பதிவு செய்த நாள்

04 அக் 2017
12:46

 பின்நவீனத்துவ இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளராகக் கொண்டாடப்படுபவர் எம்.ஜி.சுரேஷ். இடதுசாரி இலக்கிய உருவாக்கம், இசங்கள், கோட்பாடுகள், எனத் தமிழ்ச் சூழலில் தவிர்க்க முடியாத மார்க்சிய ஆய்வாளரும் எழுத்தாளுருமான கோவை ஞானி போன்றவர்கள் இவருடைய படைப்புகளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.1980களின் தொடக்கத்தில், எளிய மக்களுக்கு இசங்களைப் புரிய வைக்கும் தன்மையில் எளிமையான எழுத்து நடைகளைப் பின்பற்றியவர் எம்.ஜி.சுரேஷ். சிங்கப்பூரில் உள்ள தன் மகள் வீட்டில் வசித்துவந்த எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் கடந்த செவ்வாய் அன்று மாரடைப்பால் காலமானார். அவரது நெருங்க நண்பரும் கவிஞருமான யவனிகா ஸ்ரீராம் எம்.ஜி.சுரேஷ் உடனான தனது நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்…

2005ம் ஆண்டில், திருவல்லிக்கேணி பாரதி சாலையில் உள்ள மருதா பதிப்பகத்தில் என்னுடைய ‘கடவுளின் நிறுவனம்’ புத்தக அச்சுப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது நானும் அங்கே இருந்தேன். மருதா பாலகுருவைப் பார்க்க எம்.ஜி.சுரேஷ் அச்சகத்திற்கு வந்திருந்தார். அதுதான் அவருடனான என் முதல் சந்திப்பு.

1970-80களில் வெளியான கதைகளில் பலவும் இடதுசாரிப் பார்வை கொண்டதாக இருக்கும். அப்போது இடதுசாரிகள் நிறையபேர் எழுதிக்கொண்டிருந்தார்கள், மற்றவர்களும் எழுதினார்கள். அப்படி எழுதியவர்கள் மற்றும் கு.பா.ரா., மெளனி பற்றியெல்லாம் நானும் சுரேஷும் நிறையப் பேசுவோம். பிறகு, நிறைய இடங்களில் சந்தித்துக் கொண்டோம். பார்க்கிறபோதெல்லாம் அனிச்சையாக அவரே வந்து பேசுவார். பழகுவதற்கு இனிமையான மனிதர் என்போமில்லையா சுரேஷ் அப்படி ஒருவர்.

எம்.ஜி.சுரேஷ் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்த 1970-80களிலே எழுதவும் தொடங்கியிருந்தாரென்றால் இந்நேரம் அவருடைய படைப்புகள் மிகப்பெரிய க்ளாஸிக்குகளாக மாறி இருக்கும். 1990-95களுக்குப் பிறகு சுரேஷ் எழுதத் துவங்கியபோது, அவருடைய நாவல்களில் பலவிதமான பரிசோதனை முயற்சிகளே தென்பட்டன. இடதுசாரி வாழ்க்கையில் லௌகீகத்தைத் தன் எழுத்துகளின் வழியாகப் பார்த்தவர். அதே சிந்தனைகளைக்கொண்டு தன் நாவல்களில் பகடியைக் கையாண்டார்.

1974-80களில் மேற்கத்திய சாயலில்தான் தமிழ் சிறுகதைகள் நாவல்கள் இருந்தன. கவிதைகள் மட்டுமே தமிழ்ச் சாயலைக் கொண்டிருந்தன. மேலும், ரஷ்ய, ஜெர்மானிய சிறுகதைகள், நாவல்கள் தமிழ் மொழியில் வந்தபோது, அதனுடைய சாயலை குறிப்பாக இடதுசாரித்தன்மை கொண்ட சாயலாக மாற்ற முயற்சி செய்தவர் அவர்.

சுரேஷ் எழுத்துகள் ஏன் பெரிதாகக் கொண்டாடப்படாததற்குக் காரணம், 1970-80களில் அவர் எழுதியபோது ஒரு கிளாசிக் எழுத்து நடையைப் பின்பற்றினார். ஆனால், 2000ம் வருடத்தில் இசங்கள் குறித்து எழுதும்போது எளிமையான எழுத்துநடையைப் பின்பற்றினார். நவீனகால மொழிநடை அவருடைய படைப்புகளில் எடுபடவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், பிற்போக்கு சக்திகளைக் கடுமையாக எதிர்த்தால், அவருடைய படைப்புகள் முழுவதுமே பொருள் முதல்வாத அடிப்படையில் இருந்தன.

இங்கே உள்ளொளி, தரிசன மரபு போன்ற அகவயமான தேடல் இருக்கிறதல்லவா! மனித சாரம் பற்றிப் பேசும்போது, அவை எல்லாமே பொருள் அடிப்படையிலான விஷயங்கள்தான் அகவயமான விஷயமல்ல என்று மறுத்தார். தொழிற்புரட்சி வந்தபோது உற்பத்தி உறவுகள் வந்தன. அதனால் மனிதர்கள் நவீனம் என்கிற பெயரில் தன்னுடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றிக்கொண்டார்கள், போலித்தனமான பாலியல், போலித்தனமான சம்பாத்தியம், போலித்தனமான வேதங்கள் ஆகியவற்றையெல்லாம் அபத்தம் என்று சொன்னார்.

கோட்பாட்டு இசங்கள் குறித்த நீண்ட வாசிப்பும், அவருக்கு மேற்கத்திய சித்தாந்தங்கள் குறித்த ஆழ்ந்த வாசிப்பும், அதனைத் தமிழில் எளிமையாகச் சொல்லக்கூடிய வழிமுறையும் தெரிந்தவர். அவருடைய எழுத்துகள், சராசரியாக நடுத்தர வர்க்க மதிப்பீடுகளை முன்வைத்து, எடுத்துக்காட்டாக மின்சாரம் வந்த பிறகு நம்முடைய வாழ்க்கையில் நடை உடை மாற்றங்கள், அதில் உருவான காதல், அதன் வழியாக உருவான குடும்ப வாழ்க்கை ஆகியவற்றைப் பகடி செய்தவர் எம்.ஜி.சுரேஷ்.

அவருடைய முதல் நாவலான இரண்டாவது உலகைத்தேடி; அட்லாண்டிஸ் மனிதன்; சிலந்தி, ஆகிய நாவல்கள் மிக முக்கியமானவை. உலக மார்க்சிய சிந்தனைகளோடு இணைத்து இந்திய சூழல், தமிழகச் சூழலை ஒப்பிட்டு அனுசரித்துப் பார்த்தவர் அவர். தொலைக்காட்சியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். திரைப்படங்களிலும் பணிபுரிந்தார். அழகி திரைப்படத்தின் உதவி இயக்குநர் அவர். திரைப்படத்துறையில் நிறையத் தொடர்புகள் அவருக்கு இருந்தன. எஸ்.பி.ஜனநாதன் போல ஓர் இடதுசாரியாகச் சினிமாவுக்குள் வேலை பார்த்தவர் எம்.ஜி.சுரேஷ்.

இப்படி நிறையப் புதிய முயற்சிகளைச் செய்தவர், எளிமையாகப் பழகக்கூடிய நண்பர் அவர். எனக்கே காலையில் தான் தகவல் தெரியும். அவருடைய மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.” என்றார். 

கவிஞர்.யவனிகா ஸ்ரீராம்
கவிஞர்.யவனிகா ஸ்ரீராம்

 பேச்சு :  கார்த்திக்.புகழேந்திவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)