தலைப்பு : சேற்றில் மனிதர்கள்
ஆசிரியர் : ராஜம் கிருஷ்ணன்
பதிப்பகம் : தாகம்

பதிவு செய்த நாள்

24 செப் 2017
18:18

வேளாண் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் எந்தெந்த வகைகளில் நிலவுடமை வர்க்கத்தினரால் சுரண்டப்படுகிறார்கள் என்பதைக் கூறும் நாவல் ராஜன் கிருஷ்ணனின்,‘சேற்றில் மனிதர்கள்’.தஞ்சை மாவட்ட பின்னணியில் எழுதப்பட்டுள்ள இந்நாவலில்,  அடித்தட்டு விவசாயக் கூலித் தொழிலாளர்களின் சிரமமான வாழ்க்கையையும், இறந்துபோனால் அவர்களை எடுத்துப்போய் அடக்கம்பண்ண இடுகாட்டுக்குச் செல்லும் பாதைகூட மேல்தட்டு மக்களால் மறுக்கப்படும் நிலையையும் கதாப்பாத்திரங்களின் மனவோட்டத்தின் வழியாக உணர்த்துகிறார் ராஜம் கிருஷ்ணன்.

ஊரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக தாழ்த்தப்பட்ட மக்களை முதலில் அவர்கள் குடியிருந்த இடத்தைவிட்டுக் கிளம்பி வேறொரு இடத்திற்கு இடம்பெயரச் செய்கின்றனர் நிலவுடமையாளர்கள். அவர்களை அங்கிருந்தும் வெளியேற்ற முயலும் ஊர் பெரியமனிதர்களான விருத்தாச்சலம் பிள்ளையும், பிறரும், ‘என்ன பெரிய குடிசை. ஆளுக்கு அம்பது ரூபா வேணாலும் தந்திடறம். குடிசைங்களை அப்புறப்படுத்தச் சொல்லு, வீணா ரசாபாசம் வச்சுக்காதீங்க’ என்று விரட்டுகின்றனர். ‘சிறிது கால அவகாசம் கொடுங்கள்’ என்று கெஞ்சியபோதும், கோயில் திருவிழாவைக் காரணம்காட்டி குடிசைகளைப் பிரித்து எறிந்துவிடுகின்றனர். 

நிம்மதியாக படுக்க, உறங்க, உட்கார்ந்து பசியாற அடிநிலம் சொந்தமில்லை. உரிமையில்லை என்று   உடமை வர்க்கத்தினரின் உரைக்கும்போது அவர்களின் சுயநல மனநிலையையும், ஆதரவற்ற பாமர மக்களின் அவல நிலையினையும் மிகத்தெளிவாக  கடத்துகிறார் ஆசிரியர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் சிக்கல்களைத் தலைவிதி என்று அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை; பழைய மனிதர்கள் அவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள். புதிய சிந்தனைகளின் தாக்கம் பெற்ற சமூகத்தில் வாழும் இளைய தலைமுறை இதனை எதிர்த்துக் கேள்வி கேட்கிறது. எழுச்சியுறுகிறது. குடிசைகள் பிரிக்கப்பட்ட பின்னர் அனைவரும் கலங்கி நிற்க, குப்பன் சாம்பாரின் மகன் வடிவு, கிளர்ச்சியில் ஈடுபடுகிறாம். “வாழுறவங்க வூட்டப் பிரிச்சிப்போட்டு சாமி உங்களைக் கும்பிடச் சொல்லிச்சா? அந்த சாமிக்கு கண்ணில்ல?” என்று வடிவு கேட்கும் கேள்வி சுயநலம் பிடித்த கூட்டத்திற்கெதிரான, தங்களை சாதிய விலங்குகளால் பிணைத்து வைத்திருக்கும் சமூக, சமயச் சட்டதிட்டங்களுக்கு எதிரான கேள்வி என்று காட்டுகின்றார் ராஜம் கிருஷ்ணன்.\

விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகள் முறையான கல்வி, வேலைவாய்ப்புகள் பெறுவதில்கூடப் பல இடையூறுகள் ஏற்படுவதையும், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற அரசு ஆணை தெளிவாக இருந்தாலுங்கூட நடைமுறையில் உள்ள சிக்கல்களால் அந்த வரன்முறை சரியாக பின்பற்றப்படவில்லை என்பதை நாவல் பல இடங்களில் குறிப்பால் பேசுகின்றன. உதாரணமாக,‘சேற்றில் மனிதர்கள்’ நாவலில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக இருக்கும் சண்முகத்தின் மகள் காந்திமதி விரும்பிய எலக்ட்ரானிக் படிப்பில் சேர அவளால் முடிவதில்லை. சட்டப்படி இடம்தரவேண்டிய நிலை காணப்பட்டாலும், நடமுறையில் 2ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

 

தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்க்க இயலாமல் போனதால் காந்திமதி விரக்தியடைந்து யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். இதனால் அவள் வாழ்வு சிதைகிறது. பின்னர், பொதுவாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதால் தன் சிதைந்த வாழ்வைச் சீர்செய்துகொள்கிறாள்.

 

விடுதலைக்குப் பிந்தய காலக்கட்டங்களில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, உழு தொழிலாளர்களின் நிலை சற்று சீர்திருந்திக் காணப்பட்டாலும், அடிப்படையில் துன்பங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன என்பதை நாவல் வழியாக அன்றே பேடியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். பல்வேறு சீர்திருத்தக் கருத்துகளின் காரணமாக விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன்னர் உழு தொழிலாளர்கள் நிலை மிகவும் இரங்கத்தக்கதாக இருந்ததையும் காட்டுகிறார்.

 

வயலில் நடவு, களையெடுப்பு பணிபுரியும் பெண்கள் வெற்றிலை போடக்கூடாது, அதைமீறி அவர்கள் வெற்றிலை போட்டுக்கொண்டால் காரியக்காரன் சீலையைத் தூக்கச் சொல்லி வெற்றுக் காலில் அடிப்பதும், உழுபவர் வெற்றிலை போட்டால் திருக்கைவால் சாட்டையினால் அடிப்பது சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருந்தன.வயல்களில் அறுவடை நடைபெறும் நேரம் சிதறிகிடக்கும் நெல்மணிகளைப் பொறுக்கிச் சேகரித்து உண்ணும் நிலை தொழிலாளர்களிடம் காணப்பட்டது. அப்படி அவர்கள் பொறுக்குவதை உடைமையாளர் பார்த்துவிட்டால் திருக்கைவால் சாட்டையில் அடி கிடைக்கும். அதிலிருந்து தப்பவே முடியாது. மீறித் தப்பிக்க நினைக்கும் அமாவாசியின் மகன்  மதகின் அடியில் ஒளியும்போது பாம்பு கடித்து இறந்துவிடுகிறான். இவ்வாறு கட்டற்ற அடக்குமுறைகளால் விவசாயத் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதையும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் அவர்களாகவே, தன் நிலைமையினை உணர்ந்து, ஒன்றுபட்டு கிளர்ந்து எழுந்து, உரிமைக்கேட்டுப் போராட ஆரம்பிக்க, கற்பனை ரீதியில் தீர்வுகளைச் சுட்டிக்காட்டாமல், யதார்த்தத்துடன் ஒட்டியவகையில்  கதைமாந்தர்கள் வழியாகவே தீர்வுகளை உணர்த்திவிடுகிறார் ஆசிரியர்.

 -டாக்டர். ம. திருமலை. 
தலைவர், இலக்கியத் திறனாய்வுத்துறை, 
மதுரை காமராசர் பல்கலைக்கழகம். 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)