தலைப்பு : பேசும் தாடி
ஆசிரியர் : உதயசங்கர்
பதிப்பகம் : வானம் பதிப்பகம்
விலை : 80/-

பதிவு செய்த நாள்

12 அக் 2017
13:54

ரிலிருந்து தாத்தாவும் அம்மாச்சியும் வந்தாச்சு. இனி சுகானாவையும் சூர்யாவையும் கையில் பிடிக்க முடியாது. அக்காவுக்கும் தம்பிக்கும் நேற்றுதான் முழுப்பரீட்சை முடிந்து பள்ளிக்கூடம் லீவு விட்டார்கள்.
சொல்லிவைத்த மாதிரி இன்று கிராமத்திலிருந்து அவர்களுடைய அம்மாச்சியும் தாத்தாவும் வந்துவிட்டார்கள். அவர்களுடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது. கதைகள், விளையாட்டு, பாட்டு, ஊர் சுற்றுவது என்று அன்றாடம் புதிது புதியாய் ஏதாவது நடந்து கொண்டேயிருக்கும்.
இந்த முறை அம்மாச்சியும் தாத்தாவும் வந்ததும், சூர்யாவும் சுகானாவும் ஓடிப்போய் கட்டிக்கொண்டார்கள். அம்மாச்சியும் தாத்தாவும் பேரக்குழந்தைகளை முத்தமிட்டுக் கொஞ்சினார்கள்.
வழக்கமாக மீசை மட்டும் வைத்திருக்கும் தாத்தா, இந்தத் தடவை தாடியும் வைத்திருந்தார். தூய வெள்ளை நிறத்தாடியில் அங்கங்கே கருப்புக்கோடுகள் மாதிரி கருப்பு மயிர்கள். மீசையும் தாடியும் தாத்தாவின் முகத்தில் வாயையும், கன்னத்தில் பாதியையும் மறைத்து விட்டன.
அம்மாதான் தாத்தாவிடம் கேட்டார், “என்னப்பா சாமியார் மாதிரி தாடியெல்லாம்...வளத்திருக்கீங்க?”
“சும்மாதாம்மா” என்றார் தாத்தா.
“மாமா தாடி நல்லாருக்கு. தாகூர் மாதிரி இருக்கீங்க” என்று அப்பா சொன்னார். தாத்தா சிரித்தார். தாத்தா சிரித்த மாதிரியே இல்லை வாய் அசையவும் இல்லை. ஆனால் சத்தம் மட்டும் கெக்க்கேக்க்க்கே என்று கோரசாக ஒரு பத்துபேர் சேர்ந்து சிரித்த மாதிரி இருந்தது.
சூர்யா குதித்து தாடியைப் பிடிக்கப்போனான். தாத்தா தலையை லேசாய் அசைத்தார். தாத்தாவின் தாடி அவன் கைக்கு எட்டாமல் பறந்தது. தாத்தா, “சூர்யா, தாத்தாவோட தாடியை மட்டும் பிடிக்கக்கூடாது என்ன” என்று சொன்னார் தாத்தா.
சூர்யா குதித்துக் கொண்டே, “ஏன் பிடிச்சா என்னவாம்” என்று கேட்டேன். தாடி மேலே எழும்புவதும் கீழே விழுவதுமாக இருந்தது அப்பதான் சூர்யாவிடம்,
“சொன்னா கேளு சூர்யா. தாத்தா தாடியை ஒட்டி வச்சிருக்காரு பிடிச்சேன்னா அது கையோட வந்துரும். அப்புறம் தாடியை நீதான் ஒம்முகத்தில் ஒட்டி வச்சிருக்கணும். சூர்யாவுக்கு அசிங்கமாயிருக்கும்” என்று சொன்ன பிறகுதான், சூர்யா குதிப்பதை நிறுத்தினான். அவன் குதிப்பதை நிறுத்தியதும், தாடி மேலே இருந்து கீழே இறங்கி மெல்ல ஊஞ்சலாடியது.
அம்மாச்சி சடைத்துக்கொண்டார், “தாடி வச்சிருக்கீராக்கும் தாடி...சூர்யாக்கண்ணு ஒரு நாள் ராத்திரி, தாத்தா தூங்கினப்புறம் தாடியை நறுக்கி தரேன்.” என்று சொன்னார். உடனே தாத்தாவின் தாடி ஆஆஆஆ என்று பயந்து மாதிரி நடுங்கியது. எல்லோரும் சிரித்தனர்.
அன்று ராத்திரிவரை தாத்தாவின் பக்கத்தில் சூர்யாவும் சுகானாவும் போகவே இல்லை. தாத்தா சாயங்காலம் இரண்டு பேரையும் கூப்பிட்டார். டி.வி. முன்னால் உட்கார்ந்துகொண்டு வரவில்லை. உண்மையில் அவர்கள் டி.வி.யும் பார்க்கவில்லை. தானே ஆடி அபிநயம் பிடிக்கும் தாத்தாவின் தாடியில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. அதை எப்படிக் கண்டுபிடிப்பது? என்று மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தார்கள்.
