தலைப்பு : முத்தன் பள்ளம்
ஆசிரியர் : அண்டனூர் சுரா
பதிப்பகம் : மேன்மை வெளியீடு
விலை : 150/-

பதிவு செய்த நாள்

01 நவ் 2017
16:34

 ழுத்தாளர் அண்டனூர்.சுரா என்கிற சு.இராஜமாணிக்கம் எழுதிய முதல் நாவலான ‘முத்தன் பள்ளம்’ நூலினை வாசித்து முடித்தபோது, இயல்பாய் எனக்குள் எழுந்த உணர்வுகள் வியப்பும் அதிர்ச்சியும் அடங்கியதாகவே இருந்தன. அண்டனூர் சுரா எழுதிய சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே எனக்கு வாசக சாலை விருதுத் தேர்வுக் குழுவின் வழியாக அறிமுகமாகியிருந்தது. அதுதவிர எழுத்தாளர் சுரா-வின் கதைக் களங்களான புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, பட்டுக் கோட்டை, அவனம் ஆகிய நால்திசை ஊர்களுக்கும் நடுவே அமைந்துள்ள கறம்பக்குடியிலும், வடக்கில் காவிரிப் படுகையும் தெற்கில் பாம்பாற்றுப் படுகையும் சூழ்ந்திருக்க நட்டநடுவிலே ஊரைப் பங்கிட்டு பிரித்தோடும் அக்கினி ஆற்றங்கரையிலும் ஒரு நாடோடியாக அலைந்து திருந்த அனுபவங்கள் எனக்குண்டு. புதுக்கோட்டையின் வரலாற்றுத் தடங்கள் குறித்து எனக்கிருந்த தேடலின் தொடர்ச்சியாக அமைந்த பயணங்கள் அவை. 

‘Fact is stranger than fiction’ என்றொரு ஆங்கிலச் சொலவடை உண்டு. நாம் அறிந்த புனைவின் சித்திரங்களுக்கு அப்பாற்பட்ட நிஜம் என்பது எப்போதுமே பல விசித்திரங்களைக் கொண்டடங்கியது என்றதனைப் புரிந்துக்கொள்கிறேன். அந்த விசித்திரங்களின் அனுபவங்களை நேரடியாகப் பெற இதுபோலான பயணங்களையே நான் பெரிதும் நம்புகிறேன். 

இலக்கியங்களின் நான் வாசிக்கப்பெற்ற புதுக்கோட்டையின் வரலாறு, மலைகளாலும், கோயில்களாலும் கல்வெட்டுகளாலும், சிற்ப ஓவிய கட்டடக் கலைகளாலும், சமய, புராணக் கதைகளாலும், அந்நிலத்தை ஆண்ட இனக்குழுத் தலைவர்கள், மன்னர் பிரதானிகளின் புகழ் மொழிகளாலும் அறியப் பெற்றது. 

இவையெதிலும் பங்குகொள்ளாத புதுக்கோட்டை மாவட்டத்தின் வேறோர் நிலப்பரப்பில், இந்தியநாடு நள்ளிரவில் சுதந்திரம் அடைந்ததையோ, தன் மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டதையோ, நள்ளிரவில் ஐநூறு ஆயிரங்கள் செல்லாமலாக்கப் பட்டதையோ, இந்தியா முழுமைக்கும் டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருப்பதையோ அறியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் முத்தன், பாட்டனின் வழிவந்த குடிகளின் வாழ்நிலையை முதன் முதலாக எழுத்துப் பரப்பில் நின்று பேசியிருக்கிறார் அண்டனூர் சுரா. 

