தலைப்பு : ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு
ஆசிரியர் : ஸ்லெட்டா ஃப்லிப்போவிக் - தமிழில் அனிதா பொன்னீலன்
பதிப்பகம் : புலம் பதிப்பகம்
விலை : 170/-

பதிவு செய்த நாள்

20 அக் 2017
12:57

 ன் பின்னால் ஒரு நீண்ட வெப்பமான கோடை விடுமுறை என் முன்னால் ஒரு புதிய பள்ளி. ஐந்தாம் வகுப்புக்கு போகிறேன். சொல்வதற்கு எங்கள் எல்லோரிடமும் அவ்வளவு இருக்கிறது என்று தொடங்கும் ஸ்லெட்டா தன், நாட்குறிப்புக்கு மிம்மி என்று பெயரிடுகிறாள். மிம்மியை அவள் காதலிக்கத் தொடங்குகிறாள். குரோனோ அற்புதமான கிராமம். ஒவ்வொருமுறை செல்லும் போதும், எங்கள் வீட்டையும சுற்றியுள்ள கிராமப்புறங்களையும் அதிகம் விரும்புகிறேன். பேரிக்காயும், வாதுமைக் கொட்டையும் பொறுக்கினோம். வாதுமைக் கொட்டையைத் திருடிச்சென்ற புத்திசாலி அணிலைப் புகைப்ப்படங்கள் எடுத்தோம்.தீர்க்கமாக இயற்கை தன்னுடைய தூரிகையால் வண்ணம் தீட்டிக் கொண்டிருக்கிறது. இலைகள் மஞ்சளாகவும், சிவப்பாகவும் மாறி உதிர்ந்து கொண்டிருக்கின்றன. பகற்பொழுதுகள் குறைவாகவும் குளிரானதாகவும் மாறுகின்றன. இலையுதிர் காலமும் இனிமையானது தான். உண்மையில் ஒவ்வொரு காலமும் அதனதன் போக்கில் இனிமையானதே என்று அதுவரை தான் அனுபவித்த இரசித்த கொண்டாடிய நொடிகளை நிமிடங்களை நாட்களை அதில் எழுதி எழுதி தீர்க்கிறாள். இப்படி கொண்டாட்டமும் குதூகலமும் நிறைந்த பதினோரு வயது குழந்தை ஸ்லெட்டாவின் வாழ்வில் போஸ்னிய உள்நாட்டுப் போர் பெரும் மனச்சிதைவையும் துயரையும் காயத்தையும் மாறா வடுக்களையும் ஏற்படுத்துகிறது.
போர்…அழிக்கிறது, கொல்லுகிறது, எரிக்கிறது, பிரிக்கிறது. துயரத்தை கொண்டு வருகிறது. குளிரும் இருட்டுமான நிலவறைக்கு நாங்கள் சென்றோம். அது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. ஒருவர் கைகளை ஒருவர் பிடித்துக் கொண்டு நின்றோம். நான் அம்மா அப்பாவின் கதகதப்பில் நின்று கொண்டேன் இதுதான் என் வாழ்க்கை. ஒன்றுமறியாப் பதினோரு வயது பள்ளிச் சிறுமியின் வாழ்க்கை பள்ளி இல்லாத, வேடிக்கை இல்லாத, பள்ளி செல்லும் பரபரப்பில்லாத ஒரு பள்ளிச் சிறுமி.  விளையாட்டுகள் இல்லாமல், நண்பர்கள் இல்லாமல், சூரியன் இல்லாமல், பறவைகள் இல்லாமல், இயற்கை இல்லாமல் பழங்கள் இல்லாமல், சாக்லேட் இல்லாமல். ஒரு குழந்தை… சுருக்கமாகச் சொன்னால் குழந்தைப் பருவம் இல்லாத ஒரு குழந்தை என்று தன் துயர்களை பதிவு செய்தபடியே கடக்கிறாள்… நமக்குள்ளும் கடத்துகிறாள்.
போரை மறப்பதற்காகவே பிறந்தநாள் போன்றவற்றை கொண்டாகிறோம். எங்களின் இந்த வாழ்க்கையை இன்னும் பிரகாசமாக்கிக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல வாழ்க்கை கடினமாக, மேலும் கடினமாக மாறிக்கொண்டிருக்கிறது. இது வாழ்க்கை இல்லை வாழ்வதைப் போன்ற ஒரு நடிப்பு என்று அடர்த்தியான வலியை மிம்மி மீதும் நம் மீதும் இறக்கி வைக்கிறாள்.
நாம் ஒருவரை ஒருவர் மறுபடியும் எங்காவது, ஏதோ ஒரு நகரத்தில் பார்ப்போம். அது சோகமானது. நிலைகுலையச் செய்யக்கூடியது என்று புலம்பெயர்தலின் வலியை எழுதும் போது நமக்கு ஈழத்து சகோதர உறவுகளை நினைவுபடுத்துகிறது.

