தலைப்பு : தோட்டக்காட்டீ
ஆசிரியர் : இரா.வினோத்
பதிப்பகம் : அறம் பதிப்பகம்
விலை : 80/-

பதிவு செய்த நாள்

14 செப் 2017
17:48

 லங்கைத் தீவின்  மலையகத்து மக்களின் பெரும்பாடுகளையும், இடர்களையும், ரணங்களையும்  தாங்கிய குரலாக ஒலிக்கிறது தோட்டக்காட்டீ. ரத்தம், தசை, உயிர் அனைத்தையும் தேயிலைக்காடுகளின் செழிப்புக்கு இழந்துவிட்ட மக்களின் புலம்பெயர்வுத் துயரம்  1823ல் தொடங்கியது. 

தென் தமிழகத்தில் வறுமையில் வாடின மக்களை “மாசியும் தேங்காயும் தேயிலைத் தோட்டத்தில் விளையுமென” ஏமாற்ற, கங்காணிகள் கைகாட்டிய வழித்தடத்தில்  நடந்து நடந்து உயிர் தொலைத்த மக்கள் ஒருபுறம். காட்டு விலங்குகளுக்குப் பலியானதுபோக சொச்சமான மக்களை அடக்குமுறைகளும் அட்டைப் பூச்சிகளும் கொன்றது இன்னொருபக்கம். காலராவும் மலேரியாவும் கடித்துக் குதறினதில் எச்சமானவர்களின் தோட்டத்துப் பாடுகளையும், அன்றாட வாழ்வின் கோரப்பங்கங்களையும் களம்கண்டு பதிந்திருக்கிரார் இரா.வினோத்.

வரிக்கு வரி பரதேசம் புகுந்த மக்களின் கூலித்துயரத்தை எடுத்து இயம்புகிறது இவரது கவிதைகள். “சுடுநீரில் காப்பியைப் பிழிந்தால் வழிவதெல்லாம் ரத்தம்” என்ற சொற்கள் மனத்தில் வலியை விதைத்துவிட்டுச் செல்கின்றன. பாளம் பாளமாய் வெடித்து தழும்பேறிப் போன தோட்டக்காட்டீயின் சுண்டிப்போன விரல்களுக்கு காலம்தான் களிம்பு பூசவேண்டும்.

முழுப் புத்தகத்தையும் வாசித்துமுடிக்கும் கனத்தில்  “கவ்வாத்து” செய்யப்பட்டது தேயிலைச் செடிப்போல மனிதத் தொண்டைகளில் ஈரம் வறண்டு போய்விடுகிறது. ‘போய்வா மகனே’ என்று புளிச்சோற்று மூட்டைகட்டி அனுப்பி வைத்த தாயகத்தைத் தலைமன்னார் கரையில் நின்று வெறித்து வெறித்துப் பார்த்த மனிதர்களின் வாழ்வை ஆவணமாகப் பேசுகிறது தோட்டக்காட்டீ.
“தோட்டக்காட்டீ”
ஆசிரியர் : இரா.வினோத்,
வெளியீடு: அறம் பதிப்பகம்.பெங்களூர்.
விலை: 80/-

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)