பதிவு செய்த நாள்

06 அக் 2017
14:46

ராளமான தேவதைக் கதைகளை எழுதியதால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர், சிறுமியரின் மனதில் மகிழ்ச்சியை நிரப்பிய எழுத்தாளர் ஹேன்ஸ் க்றிஸ்டியன் ஆண்டர்சன். அந்தச் சிறுவர்கள் எல்லாம் பெரியவர்கள் ஆன பிறகு, அடுத்த தலைமுறைச் சிறுவர்கள் வந்தார்கள். அவர்களுக்கும் பிடித்த தேவதைக் கதை சொல்லி இவர்.
நாவல், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் என பெரியவர்களுக்காக நிறைய எழுதியிருக்கிறார். ஆனாலும், இவரது தேவதைக் கதைகளை வைத்தே இவரைத் தெரிந்துகொள்கிறோம். சிறாருக்காக இவர் எழுதிய கதைகள், உலக இலக்கியத்துக்கு முக்கியமான பங்களிப்புகள்.

ஹேன்ஸ் க்றிஸ்டியன் ஆண்டர்சன்
ஹேன்ஸ் க்றிஸ்டியன் ஆண்டர்சன்

இளமைப் பருவம்...
டென்மார்க் நாட்டில் ஓடென்ஸ் என்கிற ஊரில் 1805ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதி பிறந்தார் ஆண்டர்சன். மிகவும் ஏழ்மையான குடும்பம். ஆண்டர்சனின் அப்பா செருப்பு செய்யும் வேலையைச் செய்துவந்தார். அடுத்த வீடுகளுக்குப் போய் துணி துவைத்துக்கொடுத்து கூலியாகக் கிடைக்கும் காசை வீட்டுக்குக் கொண்டுவருவார் ஆண்டர்சனின் அம்மா. இவர்களுக்கு ஆண்டர்சன் ஒரே பிள்ளை. அதனால் ரொம்ப செல்லம். குழந்தைப் பருவத்திலேயே கற்பனை வளம் மிகுந்தவராக இருந்தார் ஆண்டர்சன். பொம்மைகளைத் தானே செய்துகொள்வார்.
கைவினைக் கலையோடு நின்றுவிடவில்லை. பாட்டுப் பாடுவதிலும், டான்ஸ் ஆடுவதிலும் அவருக்கு கட்டுக்குள் அடங்காத ஆர்வம் இருந்தது. சரியான சாப்பாடு இல்லாமல் ஒல்லிக்குச்சியாக இருப்பார். அதிக உயரம் வேறு. இதனால் எல்லோரும் அழகு என்று சொல்லும் அளவு இருக்க மாட்டார்.
ஆனால், தன்னை யாரும் அழகாக இருப்பதாகச் சொல்லவில்லையே என்று ஆண்டர்சன் கவலைப்பட்டதே இல்லை. கற்பனை வளம் மிக்க தன் மன உலகத்துக்குள் பயணம் செய்தபடியே இருந்தார். ஆண்டர்சனுக்கு11 வயதாகும்போது, அவரது தந்தை இறந்தார். மூன்று ஆண்டுகள் கழிந்தன. பிரபலமான ராயல் தியேட்டர் நாடகக் கம்பெனியில் சேரும் ஆசையில் கோபன்ஹேகன் நகருக்கு இடம்பெயர்ந்தார்.
அந்தக் கம்பெனியில் ஒரு மேடைக் கலைஞராகச் சேர்ந்தார். அப்படிச் சேர்வது எளிதாக இருக்கவில்லை. பலத்த சிபாரிசு தேவைப்பட்டது. ஜோனரஸ் காலின்ஸ் என்பவர் அப்போது ராயல் தியேட்டர் இயக்குநர்களில் ஒருவர், மேடைக் கலைஞன் ஆவதற்கு முன், அடிப்படைக் கல்வியாவது இருக்க வேண்டும் என்று அந்த காலின்ஸ் ஆண்டர்சனை பள்ளியில் சேர்த்துவிட்டார். ஆண்டர்சனுக்கு அவ்வளவாகப் படிப்பு ஏறவில்லை. எழுத்துப் பிழைகளோடு எழுதுவார். புதுப்புதுச் சொற்களைப் புரிந்துகொள்ள முடியாது. இதனால்தானோ என்னவோ பின்னாளில் அவர் எழுத்தாளராக ஆனபோது மிகவும் எளிய, அன்றாடம் எல்லோரும் பேசும் வார்த்தைகளைப் பயன்படுத்தியே தன் கதைகளை எழுதினார். இப்படி ஏழு ஆண்டுகள் கஷ்டப்பட்டு படிப்பை 1828ம் ஆண்டு முடித்தார். படிப்பு முடிய ஓராண்டுக்கு முன்பு அவரது முதல் கவிதையான ’The Dying Child’ கோபன்ஹேகன் போஸ்ட் என்கிற பத்திரிகையில் வெளியாயிற்று.

