பதிவு செய்த நாள்

31 ஜன 2017
15:29
காட்டாற்று வெள்ளத்தை நதியாக மாற்றியவர் வைரமுத்து - மரபின் மைந்தன் முத்தையா

கவிநயமான பேச்சில் தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தகள் உதிர்வதைப் பார்க்க முடிகிறது கவிஞர் மரபின் மைந்தன் முத்தையாவிடம். நமது நம்பிக்கை என்ற வெகுஜன பத்திரிகை நடத்திக் கொண்டே...தீவிர இலக்கிய வட்டத்திலும் இயங்குபவர். தன்னம்பிக்கை, இலக்கியம். ஆன்மிகம் என எதைப் பற்றி பேசினாலும் அழுத்தமான பதில் அவரிடம் இருந்து கிடைக்கிறது...இதோ அவருடன் பேசியதில் இருந்து...

பள்ளி வயதில் 'ஸ்வீட்' என்ற இதழை நடத்தியிருக்கிறீர்கள். இப்போது நம்பிக்கை என்ற மாத இதழை நடத்தி வருகிறீர்கள். இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடாக எதைச் சொல்லலாம்?

ஸ்வீட் பத்திரிகை, நான் பள்ளியில் படிக்கும்போது, எனது ஆசிரியர் நடத்தினார். அதற்கு நான் பொறுப்பாசிரியராக இருந்தேன். தற்போது நடத்தும் நம்பிக்கை ஆநானே ஆசிரியன். அப்போது மாணவ ஆசிரியனாக இருந்தேன். இப்போது ஆசிரிய மாணவனாக இருக்கிறேன். காரணம் கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளதான் வாழ்க்கை வசப்படுகிறது. மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றால் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இது பள்ளி ஆசிரியருக்கு மட்டுமல்லாமல் பத்திரிகை ஆசிரியருக்கும் பொருந்தும். சிறு வயதில் பொறுப்பாசிரியராக இருந்ததை பதவியாக கருதினேன். இப்போது பத்திரிகை ஆசிரியர் என்பதை பெரும் பொறுப்பாக கருதுகிறேன்.

உங்களது பேச்சும் எழுத்தும் தன்னம்பிக்கை சார்ந்து இருக்கிறது. முதன் முதலில் உங்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்த விஷயம்?

“ஒரு சின்ன பல்புதான். அதை தனியாக பார்க்கும்போது அதில் இருந்து வெளிச்சம் வரும் என்று நம்ப மாட்டோம்.  அதனை மின்சாரத்துடன் இணைக்கும்போது உயிர்பெற்று ஒளி வீசுவது மாதிரி, குழந்தைப் பருவத்தில் இருந்தே பழந்தமிழ் இலக்கியத்தில் பயிற்சி இருந்ததால். அதுவே எனக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. பன்பாட்டு மொழியோடு உள்ள தொடர்பு சிறு வயதிலேயே ஏற்பட்டுவிட்டால் அவன் நம்பிக்கை உடைய வடிவமாக திகழ்கிறான். மாணவனாக பள்ளிப் படிப்பில் நான் சுமார்தான். மொழி ஆர்வத்தின் காரணமாக என் மேல் இருந்த நம்பிக்கை பெரிது. என்றைக்குமே ஒரு குழந்தை செய்ய விரும்புவதை அனுமதித்தால் நம்பிக்கை உடைய குழந்தையாக திகழும்.”

உங்களுக்கும் கண்ணதசான் படைப்புகளுக்குமான தொடர்பு எப்படி உண்டானது?

“ஒன்பதாம் வகுப்பு தோல்விக்குப் பிறகு இரண்டாம் வருடம் படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது ஆகஸ்டு மாதத்தில் எனது பிறந்தநாள் பரிசாக எனது உறவினர் ஒருவர், கண்ணதாசன் கவிதைகள் ஆறாம் தொகுப்பு புத்தகதைக் கொடுத்தார். அந்தக் கவிதைகள் என்னுடைய காயத்திற்கு மருந்தாக இருந்தது. எனக்குள் ஒரு உந்து சக்தியை ஏற்படுத்தியது. சோர்ந்து போகும் நேரங்களில் எழுந்து ஓடுடா என்ற உணர்வைக் கொடுத்தது. என்னை எனக்கு அடையாளம் காட்டுகிற கருவியாக அது இருந்தது. அதன்பிறகு அவரது கவிதைத் தொகுப்புகள் அனைத்தையும் வாங்கிப் படித்தேன்.”

கண்ணதாசன் மீது தீவிர பற்று கொண்டவர் நீங்கள். அவருக்குப் பிறகு உங்களை மிகவும் ஈர்த்த, பிடித்த சமகால கவிஞர் யார்?

