பதிவு செய்த நாள்

25 அக் 2017
15:49
 மதுரை பற்றி எழுந்த முதன்மை நூல்!

முக்கண்ணன் என்று அழைக்கப்படும் சிவனின் திருவிளையாடல்களைப் பற்றி எழுந்த காப்பியம் திருவிளையாடற்புராணம். சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கருதப்படும் இந்நூல், சிவபெருமானைப்பற்றி எழுதப்பட்ட முப்பெரும் பக்தி இலக்கியப் புராணங்களில் ஒன்று.
சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம், பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணம்,கச்சியப்பர் இயற்றிய கந்தபுராணம் ஆகியன அந்த முப்பெரும் புராணங்கள். திருவிளையாடற்புராணத்தை எழுதியவர் பரஞ்சோதி முனிவர். இவர் காவிரி பாயும் தஞ்சை மாவட்டம் திருமறைக்காடு என்னும் ஊரில் மீனாட்சிசுந்தர தேசிகர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். திருமறைக்காட்டுக்கு அருகிலுள்ள பரஞ்சோதிபுரம் என்னும் ஊரிலுள்ள சிவன் கோவிலில் இவருடைய திருவுருவச் சிலை இருக்கிறது. இளமையிலேயே சிவஞான உபதேசம் பெற்றவர். பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றிய மீனாட்சியம்மை, சிவனின் திருவிளையாடல்களைப் பற்றிப் பாடுமாறு அருளினார்.
“சக்தியாய்ச் சிவமாகித் தனிப்பர
முக்தியான முதலைத் துதிசெயச்
சுத்தியாகிய சொற்பொருள் நல்குவ
சித்தியானை தன்செய்ய பொற்பாதமே.”
என்று தொடங்கும் காப்புச் செய்யுளோடு திருவிளையாடற்புராணத்தைப் பாடினார். சிவபெருமானின் அடியவர்கள் இறையருள்மிக்கோராகி இறைவனே மனம் கனிந்து நேரில் வருமாறு செய்த, அருள் நிகழ்ச்சிகள் மிகுந்துள்ள நூல் பெரியபுராணம்.
சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் பற்றீ, 3363 செய்யுட்களால் எழுதப்பட்ட நூல். இந்நூல் நிகழுமிடம் மதுரைப்பதி ஆகும். மதுரையைப் பற்றி எழுந்த நூல்களுல் திருவிளையாடாற்புராணம் தலையாயது. மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலாய்க் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையுடையது இந்நூல்.
திருவிளையாடற்புராணத்தில் அடியார்கள் மீது இறைவன் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் சுவையான கதைகளாகும். வறிய புலவர் தருமிக்குப் பொற்கிழி வழங்கிய படலம், பிட்டுக்கு மண் சுமந்த படலம் ஆகிய பகுதிகள் மிகவும் புகழ்பெற்றவை. மாணிக்கவாசகரின் வரலாற்றை அறிவதற்குத் துணைசெய்யும் நூல் திருவிளையாடற்புராணம்தான்.
- தமிழ்மலை

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)