நகரங்களின் குணாதிசயங்களுக்குள் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்ட அல்லது காவு கொடுத்துவிட்ட மனிதர்களுக்கு மத்தியில், தன் அசலான மண்ணின் குணத்தோடு உலவுகிற கதைசொல்லி ரமேஷ் ரக்சன். ‘பனைமரத்திற்கும், படிக்கட்டிற்கும் நடுவே ஊடாடும் வாழ்வை வேடிக்கை பார்ப்பவன்’ என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் ரமேஷ் ரக்சனின் எழுத்தில் இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
பதின் பருவத்தில், உலகின் வேறு வேறு நிழல்கள் தன் மீது படிவதைக் கண்டுணரும் யுவன், யுவதிகளின் அன்றாடங்களில், புதிது புதிதாய் முளைவிடும் மாற்றங்களையும், மனச் சிக்கல்களையும், அதன் விடுபடல்களையும் பேசும் படைப்புகள் இவருடையவை. ‘16’ மற்றும் ‘ரகசியம் இருப்பதாய்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ள ரமேஷ் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.
செங்கமாலில் அடுப்புக்குத் தீ போடும் வேலையில், பசிக்குச் சோற்றுப் பானை முன்னால் உட்காரும் முன் கைகழுவ ஒரு குடம் தண்ணீருக்கு ‘அரைக்கல்’ தூரம் போகவேண்டுமென்று, உள்ளங்கையில் உலர்ந்துபோன களிமண்ணை உடுப்பில் துடைத்துவிட்டு, சோற்றுக்குள் கை வைக்கும் செங்காட்டு வாழ்வை மனத்தில் இருத்திக் கொண்டிருக்கும் ரமேஷ் தன்னுடைய மண்மணத்தோடு எழுதியிருக்கும் “^TN72” கட்டுரைத் தொகுப்பும், சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் விரைவில் வெளியாக இருக்கிறது.
-நூல்வெளி.காம்.