36கிராமங்களால் சூழப்பட்ட கந்தர்வகோட்டை தாலுகாவில் வாழும் ஒரு சராசரி மனிதர், தன் ஆண்ட்ராய்டு போனில் சமீபமாகப் பிரபலமடைந்து பிறகு, வெகுசீக்கிரமே காணாமலான போக்கிமான் விளையாட்டை விளையாடத் துவங்குகிறார். கந்தர்வக்கோட்டை காந்தி முக்கத்திலிருந்து போக்கிமான் பூச்சியைத் தேடிக் கொண்டு, ஆண்ட்ராய்டு திரை காட்டுகிற திசையிலெல்லாம் நடக்கத் துவங்குகிற பயணம் தான் நாவலின் முதல் பாகம். அதனிடையே எண்ணற்ற பதாகைகளால் சூழப்பட்டிருக்கும் ஊர், நகரம், சந்தை குறித்தான பெயர்க்காரணங்கள், விளம்பரங்களில் மின்னும் ஸ்மார்ட் போன்கள், அரசியல் தலைவர்கள், அவர்களது அறிக்கைகள், வாக்குறுதிகள், ரசிகர் மன்றங்கள், கல்விக்கூட விளம்பரங்கள், ஆகியவற்றின் மீதான பகடிகள், கல்லாக்கோட்டை சாராயப் பேக்டரிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் என இலக்கில்லாமல் அலைந்து திரியும் நாவல் தன் இரண்டாம் பாகத்தில் இருந்து வேறொரு வடிவம் எடுக்கத் துவங்குகிறது. 

ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் வட பகுதிகளில் ஆட்சி அதிகாரம் செலுத்திய பல்லவர்களைப் போரில் எதிர்கொள்ளப் பன்றிநாட்டு முத்தரையர் விடேல்விடுகு உதவியை நாடுகிறார் வரகுண பாண்டியன். நட்புணர்வோடு இருக்கும் பல்லவர்களோடு மோதுவதா எனத் தயங்கும் முத்தரையர்களிடம், தஞ்சை மண்டலத்தில் தலையெடுக்கத் துவங்கும் விஜயாலயன் குறித்தான அச்சப் பார்வைகளை ஏற்படுத்துகிறார். விஜயாலனோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் விடேல்விடுகு ஆட்சிப் பகுதியை ஒப்படைக்குச் சம்மதித்தாலும் அதற்கான திறையைச் செலுத்தவேண்டுமெனக் கட்டளையை முன்  வைக்கிறார். விஜயாலயன் மறுக்கப் போர் நிகழ்கிறது. போரில் பல்லவ அபராஜிதன், விஜயாலயனுக்குத் துணை நிற்க முத்தரையர் பின்வாங்குகிறார். ஆட்சியும், நிலமும் இழந்து ஒடுக்கப் படுகிறார். 

நியமத்தை (செந்தலை அல்லது சந்திரலேகை சதுர்வேதி மங்கலம்) தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்த முத்தரையர்கள் 36 இனக்குழுக்களாகப் பிரித்தறியப்பட்டார்கள். அவர்களுள் மலையாளிகளும், தெலுங்கர்களும், கன்னடர்களும் கலந்திருந்தார்கள். கள்ளர் இனக்குழுவின் ஒருபிரிவினராக அறியப்பட்ட முத்தரையர்கள் கருப்பண்ண சாமியைத் தங்களது குலச்சாமியாகக் கொண்டிருந்தார்கள். முத்தரையர்களின் ஆட்சியின் சிறப்பே அவர்களது கோல்செலுத்தும் முறைதான். அரசன் ஒரு முத்தரையன்; சேனாதிபதி ஒரு முத்தரையன்; குடிகளும், குடிசேவகர்களும், காவலர்களும், வேட்டைக்காரர்களும் முத்தரையர்களாகவே இருந்தனர். ஒருமித்த இனக்குழுவாக வாழ்வதில் பெருமைகொண்டவர்களாக வாழ்ந்த அவர்கள் பின்வந்த காலத்தில், ஊர்குடிகளுக்குச் சேவையும், வயற்புரங்களில் காவலும் புரிபவர்களாகவும் சுருங்கினார்கள். 

அப்படிச் சுருங்கிப் போன இனத்தில் வந்தவர் தான் முத்தனின் மகன் பாட்டன். 19ம் நூற்றாண்டின் ஆரம்பக்காலத்தில் புதுக்கோட்டைச் சமஸ்தானத்தை ஆட்சிசெய்த, முற்போக்குச் சிந்தனைகள் கொண்டவரான மார்த்தாண்ட பைரவத் தொண்டைமானிடம் தன் குடிவாழும் நத்தப் பள்ளம் நிலத்தைத் தம் இனக்குழுவே அனுபவித்துக்கொள்ளும் பாகியதையைப் பெறுகிறார் பாட்டன். விடுதலை இந்தியாவிற்கான போராட்டத்தில் காங்கிரஸார் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்கேயே தான் சந்தித்த பெண்ணை விரும்பி மணம்முடித்து நாடு திரும்புகிறார் மன்னன் பைரவத் தொண்டைமான். 

