தலைப்பு : உலக வானொலிகள்
ஆசிரியர் : முனைவர் தங்க.ஜெய்சக்திவேல்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை : 230/-

பதிவு செய்த நாள்

20 செப் 2017
13:33

 வானொலி என்ற ஊடகம் இப்போது பயன்பாட்டில் இல்லை எனப் பலர் நினைக்கிறார்கள். தொலைக்காட்சி மக்கள் மத்தியில் பரவுவதற்கு முன்னால் வானொலி ஒரு இன்றியமையாத சாதனமாக இருந்து வந்தது.
முன்பெல்லாம் எல்லா நகரங்களிலும் பல கடைகளில் வானொலிப் பெட்டிகள் வாங்கக் கூடியதாக இருக்கும். வானொலிப் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள வசதிகளுக்கு ஏற்ப விலை இருக்கும். சாதாரண நடுத்தர குடும்பங்கள் கூட வாங்கக்கூடிய குறைந்த விலையில் வானொலிப் பெட்டிகள் கிடைத்தன.
வானொலி ஒலிபரப்பு என்றால் இப்போதுள்ள இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு பண்பலை நிலையங்கள் பற்றியே தெரியும். இவற்றைச் செல் ஃபோன்களில் கூடக் கேட்கக் கூடியதாக இருப்பதால் இந்தப் பண்பலை ஒலிபரப்புகள் பிரபலமாக உள்ளன.
நடுத்தர வயதினரிடையே வானொலி ஒலிபரப்புகள் பற்றிய நினைவு பசுமையாகவே இருக்கிறது.  சென்னை வானொலி, திருச்சி வானொலி, இலங்கை வானொலி என இன்றைக்கும் பல அனுபவங்களைச் சொல்வார்கள்.
இந்த ஒலிபரப்புகள் எல்லாம் எங்கே போய்விட்டன?
எங்கும் போகவில்லை. இப்போதும் வானொலி நிலையங்கள் இயங்கிக் கொண்டுதானிருக்கின்றன. வானொலிப் பெட்டிகளும் விற்பனைக்கு உள்ளன. ஆனால் அவற்றைத் தேடுவோர் அரிதாகிவிட்டது.
தேடுவோர் அரிதாகியதற்கு மக்களை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமில்லை. மக்களுக்கு, அதுவும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு வானொலியின் பண்புகளை, அதன் சிறப்புகளை எடுத்துக்கூறும் நூல்கள், வெளியீடுகள் இல்லை.
இந்தக் குறையைப் போக்கும் வகையில் ஒரு அருமையான நூல் வெளியாகியுள்ளது.  முனைவர் தங்க. ஜெய்சக்திவேல் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள “உலக வானொலிகள்” என்ற நூல் வானொலி ஒலிபரப்புகள் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.
“உன்னதமான உலக வானொலிகளை இன்றைய போக்கில் மாற்றுப் பார்வையில் பார்க்க வேண்டும். அதை வலியுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது இந்நூல்.”  சென்னைப்  பல்கலைக் கழகத்தின் இதழியல், தொடர்புயல் துறைப் பேராசிரியர் கோபாலன் இரவீந்திரன் அவர்கள் நூலின் அணிந்துரையில் கூறியிருப்பதே நூலின் சிறப்பை உணர்த்தி நிற்கிறது.
வானொலி கேட்பதால் என்ன பயன்? என்று கேட்பவர்களுக்கு, வாழ்வில் உயரலாம் என்பதே நூலாசிரியரின் பதிலாக இருக்கிறது. அது எப்படி என்பதை அவரே சொல்லியுள்ளார். ‘வானொலி கேட்பதா, அதுதான் சிற்றுண்டி உணவகங்கள், ஆட்டோக்கள் மற்றும் இது போன்ற இடங்களில் கேட்டுக்கொண்டிருக்கிறோமே’ என்று சொல்கிறீர்களா! நீங்கள் கேட்பது பாடல்களையும் விரைவுத் தொடர்வண்டி போல் அர்த்தமற்ற அடுக்கடுக்கான சொற்றொடர்களையும் இடையில் விரவும் விளம்பரங்களையும் தான். வானொலி என்ற சாதனத்தினூடாக அவற்றைக் கேட்கிறீர்களேயன்றி அவை வானொலி ஒலிபரப்பின் அடையாளங்களாகா. வானொலி ஒலிபரப்புகளை எவ்வாறு கேட்க வேண்டும், அவற்றிலிருந்து எப்படிப் பயனடைய வேண்டும் என்பதையெல்லாம் நூலில் ஆசிரியர் விபரமாக எழுதியிருக்கிறார்.
நூலின் பிரதான பகுதியில் உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கும் வானொலி நிலையங்கள் பற்றிய விரிவான தகவல் தரப்பட்டுள்ளது. ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி 231 வானொலி நிலையங்கள் அடங்கியுள்ளன.
வானொலி நிலையங்கள் பற்றிய தகவலோடு பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு தகவல்கள் சேர்க்கப்பட்டிருப்பது நூலைப் படிப்பவரை இன்னொரு மேல் தளத்துக்கு அழைத்துச் செல்வதாக அமைந்துள்ளது. அந்த அந்த வானொலி நிலையங்கள் நேயர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்துள்ளன என்ற தகவலோடு நிலையத்தோடு தொடர்பு கொள்வதற்கான முகவரிகளும் தரப்பட்டுள்ளன.
தமிழ் மொழியில் தமிழ் மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் சிறப்பு அம்சமாக உலகில் தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் உலக வானொலி நிலையங்கள் பற்றி தனிப் பகுதியாக விபரம் தரப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் இயங்கும் உள்ளூர் தமிழ் வானொலிகள், உலகத்தமிழ் சிற்றலை வானொலிகளின் பட்டியல், வானொலி தொடர்பான முக்கிய இணையதளங்கள் என, தகவல் களஞ்சியமாகவே இந்நூல் திகழ்கின்றது.
நூலாசிரியர் முனைவர் தங்க. ஜெய்சக்திவேல் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வானொலித் துறையில் மேற்கொண்ட பல்வேறு செயற்பாடுகளின் அனுபவத்தின் பயனாக வானொலி கேட்பவர் மனதில் என்னென்ன கேள்விகள் எழும் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து, அவற்றுக்கு நூலில் விடையளித்திருக்கிறார். மொத்தத்தில் வானொலி ஒலிபரப்புகள் பற்றிய மிக விரிவான தகவல்களைத் தாங்கி வந்திருக்கும் இந்த நூல்.
- உ.கா.சர்மா 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)