தலைப்பு : கண்ணாடி
ஆசிரியர் : ஜீ.முருகன்
பதிப்பகம் : யாவரும்
விலை : 120/-

பதிவு செய்த நாள்

14 அக் 2017
17:01

ழுத்தாளர் ஜீ.முருகன் 1993 முதல் சிறுகதைகள் எழுதி வருபவர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘சிறுகதைக்கு எப்போதும் நான் மாணவன்தான், அவற்றை எப்படி வடிவமைப்பது எனும் ரசவாதம் இன்னும் தன்னைப் புதிரானதும் வியப்பானதுமான பிரதேசத்துக்குள்ளேயே வைத்திருக்கிறது’ என்று குறிப்பிடும் ஜீ.முருகனின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு கண்ணாடி.
இத்தொகுப்பிலுள்ள ‘பாம்பு’ மற்றும் ‘நேர்காணல்’ ஆகிய இரண்டு சிறுகதைகளும் ஆணவக் கொலையினைச் செய்யும் ஒரே இனக்குழுவைச் சேர்ந்த இரண்டு வெவ்வேறு குடும்பத்தினரின், பின்னணியினையும், மனவெழுச்சியையும், கொலைக்கான காரணங்களையும், ஆதாரங்களையும் வேறுவேறு வடிவங்களில் அதிர்வுகளின்றி விவரித்துச் செல்கின்றன.  கதைவடிவ அழகியலில்  ‘பாம்பு’ சிறுகதை தனிப்பட்ட வகையில் என்னைப் பிரம்மிக்கச் செய்த ஒன்று.
ஆணவக் கொலைகள் புரியும் இனக்குழு மனப்பான்மை குறித்து  செய்திகள் வழியாக நாம் கண்டுகொள்வதும், தெரிந்துகொள்வதும் கேள்விப்படுவதும் மிகவும் குறுகிய விஷயங்களே அல்லது குறுகலான விஷயங்களே! அவரவர்களது உருவம், முகங்கள், பெயர்கள், குரல்கள், சொற்கள்,  வயது இவைதாண்டிய மாபெரும் இருண்ட கண்டமான அவர்களது அகம் என்பது எப்பேர்பட்ட கசடுகளைக் கொண்டது என்பதைத் தெரிந்துக்கொள்ள புனைகதைகள் சாத்தியமேற்படுத்திக் கொடுக்கின்றது.
தனிமனித வாழ்வு என்பதோ, சமூக வாழ்க்கை என்பதோ மேன்மைகள் மட்டும் பொதிந்தவை அல்ல. ஒரு படைப்பாளி தன்னை காபந்து செய்துகொண்டு தன் எழுத்தில் வெறும் மேன்மைகளை மாத்திரம் எழுதிவிட்டுக் கடந்துவிடமுடியாது. அப்படியாக, தனிமனித மனத்தின் குரூரத் தன்மையை, தவறி விழுந்துவிட்டச் சொல் ஏற்படுத்துகின்ற மனச் சலனங்களை, இல்லாமையும், இயலாமையும், ஏக்கங்களும் கொடுக்கின்ற தளர்வுகளைத் தன்னிலிருந்து வெளிப்பட்டு வேடிக்கைப் பார்க்கும் விதமாகக்  கவனிப்பது என்பது ஒரு கூடுவிட்டு கூடுபாயும் முயற்சி. தன்னுடைய பெருவாரியான கதைகளில் காலத்தின் உள்ளில்  கூடுபாய்கிறவர்களைக் கதாப்பாத்திரமாகக் கொண்டு எழுதுகிறார் ஜி.முருகன். இரண்டாவது வளைவு, துயில் மற்றும் எழுத்தாளனின் வசிப்பிடம் சிறுகதைகள் அவற்றிற்குச் சான்று.
ஆசை நிறைவேறுவதற்குரிய கருவி பழங்கதைகள் என்கிறார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட். தொகுப்பில் உள்ள ‘நீலா’ நிறுகதையை அவ்வண்ணமாகவே வாசித்தேன். முன்னுரையில் ‘நீலா’ மற்றும் ‘ஆப்பிள்’ கதைகள் இரண்டும் அவரது முந்தைய தொகுப்பில் வெளிவந்த ‘இடம்’, ‘கிழத்தி’ கதைகளின் நீட்சி அல்லது தொடர்ச்சிதான்  என்று ஆசிரியரே கூறியிருப்பதைப் போல அவற்றுக்கு முடிவுகள் தொடக்கம் என்று எதுவுமில்லை.
காலத்தில் நிகழ்பவைகளுக்குள்ளும், நிகழ்த்துபவைகளுக்குள்ளும்  மூன்றாம் பரிமாணமாக நுழைந்து, பிரிந்து கதையை ஒரு தொடர் சங்கிலியாக்குகிறார் ஜீ.முருகன். உலகக் கதைகளை ஆராயும்போது மனித குலத்தின் வளர்ச்சியும், மனித மனங்களின் எழுச்சியும் புலனாகிவிடும்.  ஜீ.முருகனின் குறிப்பிட்டச் சில சிறுகதைகள் அத்தகைய தன்மையுடையவை. 
- கார்த்திக் புகழேந்தி

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)