வழக்கம் போல இரவு எட்டு மணிக்கு தாத்தா சாப்பிட்டுவிட்டு மொட்டைமாடிக்கு தூங்கப்போய்விட்டார். சூர்யாவும், சுகானாவும் சாப்பிட்டுவிட்டு அப்படியும் இப்படியும் அலைந்துகொண்டிருந்தார்கள்.
அப்பா ஆபீஸ் வேலையாக கணினியில் உட்கார்ந்திருந்தார். அம்மாவும் அம்மாச்சியும் அடுக்களையில் பேசிக்கொண்டிருந்தனர். இதுதான் நல்ல சமயம் என்று சுகானா சூர்யாவுக்குக் கண்ணைக் காட்டினாள். அவனுக்கு உற்சாகமாகிவிட்டது. துப்பறியும் சிங்கம் போல, மெல்ல அடியெடுத்து மொட்டைமாடிக்கு போகத் தொடங்கினான்.
தாத்தா மொட்டை மாடி செங்கல் தரையில் படுத்திருந்தார். அவர் மீதும் அவரைச் சுற்றிலும் பச்சை நிறத்தில் ஒளியைச் சிந்திக் கொண்டு மின்மினிப்பூச்சிகள் மாதிரி எதுவோ பறந்துகொண்டிருந்தன. அட! முதலில் பார்ப்பதற்கு மின்மினிப்பூச்சிகள் மாதிரி தெரிந்தாலும் அவை மின்மினிப்பூச்சிகள் இல்லை. கூர்ந்து பார்த்த சுகானா, சூர்யாவிடம் கிசுகிசுத்தாள்.
“சூர்யா அது மனுசங்க”
சூர்யாவால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.
“என்னது மனுசங்களா?” என்று கத்தியேவிட்டான். சுகானா அவனை அடக்கினாள்.
“ஸ்ஸ்ஸ்ஸ்....சத்தம் போடாதேடா சித்திரக்குள்ளர்கள்.”
தாத்தாவைச் சுற்றி இருந்த அந்த சித்திரக்குள்ளர்களை அவன் வாயைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தான். இப்போது தாத்தா புரண்டு படுத்தார். சூர்யாவும் சுகானாவும் ஒருபடி கீழே இறங்கி, இருட்டில் மறைந்துகொண்டார்கள். சில நிமிடங்கள் கழிந்த பிறகு மெல்ல தலையை நீட்டி எட்டிப்பார்த்தார்கள்.
பத்து பேர் இருக்கும். எல்லோரும் வண்ணவண்ண உடைகள் உடுத்திருந்தார்கள். கால்வரை மூடிய அங்கியை அணிந்திருந்தனர். எல்லோர் தலையிலும் கோமாளி வைத்திருக்கும் தொப்பு குஞ்சத்தோடு இருந்தது. வண்ண உடைகள் உடுத்திருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தார்கள்.
கருநீல நிறத்தில் ஒருவர் இருந்தார்.
பச்சை நிறத்தில் ஒருவர் இருந்தார்.
ஆரஞ்சு நிறத்தில் ஒருவர் இருந்தார்.
கருப்பு நிறத்தில் ஒருவர் இருந்தார்.
சிவப்பு நிறத்தில் ஒருவர் இருந்தார்.
ஊதா நிறத்தில் ஒருவர் இருந்தார்.
மஞ்சள் நிறத்தில் ஒருவர் இருந்தார்.
அரக்கு நிறத்தில் நிறத்தில் ஒருவர் இருந்தார்.
கிளிப்பச்சை நிறத்தில் ஒருவர் இருந்தார்.
ஆகாய நீலநிறத்தில் ஒருவர் இருந்தார்.
எல்லோரும் போட்டிருந்த கவுன் பச்சை நிறமாய் ஒளிர்ந்தது. அவர்கள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தார்கள்.
அப்போது குளிர்ந்த காற்று வீசியது. குளிர்ந்த காற்று பட்டாலே சூர்யாவுக்குப் பிடிக்காது. உடனே தும்மல் வந்துவிட்டது. ‘ஆ..ஆ..அ..அச்சூ..’ என்று பெரிய சத்தத்துடன் தும்மினான்.
அவ்வளவுதான் ஒரு நொடிக்குள் சித்திரக்குள்ளர்கள் அனைவரும் தாத்தாவின் தாடிக்குல் ஒளிந்துகொண்டார்கள். தாடியில் அங்கங்கே வெளிச்சப்புள்ளிகள் தெரிந்தன. தாத்தா எழுந்து உட்கார்ந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார்.
சூர்யாவும் சுகானாவும் மெல்ல சத்தம் காட்டாமல், படிகளில் இறங்கி வீட்டுக்குள் போய் படுத்துவிட்டார்கள்.
“ஓ... தாத்தா தாடி இப்படிதான் பேசுதா?” என்று இரண்டு பேரும் சொல்லிச் சிரித்தார்கள்.

(அடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதை இந்த நூலைப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.)

தொடர்புக்கு : 9176549991வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)