அவர் எழுதிய முதல் நாவல்
அவர் எழுதிய முதல் நாவல்

பயணங்கள் தொடரும்…
அதன் பிறகு கதைகள் எழுத ஆரம்பித்தார். இயல்பாகவே ஊர் சுற்றுவதில் ஆர்வம் உள்ள ஆண்டர்சன், 1833ம் ஆண்டு இத்தாலி முழுக்கச் சுற்றினார். ‘The Improvisatore’ என்கிற தன் முதல் நாவலை எழுதினார். அது உலகம் முழுக்க இருந்த இலக்கிய வாசகர்களால் பாராட்டப்பட்டது. அந்தப் பாராட்டுகள் கொடுத்த தெம்பில் விறுவிறு என ஐந்து நாவல்களை எழுதிக் குவித்தார். ஆனால், அவை முதல் நாவலைப் போல வரவேற்பை பெறவில்லை. அவருக்கு நாவல் எழுதுவதைவிட நாடகங்கள் எழுதுவதே மகிழ்ச்சியான வேலையாக இருந்தது. சிறுவர்களுக்கான தேவதைக் கதைகளையும் எழுத ஆரபித்தார். இடையில் சுயசரிதையும் பயணக் கட்டுரைகளும் எழுதினார்.
எழுதிய அனைத்துப் படைப்புகளும் தேவதைக் கதைகளே, ஹேன்ஸ் ‘க்றிஸ்டியன் ஆண்டர்சனின் கோட்டை’ என்று சொல்லத்தக்க அளவில் திகழ்ந்தன. இந்தப் பிரிவில் ஆன அற்புதமான பல கதைகளை 1835க்கும் 1850க்கும் இடையிலான ஆண்டுகளில் எழுதினார். உலகம் முழுவதும் பிரபலம் பெற்ற, ‘The Princess on the Pea’, ‘Thumbelina’, ‘The Steadfast Tin Soldier’, ‘The Snow Queen’, ‘The Darning Needle’, ‘The little Match Girl’, ‘The Shirt Collar’ ஆகிய கதைகளை இந்தக் கால கட்டத்தில்தான் எழுதினார் ஆண்டர்சன்.ஆண்டர்சனின் கதைகளில் மனித உணர்ச்சிகளின் போராட்டங்கள் நிரம்பி இருக்கும். மனதை உருக்கும் வருத்தங்கள் விவரிக்கப்படும். அவரது கதாப்பாத்திரங்களுக்கு நிறையத் துன்பங்கள் வரும். ஆனால், கடைசியில் எல்லா துயரங்களும் தீர்ந்து, கதை மகிழ்ச்சியோடு முடியும்.
ஆண்டர்சன் தன் சொந்த வாழ்க்கையின் தன்மையையே கதைகளாக எழுதினார் என்று நம்பப்படுகிறது. உதாரணத்திற்கு ‘The Ugly Duckling’ கதையை எடுத்துக்கொள்ளலாம். அந்தக் கதையில் ஒரு வாத்துக் குஞ்சு மிகவும் அசிங்கமாக இருக்கும். பிற வாத்துக்கள் அதை கேலி செய்த வண்ணம் இருக்கும், காலப்போக்கில் அந்த வாத்துக் குஞ்சு ரொம்ப ரொம்ப அழகான ஓர் அன்னமாக மாறும். ஆண்டர்சனும் அப்படித்தானே சின்ன வயதில் தோற்றம் நன்றாகவே இருக்காது; வறுமையில் வாடினார்; பிற்காலத்தில் உலகமே புகழும் எழுத்தாளராக மாறினார்.
அவரது கதைகளி, ‘அதிகாரத்தால் எதையும் சாதிக்க முடியாது’ என்கிற கருத்தும் உள்ளடங்கி இருக்கும். எழுதும் பாணியும், அவர் உபயோகிக்கும் மொழி நடையும் சிறுவர்களுக்காக என்று இருந்தாலும், அவரது கதைகளின் கருக்கள் பெரியவர்களுக்கானதாகவும் இருக்கும். அதனால் அனைவரும் அவரது கதைகளை விரும்பிப் படித்தனர்.
ஆகஸ்ட் 4ம் தேதி, 1875ம் ஆண்டு இவர் இறந்தார். அதற்கு முன்னதாகவே பலராலும் மிகவும் கொண்டாடப்படும் எழுத்தாளராக ஆகிவிட்டார் ஆண்டர்சன். அவரது நாடான டென்மார்க் அவரை ‘தேசியப் பொக்கிஷம்’ என்று கொண்டாடியது. கோபன்ஹேகன் நகரில் ஆண்டர்சனுக்கு ஒரு சிலை எழுப்பிப் பெருமைப்பட்டது அந்நாடு.
நன்றி : தினமலர், பட்டம்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)