தலைப்பு : இந்திய ஓவியங்கள்
ஆசிரியர் : ஸுபா
பதிப்பகம் : பன்மொழி பதிப்பகம்
விலை : 80

பதிவு செய்த நாள்

09 செப் 2017
09:01

     டிவிழுந்து தீப்பற்றிய மரத்திலிருந்து நெருப்பைக் கண்டுணர்ந்த ஆதிமனிதன் முதன்முதலில் பயந்துபோனாலும், பின்வந்த நாட்களில் அதனைப் பக்குவப்படுத்தக் கற்றுக்கொண்டான். அதன் வெளிச்சத்தைக் கொண்டு தன் குகைகளை ஒளிர்வித்தான். எரிதழலின் வெம்மையில் தான் வேட்டையாடின இறைச்சித் துண்டங்களை வாட்டி பசிதீர்த்துக் கொண்டான். குகைச் சுவர்களில் விழுந்த சக மனிதனின் நிழல்கள் அவனை அச்சமுறச் செய்தன. அதன் மாயையைப் புரிந்துகொண்டவன், எரிந்த கரித்துண்டுகளைக் கொண்டு முதன்முதலாகக் கோடுகள் வரைந்தான். முதலில் நேர்குறுக்காக, பிறகு வளைகோடுகளாக, உருவங்களாக, சம்பவங்களாக அவன் கோடுகள் நிலைகொள்ளாமல் நீண்டுகொண்டே போயின. குகைவாழ் மனிதனே முதன்முதலாகத் தன் கண்ணில் கண்ட காட்சிகளைக் கலைவடிவங்களாக மாற்றியவன். அந்தவகையில் தொன்றுதொட்டு வாழும் மனித இனத்தின், ஆதிக்கலைகளில் முதன்மையானது ஓவியங்கள். இன்றைக்கும் ஆதிமனித இனத்தின் ஓவியக்கூறுகள்  அவன் விரல் விட்டு அகலவே இல்லை.

மனித மனத்தின் ஆழ்ந்த சிந்தனையில் முதிர்ந்த எண்ணங்கள் இலக்கியமாக உருவாயின. தனக்கு நேரும் இன்ப துன்பங்களின் அதிர்வை இசையாக வடித்தான். தன் மனத்தோற்றங்களில் உறைந்துபோன உருவெளித் தோற்றங்களைச் சிற்பமாகப் படைத்தான். பேச்சுக்கும் ஒலிக்கும் பிறகு உண்டான இந்த மூன்று கூறுகளின் மூத்த வித்தாக வரைகலையே உள்ளது என நாம் கருதவேண்டியுள்ளது. இலக்கியம், இசை, சிற்பம், வாழ்வியலோடு சேர்த்து, ஓவியக்கலையும் சமகாலத்தின் அத்தனைத் தாக்கங்களையும் ஏற்று, பெரும் மாற்றங்களை அடைந்து தன் பரிமாண வளர்ச்சியில் நிலைத்து நிற்கிறது.

இந்த பிரபஞ்ச விஸ்தாரத்தில், இறைசக்தியோடு போட்டிபோட்டுக்கொண்டு மனிதன் படைத்த அத்தனை படைப்புகளும் ஒன்றுக்கொன்று மிஞ்சி வளர்ந்தாலும், மனித இனத்தின் உள்ளப்பாங்கைச் செம்மைப்படுத்திய இத்தகைய பன்முகம்கொண்ட கலைப் பெருமை என்பது பாரத நாட்டுக்கு மட்டுமே உரியது. இந்திய மக்களின் சித்திரத் திறனில் உருவான இந்திய ஓவியக் கலையின் வளர்ச்சி அபரிமிதமானது.  சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தத்தமது மகோன்னதத்தை இந்த நிலத்திலே எய்தியது. 

நாட்டியப் பெண் - தஞ்சாவூர்
நாட்டியப் பெண் - தஞ்சாவூர்

வரலாற்றுப் போக்கில் பல மன்னர்கள் தங்களது ஆட்சிகாலத்தில் ஒருவருக்கொருவர் போர்புரிந்து மக்களை வாட்டிவதைத்து, துன்பத்தைக் கொடுத்திருப்பினும், அறிந்தோ அறியாமலோ அவர்கள் பல கலை வடிவங்களையும் சேர்த்தே   வளர்த்தெடுத்திருக்கிறார்கள் என்பதைக் காலக்கட்டம் வாரியாகக் கூர்ந்து கவனிக்க முடியும்.

கலைகள் என்பவை நமது உள்ளங்களைச் செம்மைப் படுத்தும்போது அது நீங்காத அமரத்துவத்தை எய்துகின்றன. ஒரு ஓவியத்தில் பல உருவங்களைப் புகுத்தும்போது அவற்றின் நீள, அகல, கன பரிமாணங்களின் இயல்பை, ஒன்றுக்கொன்று பொருத்தமான அளவில் வரைவது என்பது  உணர்வுகளின் பிரதிபலிப்பு. ஒரு சந்தர்ப்பத்தை அதன் நயம் சார்ந்து பிறரிடம் எடுத்துரைக்க வரைகலையே மூலாதாரமாக நிற்கும் போது அவைபற்றின தேடல்களுக்கான நூல்களோ நம்மிடையே வெகு சொற்பம். அந்த வகையில் பல்லவர்காலம் தொடங்கி, நவீன இந்திய பாணி ஓவியங்கள் வரை மிகமுக்கியமான ஓவியங்களையும், அதன் பண்பாட்டு, கலாச்சாரக் கூறுகளையும் முன்வைத்து ஸூபா எழுதியுள்ள ‘இந்திய ஓவியங்கள்’ நூல் பெரிதும் கவனத்திற்குரியது.

- கார்த்திக் புகழேந்தி 

தொடர்புக்கு : 044-24959778
e-mail : pannmozhi@hotmail.com   

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)