“கவிஞர் வைரமுத்துவைக் குறிப்பிடலாம். அவர் ஒரு கவிஞர், பாடலாசியர் மற்றும் எனது நெருங்கிய நண்பர் என்பதாலும் இருக்கலாம். ஆனால் அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். கண்ணதாசனின் தாக்கம் என்னிடம் உள்ளது என வைரமுத்துவே குறிப்பிட்டுள்ளார். அதேபோல் எனது கவிதைகளின் ஓட்டத்திற்கு காரணம் கண்ணதாசன் எனவும் கூறியிருக்கிறார். அதேபோல் ஒரு கவிஞன் ஒர் இளைஞனை பாதிப்பது என்பது வேறு, ஒரு கவிஞன் ஒரு கவிஞனை பாதிப்பது என்பது வேறு. காட்டாற்று வெள்ளம் போல் என்னுள் இருந்த மொழி ஆர்வத்தை, ஒரு நதிபோல மாற்றியது வைரமுத்துவின் வரிகள். குறிப்பாக அவரது மரபு கவிதைகள் ரத்ததானம், பழைய பனை ஓலைகள் ஆகியவை.”

இலக்கிய வட்டத்தில் நெருங்கிய நண்பர்கள்?

கல்யாண்ஜி, கலாப்ரியா, ஜெயமோகன், நாஞ்சில் நாடன் ஆகியவர்கள் நெருங்கிய நண்பர்கள். ஜெயமோகன் உழைப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் மரபு சார்ந்த அவரது படைப்புகள் மிகவும் பிடிக்கும். அதற்கு சான்று அவர் எழுதி வரும் வெண்முரசு.

வைரமுத்து திராவிட சிந்தனை உடையவர். நீங்களோ தீவிர ஆன்மிக மார்க்கத்தைப் பின்பற்றுபவர்..உங்களது நட்பு எப்படியானது?

“இலக்கியம்தான் காரணம். இலக்கியம் இதுபோன்ற பார்வைகளைத் தாண்டியது. சமயம் என்பது வேறு ஆன்மீகம் என்பது வேறு. ஒரு கவிஞனின் மொழி ஆளுமை இலக்கிய பயிற்சி அவரது படைப்பில் இருக்கும் புதுமை இவைதான் முக்கியம். அவருடைய வீட்டில் பூஜையறை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் தனிப்பட்ட மனிதருடன் பழக கொள்கை ஒரு தடையல்ல.”

படைப்புகள் மீதான விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

” இதுவரைக்கும் பெரிய விமர்சனங்களே எதிர்ப்புகளோ வந்தது மாதிரி நினைவில் இல்லை. அறிவுக்கு 1000 கண்கள் என்ற எனது படைப்பு குறித்து கோவை ஞானை திறனாய்வு கட்டுரை எழுதியுள்ளார். மற்றபடி எதுவும் இல்லை. விமர்சனம் என்றால் இரண்டே விஷயத்தைதான் செய்வார்கள். ஒன்று உங்களுடையது கவிதையே இல்லை என்பார்கள். அல்லது அருமையான கவிதை என்று பாராட்டுவார்கள்.”

ஒருவேளை உங்களுடையதெல்லாம் கவிதையே இல்லை என்று விமர்சனம் வந்தால் உங்களுடைய எதிர்வினை எப்படி இருக்கும்?

“அப்படியா! என்று கேட்டுக்கொள்வேன். கருத்து தெரிவிப்பது அவரவர்களது உரிமை. என் கவிதையை படித்தே தீர வேண்டும் என்று திணிப்பவன அல்ல நான். ஆகையால் அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ள மாட்டேன்.”
தற்போது எதைப் பற்றி படிக்கிறீர்கள்? எழுதுகிறீர்கள்?

”சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களை மறுவாசிப்பு செய்து வருகிறேன். அதேபோல் அப்போது வரும் புத்தகங்களையும் படித்துவிடுவேன். மேலும், சமகால கவிஞர்களின் கவிதைகளைப் பற்றி திறனாய்வு செய்து வருகிறேன். அவர்களின் கவிதைகள் எந்த மாதிரி இருக்கிறது. கவிஞர்களின் இயங்கியல் எப்படி இருக்கிறது என்பது குறித்து எழுதலாம் என்று இருக்கிறேன். அதேபோல் வோர்ட்ஸ் வொர்த், கலீல் ஜிப்ரான் போன்றவர்களின் கவிதைகளி மொழி பெயர்த்திருக்கிறேன். அதனை மேலும் தீவிரமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.”

உங்களை ஈர்த்த உலக இலக்கியம்?

“ஜென் மார்க்கத்தில் ஈடுபாடு உண்டு. ஜென் உணர்வுள்ள கவிதைகள். சின்ன சின்ன புதிர் கொண்ட கவிதைகள் பிடிக்கும்.”

ஆன்மிகத்திற்கு தன்னம்பிக்கைக்கும் எதாவது தொடர்பு உண்டா? 

