பதிவு செய்த நாள்

20 செப் 2017
13:38

 யாதும் ஊரே, யாவரும் கேளிர். புறநானூற்றில் கணியன்பூங்குன்றனார் எழுதிய சொற்றொடர் இது. இதன் பொருள், '(உலகில்) எல்லாமே நம்முடைய ஊர்தான். (உலக மக்கள்) எல்லாரும் நம் உறவினர்கள்தான்.'
கணியன்பூங்குன்றனார், இதை ஒருமுறைதான் எழுதினார். ஆனால், அதன் பிறகு எண்ணற்ற கட்டுரைகள், மேடைப்பேச்சுகளில் இந்தச் சொற்றொடர் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அதே கவிதையின் பிற வரிகளைக் காட்டிலும், இந்த வரி நிறையப் பேருக்குத் தெரிந்துள்ளது.
இதுபோன்ற நயமான பயன்பாடுகளைப் பல கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள், சொற்பொழிவுகளில் கேட்கிறோம். அவற்றை மேற்கோளாகப் பயன்படுத்துகிறோம். 'யாதும்' என்ற சொல்லிலோ, 'ஊரே' என்ற சொல்லிலோ புதுமையில்லை. அவை இணைந்து 'யாதும் ஊரே' என்று பயன்படுத்தப்படும்போது, அங்கே ஒரு நயம் பிறக்கிறது. இதனை அறிஞர்கள் 'தொடராட்சி' என்று வழங்குகிறார்கள்.
தொடர் + ஆட்சி = தொடராட்சி. அதாவது, சொற்களை ஒரு குறிப்பிட்ட முறையில் அமைத்து ஆளுதல். அதன்மூலம் அந்தப் படைப்புக்குத் தனியழகை உருவாக்குதல். பொருளை எளிதில் புரியவைத்தல். மேற்கண்ட வாக்கியத்திலேயே, 'தனியழகு' என்பது ஓர் எளிய தொடராட்சிதான். தனித்துவமான அழகு, வேறெங்கும் காண இயலாத சிறப்பு வாய்ந்தது என்பதைப் புரியவைக்கிறது.
தொடராட்சியின் சிறப்பே இதுதான். சில சொற்களின் மூலம் பல விஷயங்களைப் புரியவைத்துவிடலாம். வாசகர்கள் மனத்தில் 'நமக்கு ஏற்கெனவே பழகிய ஒன்றைத்தான் வாசிக்கிறோம்' என்ற உணர்வை உருவாக்கி அவர்களை ஈர்க்கலாம்.
நல்ல தொடராட்சிகளை அடையாளம் காண்பது எப்படி?
அதற்கு நாம் நிறைய வாசிக்கவேண்டும். பல எழுத்தாளர்களுடைய எழுத்துநடையைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். அவர்கள் எந்தச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள், என்னமாதிரியாக அவற்றை ஒன்றுசேர்க்கிறார்கள், இந்த இடத்தில் அவர்கள் ஏன் வேறொரு சொல்லைப் பயன்படுத்தவில்லை என்று சிந்திக்கவேண்டும். சிறப்பான தொடராட்சிகளை நினைவில் வைத்துக்கொண்டு பொருத்தமான இடத்தில் பயன்படுத்தவேண்டும்.எழுத்துகளுடன், தமிழில் நல்ல புலமை கொண்டோரின் பேச்சையும் கூர்ந்து கவனிக்கலாம். கிராமத்து மனிதர்களின் பேச்சில்கூடப் பல நயமான தொடராட்சிகள் கிடைக்கும். ஆனால் ஒன்று, நாம் பயன்படுத்தும் தொடராட்சி வாசகர்களுக்குப் புரிகிறதா என்பதைச் சிந்திக்கவேண்டும். ஒருவேளை புரியாவிட்டால், மொத்தப் படைப்பும் புரியாமல் போய்விடக்கூடும்.
எடுத்துக்காட்டாக, 'களிநடம்' என்பது ஓர் அழகிய தொடராட்சி. ஆனால், 'களி' என்றால் களித்தல், மகிழ்தல், 'நடம்' என்றால் நடனம் என்கிற பொருள் வாசகர்களுக்குப் புரியாவிட்டால், அது குழப்பத்தையே விளைவிக்கும். ஆகவே, வாசிப்போரை மனத்தில் கொண்டே தொடராட்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேவைப்பட்டால், உரிய அடிக்குறிப்புகளைத் தந்து விளக்கலாம். தொடராட்சிகள் உங்கள் எழுத்துநடைக்கு அழகும் வேகமும் சேர்ப்பவை. அவற்றை அடையாளங்கண்டு பயன்படுத்தத் தொடங்குங்கள்.

- என். சொக்கன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)