பதிவு செய்த நாள்

28 அக் 2017
17:44

எம்.ஜி.ஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்:
“பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!
பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி விடுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அது ஏனோ, இதுவரை கைகூடவில்லை. மனைவியின் முணுமுணுப்பிலும் நியாயம் இருக்கிறது. சென்ற ஆண்டு, பொங்கல் அன்று, புது கார் வாங்கி விட வேண்டும் என்ற அவளது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். அதற்கேற்ப, இருவரிடம் காரின் விலை விவரங்களை கேட்டு வந்தேன். அது கண்டு, என் மனைவியின், முகத்தில் மலர்ச்சி.
ஆனால், சென்ற ஆண்டு வரையில், புது கார் வாங்கும் பேச்சு, பேச்சாகவே போய் விட்டது. நான் என்ன செய்வது! சில காரின் விலையை கேட்கும் போது, அசந்து போகிறேன். காரின் விலை கேட்டு, மலைக்கும் போதெல்லாம், என்னை சுற்றியிருக்கும் படவுலகப் பிரமுகர்களும், கார் தரகர்களும், 'நீங்களா இப்படி கேட்கிறீர்கள்...  புது கார் வாங்க எம்.ஜி.ஆர்., தயங்குவதா...' என்று கேட்கின்றனர். நான் என்ன விலை கொடுத்தும், புது மாடல் கார் வாங்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர். இப்படிக் கேட்டு கேட்டு, அடுத்த பொங்கலும் வந்து விட்டது. ஆனால், நான், இன்னும் புது கார் வாங்காததற்கு இன்னொரு காரணமும் உண்டு.
அது, பழைய காரிடம், பழகிய பாசம் தான். அந்த பாச உணர்ச்சி, என்னை புது கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை, மாற்றிக் கொண்டே வருகிறது. என்னிடம், இப்போதுள்ள பெரிய கார் மிகவும் விசுவாசமுள்ளது; தென்னகம் முழுவதும், என்னைச் சுமந்து சென்றிருக்கிறது; பல வெற்றிப் படங்களில் நடிக்க, அது, ஸ்டுடியோக்களுக்கு என்னை விரைவாக ஏற்றிச் சென்றிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான ரசிகப் பெருமக்களால் சூழ்ந்து கொள்ளப்பட்டு, தனக்கும் பெரிய செல்வாக்கை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
தொலைவில் வரும் போதே, அதை, பலர் அடையாளம் கண்டு, என் பெயரைக் கூறி, ஆரவாரம் செய்து வருகின்றனர். அந்த பெருமையை, கடந்த பத்து ஆண்டுகளாக அது அனுபவித்து வருகிறதே, அதை நான் தகர்க்கலாமோ! என் மனம் ஏனோ இடம் கொடுக்கவில்லை. பழசாகி விட்டதாலேயே, சில நல்ல மனிதர்களை உதறி விட முடிகிறதா! என் காரும் அப்படித் தான் என்று, எனக்கு தோன்றுகிறது. என் சமாதானங்களையும், நான் கண்டுபிடித்திருக்கும் காரணங்களையும், என் மனைவி ஏற்றுக் கொள்வாளா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் பழைய கார், இன்னும், என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.”

'சுதேசமித்திரன்' பொங்கல் மலரில் எம்.ஜி.ஆர். எழுதிய கட்டுரையிலிருந்து...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)