“ஆன்மிகத்தைப் பொறுத்தவரை உங்களை ஒரு பெரிய சக்தியுடன் பிணைக்கிறது. ஒரு அலை தன்னை அலை என்று நினைத்துக்கொள்வதைவிட கடலின் ஒரு பகுதி என்று கண்டுகொள்வது தான் முக்கியம். பெரிய பரப்பிற்கு சொந்தமாக இருக்கிறது அல்லவா, ஆன்மிகம் அப்படித்தான் நம்மை உணரச் செய்கிறது.”

பொதுவாக படைப்பாளிகள் தங்களுக்கான குருவாக யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சத்குருவை நீங்கள் குருவாக ஏற்றுக் கொண்டது எப்படி?

”வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை என்பது, அவருடைய குருவைக் கண்டறிவது. நான் அவரைக் கண்டறிந்திருக்கிறேன். அவர்தான் ஜக்கி சத்குரு வாசுதேவ். நம் வாழ்க்கையில் ஒரு குரு கிடைப்பதை விட வேறு எதுவும் சந்தோஷம் இல்லை. நானும் ஆரம்ப கட்டத்தில் அவரை ஒரு யோகா பயிற்சியாளராகத்தான் பார்த்தேன். ஆனால் அவருடைய வகுப்புகளுக்குப் போன பிறகுதான். அவருடைய மகிமை உணர்ந்தேன். அவருடனான அனுபவங்களை புத்தகமாக எழுதியிருக்கிறேன்.”

உங்களை எழுத்தைப் படித்தோ அல்லது தன்னம்பிக்கைப் பேச்சை கேட்டோ வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்களைச் சந்தித்து இருக்கிறீர்களா?

” தினமும் இளைஞர்கள், தொழிலதிபர்கள் என நிறைய பேரைச் சந்திக்கிறேன். ஒரு நாள் ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு ஓய்வாக அமர்ந்திருந்தேன். அப்போது வயதான ஒரு இஸ்லாமிய பெரியவர் என்னிடம் வந்து கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று கூறினார். சொல்லுங்கள் என்று கேட்டபோது, ‘’எனக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது நமக்குப் பின்னால் இந்த ஹோட்டல் தொழிலை யார் கவனிக்கப் போகிறாரகள் என்று மனமுடைந்து போய் இருந்த நேரத்தில் நான்கு மாணவர்கள் தங்களுடைய நமது நம்பிக்கைப் புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்தார்கள். உண்மையாக சொல்கிறேன். அதைப் படித்த பிறகு அல்லாவின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ என்று கூறினார். இதை விட வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில்.”

பல்வேறு மாணவர்களையும் இளைஞர்களை சந்திக்கிறீர்கள். அவர்களிடம் வாசிப்பு ஆர்வம் எப்படி இருக்கிறது?

“இருவேறு உலகத்து இயற்கை’ என்பது போல் இருவேறு இளைஞர்கள் இயற்கை. தீவிர வாசிப்பு கொண்டவர்களும் இருக்கிறார்கள். புத்தகம் படிக்காத கூட்டமும் இருக்கிறது. அவரவர்களுக்கு கிடைக்கிற ஆசிரியர்களைப் பொறுத்து அமைகிறது. தற்போதைய சூழலில் இணையம் வழி வாசிப்பு என்பது இளைஞர்களுக்குக் கிடைத்திருக்கிற இன்னொரு பெரிய வாய்ப்பு. பெரிய வரப்பிரசாதம் என்று நான் நினைக்கிறேன்.”

அதே இணையம்தான் வாசிப்புப் பழக்கத்தை மழுங்கடிக்கிறது என்றும் கூறுகிறார்களே?

“எதற்குமே இரண்டு எல்லைகள் உண்டு. ”கத்தியால் கழுத்தையும் சீவலாம், மரத்திலே கலைவண்ணம் செய்துவிடலாம். கனல் கொண்டு நாட்டையே எரிக்கலாம், விளக்கிலே கருவாக ஒலிரவிடலாம்” என்ற கண்ணதாசன் வரிகள் பொருந்தும். நம் கையில் அவை இருக்கவேண்டும் தவிர அவற்றின் கையில் நாம் கருவியாக மாறிவிடக் கூடாது. சமூக வலைதளங்கள் கூட அப்படிதான். ஆளத் தெரிந்தவன் கையில் அது ஒரு அற்புதமான ஆயுதம்.”

அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுகிறீர்கள். அதன் மீது பலரும் உரிமை கொண்டாடுகிறார்கள். குறள்கள் குறித்து உங்களது பார்வை?

திருக்குறள் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய இருக்கிறது. அது ஆன்ம இயல் சார்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு கவிஞர் சிற்பி கூறிய இந்தக் கவிதை பொருந்தும்.

”செந்தமிழ் நாட்டு மொழியில் எழுந்தும் மன்னவர் பெயரில்லை

தெய்வ வணக்கப் பாடல் சொல்லியும் திருப்பேர் தரவில்லை

மந்திரம் சமயம் சடங்குகள் இல்லை காரணம் ஏனென்றால் 

மனித குளத்தின் மனச்சான்றாக வந்தது வல்லுவர் நூல்”வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)