சிறப்பான எதுவும் எனக்குத் தேவை இல்லை. என்னைத் திரும்பவும் என் மழலைப் பருவத்தின் கரையில் கொண்டுபோய் விடுங்கள். அங்கே நான் இதமாக, சந்தோசமாக, திருப்தியாக, எல்லாக் குழந்தைகளும் அதனதன் குழந்தைப் பருவத்தை அனுபவிப்பதைப் போல நானும் அனுபவிப்பேன் என்னும் ஸ்லெட்டாக்களின் தொலைந்த குழந்தைமையை யாரால் மீட்டுத்தர முடியும்.
“மலையில் நாம் இருப்பதாக நான் அடிக்கடி நினைப்பேன். வழுக்குதல், சாலையில் இறங்குதல் பனி வீடு கட்டுதல், தூங்கப் போகும் முன் வீண் பேச்சு பேசுதல், பிறந்தநாள் கொன்டாட்டங்கள் புத்தாண்டுக்கு முந்திய மாலை எல்லாமே இனிய நினனவுகள். திடீரென்று அவை போய்விட்டன. இனி ஒரு போதும் அவை திரும்ப வராது. நாங்கள் எங்களது ஞாபகங்களை மட்டும் விட்டுவிட்டு வெளியேறி விட்டோம் என்ற தோழி ஒகாவின் கடிதம் இப்போதும் என்னை தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது தோழி நினா இறந்து போகிறாள்.
அம்மா வேலை பார்த்த இடம் தீயில் நாசமாகிறது. மருத்துவமனை எரிகிறது அங்கேயும் குழந்தைகள் பிறக்கின்றன. நாம் உலகத்தின் இரண்டு மூலைகளில் இருக்கிறோம். ஒரு இடத்தில் வெளிச்சம் வேறோரு இடத்தில் இருள் என்று தன் மின்சாரமில்லாத இரவுகளையும் போர் சூழ்ந்த வாழ்வையும் எழுதுகிறாள்.
ஆனி ப்ராங்குடன் ஒப்பிடுவதை ஸ்லெட்டா விரும்பவில்லை அது இன்னும் துயர் மிகுந்தது அச்சமூட்டக் கூடியது என்கிறாள். நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம் அரசியல்தான் எங்களை பிரித்தாளுகிறது என்று எழுதும் ஸ்லெட்டா அந்த அரசியலை புரிந்து கொள்ள முயற்சித்து தோற்றுப் போகிறாள்.

அனிதா பொன்னீலன்
அனிதா பொன்னீலன்

1993-ன் இறுதியில் ஸ்லெட்டா தன் பெற்றோருடன் பாரிசுக்கு சென்றுவிடுகிறாள். இறுதியில் அமெரிக்கா தலையீட்டில் போர் முடிவுக்கு வருகிறது. செர்பியக் குடியரசில் செர்பியர்கள். பொஸ்னியக் குடியரசில் குரோவாசியர்களும் முஸ்லீம்களும் என ஒரு தலைமையின் கீழ் இரண்டு குடியரசுகள் என பிரிக்கப்படுகிறது. இந்த நூல் சேர்போ குரோவாசியா என்ற மொழியில் இருந்து கிறிஸ்டினா பிரிபிஷேவிச் ஸோரிக்கால் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டது.
தமிழில் அனிதா பொன்னீலன் மொழிபெயர்த்திருக்கிறார். நூல் முழுவதையும் என்னால் ஸ்லெட்டாவின் மொழியிலேயே வாசிக்க முடிந்தது. காரணம் இயல்பான மொழியாக்கம். இது அவருடைய முதல் முயற்சி என்கிறார். எந்த இடத்திலும் அப்படித் தெரியவில்லை.
- முருக தீட்சண்யா

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)