தலைப்பு : தண்ணீர்
ஆசிரியர் : அசோகமித்திரன்
பதிப்பகம் : நற்றிணை
விலை : 100/-

பதிவு செய்த நாள்

17 அக் 2017
13:37

சோகமித்ரனின் ஆகச்சிறந்த படைப்பாக கருதப்படுவது 1970களில் எழுதப்பட்ட “தண்ணீர்” நாவல். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவல் என்றாலும் இன்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. ‘தண்ணீர்’ என்பது நாவலின் பெயராக இருந்தாலும் அது பேசுவது தண்ணீர் பிரச்சனை குறித்து மட்டுமல்ல. சினிமா மோகத்திலிருக்கும் ஒரு இளம்பெண்ணையும் அவள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் எடுத்துரைக்கிறது. இதை நாவல் என்று சொல்வதை விட ஒரு நீண்ட சிறுகதை என்று சொல்வது பொருத்தமாக இருக்குமோ என்று தோணுகிறது. ஏனெனில் இதில் முக்கிய கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் மூன்று, நான்கு பேர்தான். ஜமுனா, சாயா, பாஸ்கர் ராவ் ஆகியோரை கொண்டுதான் கதை நகர்கிறது. இதிலும் ஒரு கட்டத்தில் பாஸ்கர் ராவ் கதாபாத்திரம் கதையோடு தொடர்பற்று போய் விடுகிறது. பின்னர், மொத்த கதையையும் சுமப்பது ஜமுனா தான்.
1970களின் சென்னையை இன்றைய இளம் வாசகர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த சென்னையின் தெருக்களை, மேன்ஷன்களை நம் கண்முன் கொண்டு வருகிறார். ஒரு தெரு, அதில் சில குடித்தனங்கள், வெவ்வேறு வகையான மனிதர்கள், இவர்கள் அனைத்தையும் இணைக்கும் ஒரு விஷயம் ‘தண்ணீர் பிரச்சனை’. கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் உண்மைத்தன்மை மாறாமல் அப்படியே சொல்லியிருக்கிறார். முதலில், அந்த வீட்டுக்காரம்மா கதாபாத்திரம். அவர்தான் நாம் அன்றாடம் பார்க்கும் வீட்டுகாரம்மா. நம் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் அவர்தான். இன்றும் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களுக்கும், வீட்டு ஓனர்களுக்குமான இந்த தண்ணீர் போர் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது.
என்னதான் அடுத்தடுத்த வீடுகளில் மக்கள் குடி இருந்தாலும், யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்ற விட்டேத்தியான மனநிலையில்தான் இருக்கிறார்கள். 1970-களிலே இந்த நிலை என்றால், இப்போது கேட்கவா வேண்டும்? அதில் அத்திபூத்தாற் போல வருகிறார் அந்த டீச்சர். சற்று கூர்ந்து கவனித்தால் தெரியும், இந்த கதையில் ஜமுனாவிற்கு அடுத்த முக்கியமான கதாபாத்திரம் என்றால், அது அந்த டீச்சர் தான்.  ஜமுனாவிற்கும் டீச்சருக்கும் நடக்கும் உரையாடல் இந்த நாவலின் சிறப்பம்சங்களுள் ஒன்று. அந்த உரையாடல் தான் ஜமுனாவை சாக விடாமல் மீட்டுக் கொண்டு வரும். டீச்சர் தனது வாழ்க்கையை சொல்லும் போது அவர் எதிர்கொண்ட வேதனைகளை கூறும்போது, நமக்குள் ஒரு பெரிய ஆச்சரியம் ஏற்படுகிறது. இத்தனை துன்பத்துடன் ஒரு பெண் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாளா? தனது கணவனின் கையாலாகாத்தனத்தினால் ஒரு பெண் மலடி பட்டத்தை சுமப்பதென்பது கொடுமையிலும் கொடுமை. அதுவும் முதலிரவில் தனக்கு நேர்ந்த்தை அந்த டீச்சர் விவரிக்கும் பொழுது ”ச்ச்ச்ச, அய்யோ பாவம்” என்று நம்மையும் அறியாமல் சொல்லிவிடுவோம். இவர்களை போன்றவர்கள் தான் நமக்கு உந்துசக்தியாக இருக்கிறார்கள். எத்தனை தன்னம்பிக்கை புத்தகங்கள் படித்தாலும் இதற்கு ஈடாகாது.
இயக்குனர் பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’யில் பார்த்த சுஜாதா, ருத்தரய்யாவின் அவள் அப்படித்தானில் வந்த ஸ்ரீ ப்ரியா ஆகியோரின் ஒரு வடிவம் தான் இந்த சாயா. பாஸ்கர ராவை கண்டவுடன் கோபத்தை வெளிப்படுத்துவது ,அவனை தனது தீ விழிகளால் பொசுக்கி தள்ளுவது, தனது கணவனை தேடி ஏங்கி தவிக்கும் சமயங்களில் உடைந்து அழுவது, இறுதியில் பாஸ்கர ராவை செருப்பால் அடித்து விரட்டுவது என்று கிடைக்கும் இடங்களிலெல்லாம் நம் மனதில் அமர்ந்துகொள்கிறாள். இறுதியில் பாஸ்கர ராவ் வந்து ஜமுனாவை அழைக்கையில், தான் வரவில்லை என்றும் அதற்கு ஜமுனா சொல்லும் காரணமும் நம்மை அதிரத்தான் வைக்கிறது. சாயா, ஜமுனாவிடம் “நீ கூறியது பொய்தானே?” என்று கேட்கையில் அது பொய்யாகவே இருக்க வேண்டும் என்று வாசகன் நினைக்கும் அளவுக்கு ஜமுனாவின் மீது நமக்கு ஒரு கரிசனம் உண்டாகுகிறது.
இதில் நமக்கு தெரிய வரும் இன்னொரு விஷயம், இந்த சமூகத்தில் தனியாக வாழும் ஒரு பெண் படும் இன்னல்களும் அவஸ்தைகளும். வீட்டுக்காரம்மவின் கணவனிலிருந்து, டீச்சரின் மாமியார், ஜமுனாவின் பாட்டி என்று அனைவருமே அவர்கள் மீது ஒரு தப்பான பார்வையே கொண்டிருப்பது தனியாக ஒரு பெண் இங்கு வாழவே முடியாதா என்ற கேள்வியை முன் வைக்கிறது. அதற்கேற்றாற் போல் ஜமுனாவும் சினிமா மோகத்தில் வீழ்ந்து, தான் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் மீண்டும் மீண்டும் ஏமாறுவது, தவறு எங்கே நடக்கிறது என்று நம்மை யோசிக்க வைக்கிறது.
அசோகமித்திரனை வாசிப்பதற்கு ரொம்ப மெனக்கெட எல்லாம் தேவையில்லை. அவரது எழுத்தில் ஒரு எள்ளல் தொனி இருந்துக்கொண்டே இருக்கும். அது கதை வாசிக்கும்போது நம்மை சலிப்படைய வைக்காது முழு உத்வேகத்துடன் வாசிக்க வைக்கும். இந்த கதையிலும் தெருவில் நடக்கும் விஷயங்களை விவரிக்கையில் நிறைய இடங்களில் அந்த எள்ளல் தொனி வெளிப்படுகிறது. அதுதான் அசோகமித்ரனின் மொழி.
- பிரவீன் குமார்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)