தலைப்பு : காட்டின் குரல்
ஆசிரியர் : சு. பாரதிதாசன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 40/-

பதிவு செய்த நாள்

12 செப் 2017
12:44

ன்றைய இந்திய நகரங்களிலும், காடுகளிலும் உள்ள பல்வகை உயிரினங்களும் ஏதோ ஒருவகையில் ஆபத்துகளை எதிர்நோக்கி நிற்கின்றன. காடுகள் அழிவதால் புலிகள் மற்றும் யானையின் அழிவு, மூடநம்பிக்கைகளால் பாம்பு, தேவாங்கு, பச்சோந்தி போன்ற சிற்றுயிர்களின் அழிவு என அழிவின் விளிம்பில் இருக்கும் பல காட்டுயிர்களைச் சுட்டிக்காட்டலாம். 
‘கனிமச்சுரங்கம்’ என்ற பெயரில் காடுகளும், ‘மணல் குவாரிகள்’ என்ற பெயரில் நீர்நிலைகளும் மாயமாகி வரும் காலத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தச் செயற்பாடுகள் அனைத்தும் காட்டுயிர்களுக்கு மட்டுமல்ல மனிதர்களான நமக்கும் மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து நிற்கின்றன. இந்தச் சிக்கலில் முதல் பழியாவது ஏழை எளிய மக்களே. 
இந்நிலையில், காட்டுயிர்களுக்கும் மக்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எளிய மொழியில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில், ‘காட்டின் குரல்’ நூலினை எழுதியிருக்கும் சு.பாரதிதாசன் பாராட்டுக்குரியவர்.  பல்வேறு காலக்கட்டங்களில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, ‘காட்டின் குரல்’. மூடநம்பிக்கைகள் அதிகம் படிந்துள்ள உயிரினங்களில் பாம்புகளுக்கு அடுத்ததாக தேவாங்கைக் குறிப்பிடலாம். ‘பலியாகும் தேவாங்குகள்’ கட்டுரையில் அமைதியான சுபாவம் கொண்ட தேவாங்குகள் பற்றிய அறிவியல் உ ண்மைகளை முன்வைக்கிறார். காட்டுயிர் மீதான அறிவின்மையே மூடநம்பிக்கைகளாக வெளிப்படுகின்றன என்பதை அறிவியற்பூர்வமான தகவல்களால் நிறுவுகிறார். 
 ‘வலசைப் பறவைகளுடன் சிலநாள்கள்’கட்டுரையில், பறவைகளுக்கு வளையமிடுதலைப் பற்றிய பல அறிவியல் தகவல்களைக் கூறுவதுடன், அவரது காட்டு உலா அனுபவத்தையும் இணைத்துள்ளது பசுமை எழுத்தில் புதிய வகையாக அமைந்துள்ளது. வெளிமானின் மற்றொரு பெயர் ‘மரைமா’ என்பதும், மரைகள் நிறைந்த திருமறைக்காடு வேதாரண்யம் எனப் பெயர் மாறியதற்கான காரணத்தையும் சிறப்பாக பதிவுசெய்திருக்கிறார். 
காடுகள், காட்டுயிர்களின் நடத்தையியல், அவை சந்திக்கும் பாதிப்புகள், தனக்குத் நேர்ந்த அனுபவங்களை இன்னும் விரிவாக இந்தக் கட்டுரைகளில் பதிவு செய்வதற்கு வாய்புகள் பாரதிதாசனுக்கு இருப்பதாகவே தோன்றியது, இருப்பினும் அவர் எழுத்து ஒரு புதுவகையான முயற்சி. அதற்கு எடுத்துக்காட்டாக,‘சோலை மந்தி’ (சிங்கவால் குரங்கு), பாறு (பிணந்தின்னிக் கழுகு), பஞ்சல் ஆமை (பங்குனி ஆமை), என்பதுபோன்ற அவர் பயன்படுத்தும் நம் மரபுசார்ந்த பெயர்களைச் சுட்டலாம். விரிவும் ஆழமும் கூடி வந்திருக்கவேண்டிய நல்ல புத்தகம் காட்டின் குரல். 

ஏ.சண்முகானந்தம்
ஏ.சண்முகானந்தம்

-ஏ.சண்முகானந்தம் 
ஆசிரியர், காடு இதழ். 
நன்றி: புத்தகம் பேசுகிறது இதழ்

 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)