பதிவு செய்த நாள்

09 அக் 2017
15:10

கோவில் தோட்டத்தின் மூலையிலிருந்த வேப்பமரத்தடியில் புத்தகப் பையை எறிந்துவிட்டு, சீனு உட்கார்ந்தான். இன்று கணக்குப் பரீட்சை. பள்ளிக்கூடம் நெருங்க நெருங்க பரீட்சை பயம் மனதில் பூதாகரமாக வளர்ந்தது. ஒரு வாரம் கழித்து ஸைபர் மார்க்கு வாங்கிய பேப்பரைக் கணக்கு வாத்தியாரிடம் பெற்றுக்கொள்ளும் காட்சியை கற்பனை செய்து பார்த்தான். விடைத்தாளைப் பார்த்து அப்பா திட்டுவது போன்ற காட்சிகள் வரிசையாக நினைவில் எழுந்தன. மனம் திக்திக்கென்று அடித்துக்கொண்டது. பள்ளிக்குச் செல்லாமல் இங்கே வந்தாகிவிட்டது.
வகுப்பில் காலியாக இருக்கும்போது தன் இடத்தை நினைத்துக்கொண்டபோது, அவனுக்கு வருத்தமாக இருந்தது. முதல் பீரியட் தமிழ், இரண்டாவது பீரியட் இங்கிலிஷ், இரண்டுமே அவனுக்குப் பிடித்த பாடங்கள். அதன் ஆசிரியர்களையும் பிடிக்கும். மிகவும் நல்லவர்கள்.
மூன்றாம் பீரியடுதான் கணக்கு. நாலாம் பீரியடு சயின்ஸ், கணக்கு வாத்தியார், சயின்ஸ் வாத்தியாரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு, இரண்டு பீரியடுகளிலும் சேர்த்துப் பரீட்சைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
“என் மூளையில் ஏனோ கணக்கு ஏறுவதில்லை?” என்று சீனு யோசித்தான். மற்ற பாடங்களில் பாஸ் மார்க் வந்துவிடுகிறது. கணக்கில்தான் மகா சிரமம். ரகுவையும் கோபுவையும் போல ஏன் நிறைய மார்க் வாங்க முடிவதில்லை?
படம் வரையவோ, பாட்டுப் பாடவோ, விளையாட்டிலோகூட எந்த விதமான திறமையும் இல்லை. நான் ஒரு உபயோகமில்லாத முட்டாள். அந்தந்த வாத்தியார்களுக்கு அவர்கள் பாடத்தில் மார்க் எடுப்பவர்களைப் பிடிக்கிறது. என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. இப்படி யோசித்தவுடன் சீனுவுக்கு துக்கம் பீறிட்டது. தன்னையும் மீறி விசித்து விசித்து அழத் தொடங்கினான். வேப்பமரக் காற்று சிலுசிலுவென்று சுகமாக வீசியது. அணில் ஒன்று சுதந்திரமாக தாவித்தாவி ஓடிக்கொண்டிருந்தது. புத்தகப் பையைத் தலைக்கடியில் வைத்துக்கொண்டு, அப்படியே புல்தரையில் படுத்துக்கொண்டான். மேலே வானத்தில் மேகங்களின் விதவிதமான வடிவங்களைப் பார்த்தவாறு தூங்கிவிட்டான்.
எவ்வளவு நேரம் தூங்கினானோ தெரியாது; திடீரென்று சுருக்கென்று ஏதோ கடிப்பது போலிருக்கவே எழுந்து உட்கார்ந்தான். ஒருவேளை இன்று கணக்குப் பரீட்சை நடக்காவிட்டால் என்ற எண்ணம் வந்தது. மீண்டும் நாளைக்கு வைத்துவிடுவார். பரீட்சை நடைக்கிறதா, இல்லையா என்று தெரியாமல் தலை வெடித்துவிடும் போல இருந்தது. அவசரமாக எழுந்து பள்ளிக்கூடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
வகுப்பறை, விளையாட்டு மைதானத்தை ஒட்டி அமைந்திருந்தது. சீனு பதுங்கியவாறே ஒரு ஜன்னலருகே சென்று வகுப்புக்குள் பார்த்தான். ஜன்னலுக்கு மறுபுறம் முன்சாமியின் தலை தெரிந்தது. அவன் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். 