அந்நியப் பெண்ணை அரசியாக அழைத்து வந்திருப்பதால் தொண்டைமான் ஆட்சிப் பொறுப்பேற்பது குறித்துக் கேள்வி எழுப்புகிறார்கள் அதிகாரிகள். காதல் மனைவிக்காக நாட்டைத் துறக்கிறார் மன்னர். புதுக்கோட்டை சமஸ்தானம் ஆங்கிலேயக் கைப்பாவைகளின் கையில் சிக்குகிறது. தன் மன்னர் அதிகாரத்தில் இல்லாததையோ, அதன்பிறகு வந்த இருபதாண்டுகளில் நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டதையோ அறியாத நந்த பள்ளத்து வாரிசுகள் துண்டிக்கப் பட்ட தங்கள் வாழ்க்கைமுறையோடே பத்துத் தலைமுறைகளுக்கு மேலாக இன்னமும் வசிக்கிறார்கள். அப்படி ஓர் ஊர் அக்கினியாற்றங்கரையில் இருப்பதற்கான குறிப்புகளோ, ஆவணங்களோ காணாமலே ஆக்கப் படுகின்றன. போகிமான் பூச்சியின் வழிநடத்தலாம் நந்த பள்ளமாக இருந்து, பிறகு ‘முத்தன் பள்ளமாக’ அதிகாரிகளால் நாமகரணம் மட்டும் சூட்டப்பட்ட கிராமத்தை அடைகிறார் முந்தைய கந்தர்வ கோட்டை கதாப்பாத்திரம். அண்டனூர் சுராவின் ‘முத்தன் பள்ளத்தை’ ஒருவகையில் இன வரையியல் நுட்பங்களைக் கொண்டுள்ள நாட்டார் வரலாறு பேசும் நாவல் என்றே குறிப்பிடவிரும்புகிறேன். 

நாட்டார் வரலாறு பற்றிய வரையறைகளில் ‘ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கடந்தகாலம் பற்றிய கூட்டுக் கண்ணோட்டமே நாட்டார் வரலாறு’ என்கிற வரையறை தனித்துவமானது. 

உலகிலுள்ள ஒவ்வொரு சமுதாயமும், இனக்குழுவும் தத்தமது கடந்தகாலம் பற்றி ஒரு கருத்தையோ, கண்ணோட்டத்தையோ தாங்கி நிற்கும். அந்த வகையில் புதுக்கோட்டையின் மிக மிகப் பின்தங்கிய தீவுக் குடியிருப்பான முத்தன் பள்ளம் கிராம உருவாக்கமும், பல தலைமுறைக்கு முன்பாக அம்மக்களின் முன்னோர்களின் வாழ்வில் நிகழ்ந்த தாக்கங்களே அவர்கள் பற்றிய கண்ணோட்டமாக விரிகிறது. 

வரலாற்றில் சமூக மாற்றம்தான் கால மாற்றம். அதற்கு அகம், புறம் என இரு வேறு காரணங்கள் இருக்கலாம். மன்னராட்சி காலத்தில் நடந்த போர்கள், வேற்று நாட்டவர்களின் ஊடுருவல்கள், போரில் ஏற்படும் தோல்விகள் போன்றவற்றால் உருவான அரசியல் நெருக்கடிகள் பல்வேறு குடிகளின், சமூகத்தின், இனக்குழுக்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம். அவை காரணமாகத் தங்கள் பூர்வ நிலத்தைவிட்டு வேறு புலங்களுக்குத் தொடர்ந்து இடம்பெயரும் நாடோடிகளாகவும், நிலையான குடியை ஏற்படுத்திக் கொண்டவர்களாகவும் உருமாறி இருக்கிறார்கள். 

