தலைப்பு : சயாம் மரண இரயில்
ஆசிரியர் : சண்முகம்
பதிப்பகம் : தமிழோசை
விலை : 150/-

பதிவு செய்த நாள்

27 அக் 2017
13:15

 யாம் மரண இரயில் என்பது இரண்டாம் உலகப்போரின் போது நிர்மாணிக்கப்பட்ட 415 கி.மீ (258 மைல்கள்) தொலைவு கொண்ட ஒரு புகைவண்டித் தொடர் பாலம். இந்தியாவைப் பிடிக்கத் தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் முயற்சியில் ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த வண்டித்தொடர் உருவாக்கம் மனித வரலாற்றில் மிகவும் துயரம் தோய்ந்த முயற்சியாக அமைந்தது. இந்தியாவைக் கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை என உணர்ந்த ஜப்பான், தன் படையினரைக் கடல் வழியாகக் கொண்டுவந்து இந்தியாவிற்குள் நுழைவதின் சிரமத்தை அறிந்து தரைவழி பாதையைத் தேர்ந்தெடுத்தது. அதற்காகச் சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை உருவாக்க முடிவு செய்தது. 

16மாதங்களுக்குள் இந்தத் திட்டப்பணியை நிறைவேற்ற வேண்டுமெனக் கருதிய ஜப்பான் அதற்காகத் தாய்லாந்தில் உள்ள பான் போங் எனும் இடத்தில் இருந்து பர்மாவில் உள்ள தான்பியுசாயாட் வரை ரயில் பாதை அமைக்கும் தன் மாபெரும் திட்டத்தினை இரு பிரிவுகளாக 1942 ஜூன் மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. 

சயாம் வண்டித்தொடர் கட்டுமானத்திற்காக ஏறக்குறைய 180,000 ஆசியத் தொழிலாளர்கள் கடின உழைப்பில் ஈடுபடுத்தப் பட்டார்கள். அவர்களுள் சீனர்கள், ஆஸ்திரேலியர்கள், பிரிட்டீஷ்காரர்கள், டச்சுக்காரர்கள், , மலாய்க்காரர்கள், போர்க்கைதிகள் மற்றும் தமிழர்களும் இடம்பெற்றிருந்தனர். 

வேலை தொடங்கிய ஆறே ஆறு வாரங்களில் 68 பணியாட்கள் ஜப்பானிய, கொரிய காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். சிலர் காலரா, வயிற்றுப்போக்கு, பசி பட்டினி ஆகிய காரணங்களால் மாண்டு போனார்கள். மரவள்ளிக் கிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான். 

முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்துச் செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குப்புறமான ஒரு கொட்டகையில் போய் விட்டுவிடுவார்கள். கும்பல் கும்பலாய் வயிற்றுப்போக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கிச் செல்ல வேண்டியது தான். அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிபட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய்க் குப்பை அள்ளுவது போலத் தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய்ப் போட்டுப் புதைக்கப்பட்டார்கள். இறப்பு எண்ணிக்கை அதிகபட்சமாகும்போது, மொத்தமாக அவர்களைக் கொட்டகையோடு கொளுத்திய சம்பவங்களும் நடைபெற்றன. குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடப்பவர்களுக்கு மொத்தமாய் மோட்சம். மறுபடியும் புதியதாக ஓர் கொட்டகை முளைக்கும். 

இவற்றில் எல்லாம் தப்பிப் பிழைத்தவர்கள் அவ்வப்போது போர் விமானங்கள் வீசின குண்டுகளில் சிக்கி மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் மரணம் காத்திருந்தது. 5ஆண்டுக் காலம் செலவிடப்பட்டு உருவாக்கப்படவேண்டிய சயாம் மரண இரயில் பாதை ஏறக்குறைய 18 மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்டது. ஜப்பானிய படைகள் தாய்லாந்து வழியாக நுழைந்து, பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த பர்மாவைக் கைப்பற்றின. 

சயாம் இரயில்பாதை உருவாக்கத்தின் போது, ஆங்கிலப் போர்க் கைதிகள் 10,000பேர் உட்பட, 2,50,000பேர் உயிரிழந்ததாக அண்மைக்காலத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதில் தமிழர்கள் எண்ணிக்கை சுமார் இலட்சம் இருக்கும் எனக் குறிப்பிடுகிறார்கள்.. அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருந்ததால் இத்துயரச் சம்பவம் ஆவணமாக்கப்படவில்லை. ஆயினும், ஜப்பானியர்களிடம் போர்க் கைதிகளாக இருந்த ஆங்கிலேயர்கள் எழுதிய நாட்குறிப்புகள் இக் கொடூரத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. 

அந்தக் குறிப்புகளின் அடிப்படையில், “The Bridge on the River Kwai’ என்ற உலகப் புகழ் பெற்ற படம் 1957ம் ஆண்டு வெளியானது. இந்தத் வரலாற்றுச் சோகத்தில் கொல்லப்பட்ட தமிழ்மக்களின் வாரிசுகள் இன்று அந்நிகழ்வுகளைத் தங்கள் எழுத்தின் வழியாக ஆவணப்படுத்த தொடங்கியுள்ளனர். அவற்றில் முக்கியமான பதிவுதான் சண்முகம் எழுதியுள்ள ‘சயாம் மரண ரயில்’ என்ற இந்நாவல். 

பாதை அமைக்கும் வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட தனது தந்தையைத் தேடிச்செல்லும் தனயனின் உண்மை அனுபவம் இங்குக் கதை வடிவில் சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதை சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீராக நம் கரங்களை நனைக்கிறது. 

-வழக்குரைஞர். கே. சுரேஷ்குமார் கே.சுரேஷ்குமார்
கே.சுரேஷ்குமார்


மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)