“இஸ்ஸ்” என்றான் சீனு மெல்லிய குரலில், அவன் நிமிரவில்லை. மீண்டும், “இஸ்ஸ்” என்றான் சீனு முன்னைவிடப் பலமாக. முனுசாமி சட்டென்று தலையைத் தூக்கி சீனுவைப் பார்த்தான்.
“என்ன எழுதுகிறாய்?” சீனு சைகை மூலம் கேட்டான்.
“பரீட்சை தொடங்கிவிட்டதா?’ என்று சீனு கேட்பதாக முனுசாமி நினைத்தான்.
‘இப்போதுதான் தொடங்கியது, உள்ளே வா சீக்கிரம் வா’ என்று சீனுவுக்குப் பதில் சைகை செய்தான்.
இந்த சையையைச் சீனு பார்த்த அதேசமயத்தில் கணக்கு வாத்தியாரும் பார்த்தார். சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து வகுப்புக்கு வெளியே வந்தார். ஜன்னலருகே சீனு நிற்பதைப் பார்த்தார்.
“யாருடா, சீனுவா?”
சீனுவுக்கு தூக்கிவாரிப்போட்டது. கணக்கு வாத்தியாரைப் பார்த்து விழித்தான்.
“இங்கே என்ன செய்கிறார்?”
“பள்ளிக்கூடம்…பரீட்சை” என்று சீனு ஏதோ உளறினான்.
“இப்போதுதான் பள்ளிக்கூடம் வருகிறாயா?”
சீனு தலையை அசைத்தான். கணக்கு வாத்தியார் மேலே எதுவும் கேட்கவில்லை.
“உள்ளே வா” என்றார்.
சீனு தன் இடத்தில் போய் உட்கார்ந்தான். போர்டில் எழுதியிருந்த கணக்குகளைப் பார்த்தான். நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு தாளைக் கிழித்து, தனக்குத் தெரிந்திருந்த ஒரு கணக்கைப் போடத் தொடங்கினான். அந்தக் கணக்கைப் போட்டு முடித்த பிறகு, வேறு கணக்குகள் எதுவும் தெரியாமல் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். கணக்கு வாத்தியார் குறும்புச் சிரிப்புடன் அவனையே பார்த்தார். சீனுவுக்கு சங்கடமாக இருந்தது.
மற்றவர்கள் எல்லாம் எழுதிக் கொண்டிருந்தார்கள். தான் ஒருவன்தான் எழுதாமல் உட்கார்ந்திருப்பதாகத் தோன்றியது. பரீட்சை முடிந்தது. கடைசி பீரியடு, விளையாட்டுப் பீரியடு. எல்லாரும் மைதானத்தில் வெவ்வேறு விலையாட்டுகளை விளையாடத் தொடங்கினார்கள்.
சீனு விளையாட்டில் கலந்துகொள்ளாமல், ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்தான். திடீரென்று, “சீனிவாசன்” என்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது. சீனு திடுக்கிட்டுத் திரும்பினான். எதிரே கணக்கு வாத்தியார். சீனு பதற்றத்துடன் எழுந்து நின்றான். “ஏன் தனியாக உட்கார்ந்திருக்கிறாய்?” கணக்கு வாத்தியார் கேட்டார். சீனு பேசாமல் நின்றான். அவர், அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். பிறகு, “இன்று காலை கோவில் தோட்டத்தில் உட்கார்ந்து நீ ஏன் அழுதுகொண்டிருந்தாய்?” என்று பரிவோடு கேட்டார். சீனு திகைத்துப் போனான். “எனக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சரியப்படுகிறாயா?” என்றார் அவர்.
“காலையில் நான் சைக்கிளில் பள்ளிக்கூடம் வரும்போது, நீ பள்ளிக்கூடத்துக்குள் நுழையாமல், கோவிலுக்குள் நுழைவதைப் பார்த்தேன். சரி, சும்மாதான் தோப்புக்கரணம் போடப் போயிருப்பாய் என்று நான் நான் பள்ளிக்கூடத்துக்கு வந்தேன். ஆனால் பிரார்த்தனையின்போது உன்னைக் காணவில்லை. பிரார்த்தனை முடிந்த பிறகும் நீ வரவில்லை. நான் உடனே கோவிலுக்கு வந்து உன்னைத் தேடினேன். நீ வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாய்”

சீனு தலைகுனிந்து கொண்டான்.
“ஏன் எழுதாய் சீனிவாசன்?”
சீனு பதில் சொல்லவில்லை.
“என்னிடம் சொல்லக்கூடாது விஷயமென்றால் சொல்ல வேண்டாம். காலையில் கூட நீ அழும்போது தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுதான் பேசாமல் திரும்பிவிட்டேன்.”
அதற்குமேல் சீனுவால் பேசாமல் இருக்க முடியவில்லை. கணக்கு வாத்தியார் எவ்வலவு நல்லவர், அவரைப் பார்த்து பயந்தோமே என்று நினைத்தான். நடந்த எல்லாவற்றையும் அவரிடம் கூறினான்.
வாத்தியார் கடகடவென்று சிரித்தார். “அதெப்படி, உனக்குத் திறமை எதுவுமில்லையென்று நீயே தீர்மானித்துவிட்டாய்? உலகத்தில்  திறமைசாலிகளைவிட எந்தத் திறமையும் இல்லாத சாதாரணமானவர்கள்தான் அதிகம். தோல்விக்குப் பயந்து முயன்று பாராமல் இருக்கக் கூடாது.” வாத்தியார் சீனுவுக்குப் புத்திமதி கூறினார்.
“நான்கூடப் பள்ளிக்கூடத்திலே படிக்கும்போது, எனக்கு என்றும் தெரியாதென்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது என்னடாவென்றால் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாராகிவிட்டேன்.” என்றபடியே அவர் சிரித்தார். சீனுவும் சிரித்தான்.
- ஆதவன் வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)