பதிவு செய்த நாள்

22 செப் 2017
12:05
 மாறா காதலின் மனம்  - மான்டேஜ் மனசு

  மது வாழ்க்கையே சினிமாவும் சினிமா நிமித்தமுமாகத்தான் இருக்கிறது. தமிழ் நிலத்தின் வாழ்வியலில் சினிமாவும் பின்னிப்பிணைந்து இருக்கிறது. திரையின் கதைக்களங்கள் நிஜ வாழ்வின் பாதிப்பாகவோ அல்லது அவை நிஜ வாழ்வின் மாந்தர்களை பாதிப்பவையாகவோ இருக்கின்றன. மொத்தத்தில் திரையின் மாந்தர்களும் அவர்களது கதைகளும் ஏதோ ஒரு வகையில் நம்மிடையே தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன. அப்படியான திரைப்படங்கள் குறித்தும் அதன் அனுபவம் குறித்தும் திரைக்கதை குறித்தும் இப்போது பெரும்பாலானோர் எழுதுகின்றனர். ஆனால் அந்த எழுத்துகளிலெல்லாம் இருந்து முற்றிலும் வித்தியாசப்படுகிறது மான்டேஜ் மனசில் இடம்பெற்றிருக்கும் எழுத்துகள்.
மான்டேஜ் மனசு முழுதும் அன்பையும் காதலையும் மட்டுமே மாறி மாறிச் சொல்கிறது. அதன் உள்ளடக்கமே சினிமாவைப் போன்று மிகவும் ரசனையானது. ஏற்கெனவே வெளியான படங்களைக் குறித்தோ அல்லது தற்போது வெளியாகும் படங்களைக் குறித்தோ திரை அனுபவங்கள் மட்டுமே எழுதப்படும் ஆன்லைன் உலகத்தில் நிஜ அனுபவங்களையும் சேர்த்து மான்டேஜ் மனசாக்கியுள்ளார் ஆசிரியர் க.நாகப்பன்.
சில படங்களின் கதையே நிஜ வாழ்விற்கு நெருக்கமாக வாழக் கூடியதாக இருக்கும். அந்தக் கதையின் மாந்தர்களுடனான அனுபவம் மான்டேஜ் காட்சிகள் போல மான்டேஜ் மெமரிகளாக நினைவுகளாக வந்து போகும். அந்த நினைவுகளை ஒவ்வொரு தொடரின் மூலமும் மீட்டு நம் கைகளில் கொடுக்கிறது மான்டேஜ் மனசு. நிறைவேறிய காதல், நிறைவேறாத காதல், மாற்றுக் காதல், காமத்தின் காதல் என பல்வேறு காதல் சார்ந்த வாழ்வியலையும் அதன் திரைக்களங்களையும் நமக்குத் தருகிறது.
நம்மிடையே இவ்வளவு காதல்கள் இருக்கின்றனவா என்ற வியப்பைத் தருவதும் மான்டேஜ் மனசின் தனித்துவம்தான். நம் ஊரில் சுற்றித் திரிந்த வேணி அக்காக்களையும் சோழன் அண்ணன்களையும் அவர்களுக்குள்ளேயே அடைகாக்கப்பட்ட காதலையும் மாறா இயல்புடன் சொல்கிறது.
திரைப்படங்கள் சார்ந்தும் திரைக்கதை சார்ந்தும் திரைத்துறையின் தொழில்நுட்பம் சார்ந்தும் மட்டுமே திரைப் புத்தகங்களை அணுகியவர்களுக்கு மான்டேஜ் மனசு திரையின் மற்றொரு வாழ்வியல் அனுபவத்தை தரும். திரையின் கதைகளை நிஜத்துடனும் நிஜத்தின் கதைகளை திரையுடனும் தொடர்புபடுத்தி முற்றிலும் புதிய பரிணாமத்தைத் தருகிறது மான்டேஜ் மனசு.

க.நாகப்பன்
க.நாகப்பன்


ஆசிரியருக்கு மட்டும் எப்படி இவ்வளவு அனுபவங்கள் வாய்த்தது என்ற பொறாமை தொடரை முழுக்க வாசித்து முடித்தவுடன் கண்டிப்பாக எழும். ஒவ்வொரு திரைப்படங்களின் வாயிலாக ஒவ்வொரு நிஜ வாழ்வின் அனுபவங்களை விவரிக்கிறார். நிஜ மாந்தர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
இப்படி மான்டேஜ் மனசின் அத்தனை வார்த்தைகளும் திரை அனுபவத்திற்கு பின்னால் நமக்குள் எழும் நினைவுகளைப் போல ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டே இருக்கும். பேருந்தின் சன்னலோரத்தில் அமர்ந்து வாழ்க்கையின் எதிர்காலத்தை திரைப்படங்களைப் போல கணித்து விளையாடும் மனசின் உள்ளே இருக்கும் ஆதி காதலையும் அன்பின் ஊற்றையும் மான்டேஜ் நினைவுகளாக மீட்டெடுக்கிற்து மான்டேஜ் மனசு நூல்.-சா.ஜெ.முகில் தங்கம்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)