ஆந்திரமன்னன் ராஜராலு டில்லி பச்சாயிக்குப் பெண் கொடுக்க வேண்டிய சூழலுக்கு அஞ்சி, தெற்குநோக்கிப் புலம்பெயர்ந்து வந்த தெலுங்கு மக்கள் தமிழகத்தில் ‘நிலைகுடி’ வாழ்க்கையை மேற்கொண்டதும், மராட்டியத்தில் போர் வீரர்களாக இருந்தோர் இசுலாமியர்களிடம் தோல்வியுற்றுத் தமிழகத்தை நோக்கித் தப்பித்துவந்து, ‘அலைகுடி’ வாழ்க்கையை மேற்கொண்டதும், ஒன்பது கம்பளத்தார்களில் ஒருவரான காட்டுநாயக்கர் (ஆந்திராவில் ‘கங்கேத்லு’) இனக்குழுவினர் தங்கள் குலதெய்வச் சடங்கில் கலந்துகொள்ள மறந்து உறங்கிக் கொண்டிருந்த காரணத்தால், தண்டனை விதிக்கப்பட்டு நள்ளிரவில் குடுகுடுப்பை அடித்து, குறிசொல்லிப் பிழைக்கும் அலைகுடி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டதும் நாட்டார் மரபுகள் வெளிப்படுத்தும் சான்றுகள். 

இந்த இடப்பெயர்ச்சி, அலைவு, நிலைப்பு வாழ்க்கைமுறை மாற்றத்தில் குறிப்பிட்ட சில சமூகங்கள் அந்தஸ்தினையும், அதிகாரத்தையும் பெற்றிருந்தபோதும், பெருவாரியாக எழுத்தறிவற்ற மக்கள் நிறைந்த வேறு சில சமூகங்கள் மிக அண்மையில் தான் ‘இனக்குழு சமூகங்கள்’ என்ற அங்கிகாரத்தையே தமிழகத்தில் அடைந்தன. பெரும்பான்மையானோர் ‘ஆண்ட இனக்குழு’ என்ற அடையாளத்தையும், சிறும்பான்மையோர் ஒடுக்கப்பட்ட அடையாளத்தையும் எய்தினார்கள். அவர்களின் வரலாறுகள் பன்முகத் தன்மைகளோடு சாதகப் பாதகங்களோடு தொடர்ந்து பதிவாகத் தொடங்கின. 

‘வரலாறு’ என்ற குறிப்பிடலே எழுத்து வடிவத்தில் கிடைக்கப்பெறும் சான்றுகளின் அடிப்படையிலே அமைக்கப் பெறுவது எனும்போது, குரலற்றவர்களின் குரலாக இந்த நாவலின் இரண்டாம் பாகத்தைக் கையாண்டிருக்கிறார் நூலாசிரியர். (நாட்டார் வரலாறு இந்தத் தன்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதே அதன் தனித்துவம்). 

தமது நிலத்தின் கடந்த காலத்தைப் பற்றியும், நவீன மாற்றங்கள் எல்லாம் நகரத்தில் இருப்பவர்களைக் குறிவைத்து நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கூடக் குரலெழுப்பிப் பெற்றுக் கொள்ள இயலாதவர்களின் பக்கம் நின்று, சட்டங்களும், சீர்திருத்தங்களும் பொதுச் சமூகத்திற்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை இம்மக்களும் பெறவேண்டும் என்று வரலாற்றின் பின்னணியில் நின்று புனைவாக்கி இருக்கிறார் அண்டனூர் சுரா. தன் மண்ணையும், மனிதர்களையும் நேசிக்காத எந்த மனிதனாலும் இப்படி ஓர் கருப்பொருளை எடுத்து எழுதிவிட முடியாது. 

‘தங்களுக்குத் தாங்களே குரல் கொடுக்க இயலாதவர்களின் குரலாகத் திகழ்வது வாய்மொழி வரலாறு’ என்று வாய்மொழி வரலாற்றையும், அதன் பங்கினையும் மதிப்பிட்ட அறிஞர்கள் வர்ணித்தார்கள். எழுத்திலக்கியமோ, வேறு ஆவணங்களோ இல்லாத குறுஞ் சமூகங்களின் விளிம்புநிலை வாழ்க்கையை முன்மொழிவதன் மூலம் டிஜிட்டல் இந்தியாவின் மனநிலையைக் கேள்விகேட்க முடியும் என்பது நாவலாசிரியரின் திடமான எண்ணமாக ஒலிக்கிறது. முத்தன் பள்ளத்தின்’ மூத்தாடியாகக் கருதப்படும் பாட்டனின் மனக்குரல் எழுதப்பட்ட ஒரு நிலைப் பனுவல் வாயிலாக இன்னுமொரு நீட்சியைப் பெற்றிருக்கும் நூலாக இந்நாவலை வரவேற்கத் தலைப்படுகிறேன். 
-கார்த்திக் புகழேந்தி 
writerpugal@gmail.comமேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)