாக நந்தியால நாராயணரெட்டி தமது முன்னுரையில் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டு ராஜநாராயணனுக்கும் தெலுங்கு மொழி எழுத்து தெரியாதிருந்ததனால் தமது முன்னோர்கள் எதிர்கொண்ட இடர்பாடுகளைத் தனது பாட்டி மூலமாகச் சொல்லக்கேட்டு, அதை மற்றவர்களைப்போல மறந்துவிடாமல் தனக்குப் புழக்கத்திலுள்ள தமிழ் வழக்குமொழி நடையில் அதிமனோகரமாக எழுதி முடித்திருக்க, அதே அளவு பிடிமானத்தோடும், முனைப்போடும் நாராயணரெட்டி தெலுங்கில் மொழிபெயர்த்து, பண்டைய தெலுங்கு வட்டாரவழக்கை ஆந்திரத் தெலுங்கர்களுக்குக் கிடைக்கச் செய்திருக்கிறார்.
தற்போது ஆந்திரத்திலேயே வழக்கொழிந்த சில தெலுங்குச் சொலவடைகளைத் தமிழ்நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலைகொண்ட தெலுங்கர்கள் காப்பாற்றிக்கொண்டு வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ‘கோபல்லெ’ தெலுங்கு நாவல் தெற்கு ஆந்திரத்து சமூக வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி போன்ற இலக்கியம். தமிழ்நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலைகொண்டவர்கள் தங்கள் தாய்மொழியைத் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடக்கிய நிலையில், தற்போதையத் தலைமுறையினர் தெலுங்கைத் தமிழ் உச்சரிப்பு முறையில் பேச மட்டுமே செய்வார்களேயல்லாது எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் அல்ல. ஆனால், அவர்களுக்குத் தங்கள் தாய்மொழி மீதும், பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் மீதும் மிகுந்த மரியாதை உண்டு என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.
கவிஞன் தனது உணர்வை வெளிப்படுத்தும்போது, தாய்மொழி, பிராந்தியம், இருப்பிடம் ஆகியவற்றை நினைவுபடுத்தும் வகையில் தனக்குரிய வட்டாரத்து மொழியில் வெளிட்டால்தான் அந்த எழுத்துக்குச் செறிவும் தூய்மையும் அமையும். இந்த முன்னுதாரணத்தைத் தனது வட்டாரத்திற்கு ஏற்றுக்கொண்டு இதுவரை வேறு எந்த எழுத்தாளரும் செய்யாத புதுமையான பிரயோகத்திற்கு முன்னெட்டு வைப்பதாக, தமிழ்நாட்டின் தெலுங்கு வட்டார வழக்குச் சொற்களை நந்தியால நாராயணரெட்டி நம்முன் வைக்கிறார்.
அன்றையக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நிலைகொண்ட தெலுங்கர்களின் ஆசாரங்களை, பண்பாடுகளை, அனுபவங்களை இந்த மொழிபெயர்ப்பு எழுத்தாளர் ‘கோபல்லெ’ நாவல் மூலமாக நம் கண்முன்பு கொண்டுவந்து நிறுத்துகிறார். இந்த நாவல் எதிர்காலத் தலைமுறையினருக்கு, எந்த விமர்சனப் புலனாய்வாளர்களுக்குப் பெரிதும் வழிகாட்டியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
‘கோபல்லெ’ தெலுங்கு மொழிபெயர்ப்பு நூலை வெளிப்பட்டிருக்கும் அன்பர்கள் நூற்றுக்கணக்கான வட்டார வழக்குச் சொற்களைத் தெலுங்கு வாசகர்களுக்காகத் திரட்டித் தந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் தெலுங்குச் சொலவடைகள் இன்றைக்குத் தெலுங்கு மாநிலத்திலுள்ள சொலவடைகளுக்கு மிகவும் வேறுபட்டவையாக, வித்தியாச மானவையாக இருப்பது உண்மைதான். ஆனால், இன்றையத் தெலுங்கு நாட்டில் வழக்கொழிந்த சொலவடைகளைத் தமிழ்நாட்டில் நிலைத்துவிட்ட தெலுங்கர்கள் காப்பாற்றிக்கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது.
தென் தமிழ்நாட்டில் சில லட்சக்கணக்கில் தெலுங்குக் குடும்பங்கள் இருக்கின்றன. இக்குடும்பங்களில் உள்ளவர்கள் தெலுங்குமொழியை வீட்டுக்குள் மட்டுமே பயன்படுத்த நேர்ந்தாலும், அவர்கள் தங்கள் தாய்மொழியை மறந்துவிடாமல் அதை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகக் காப்பாற்றிக்கொண்டு வருவது என்பது பெரிதும் சிறப்பான ஒன்றுதான். அங்கிருந்த பழைய தலைமுறைத் தெலுங்கர்களுக்கு தெலுங்கு படிப்பதும் எழுதுவதும் ஓரளவு புழக்கத்தில் இருந்திருந்தாலும், இப்போதையத் தலைமுறையினருக்குப் பேச்சுத் தெலுங்கில் மட்டுமே பழக்கம் இருக்கிறது. இவர்களுக்கு அரசாங்க ஊக்குவிப்பு இல்லை.
கி.ராஜநாராயணன் அவர்களுக்குத் தெலுங்கு எழுதப்படிக்கத் தெரியாது போனாலும், தெலுங்கு எழுத்து வடிவில் தன்னுடைய படைப்பு வெளிவந்தால் ‘அதுவே பெருத்த பாக்கியம்’ என்று தன்னுடைய பொக்கை வாயால் கலகலவென்று சிரிப்பாராம். அவர் தனது பேரக்குழந்தைகளுக்கு “தெலுங்கு பேசக்கூடத் தெரியாது” என்று திகைப்புடன் முணுமுணுப்பாராம். அவருடன் கொஞ்ச நேரம் தெலுங்கில் பேசினால் போதும், அவ்வளவு பெருமைக்குரிய பெரியவர் பச்சிளங் குழந்தையாக மாறிவிடுவாரென்று நந்தியால நாரயணரெட்டி அந்த ‘கோபல்லெ’ நாவலின் முன்னுரையில் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் நிலைகொண்ட தெலுங்கர்களின் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை, தங்கள் தாய்மொழி மீதும் தாய்நாட்டின் மீதும் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடு, பிரேமை, நல்லிணக்கம் ஆகியவற்றை நம்மெதிரில் கொண்டுவந்த கி.ரா. என்ற கி.ராஜநாராயணனுக்கு தெலுங்கு இனம் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
தெலுங்கு மூலம் : கொஸராஜு வெங்கடேஸ்வரராவ்
தமிழில் : ருத்ர. துளசிதாஸ்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)