தலைப்பு : ஒரு கடலோர கிராமத்தின் கதை
ஆசிரியர் : தோப்பில் முஹம்மது மீரான்
பதிப்பகம் : காலச்சுவடு

பதிவு செய்த நாள்

01 நவ் 2017
17:50

   

யமுனை செல்வன்
யமுனை செல்வன்

 குடும்ப வீழ்ச்சியை எழுதுவது என்வரையில் புனைவிலக்கியத்தில் மிகச்சாதாரண விசயமாகவே தெரிகிறது. தங்களது முன்னோர்களின் வாழ்க்கைக் கதையைக் கேட்டு வளர்ந்தவர்கள் தங்களது கலாச்சாரம், வட்டார வழக்குக் கொண்டு, குடும்ப உறவுகளுக்குள் இருந்த சிக்கல்கள், பெண்களின் நிலை, வேலைக்காரர்களின் நிலை, குடும்பத்தலைவர்களின் அதிகாரம் போன்றவற்றை வைத்து ஒரு கதையினை எழுதிவிடமுடியும் என்றே தோன்றுகிறது. ஆனால், அப்படி நிச்சயம் ஒரு நாவலாவது எழுதப்படவேண்டும். எதிர்காலத்தில் சிறந்ததொரு ஆவணமாக அது திகழும். தன் இனத்தை, தன முன்னோர்களின் அதிகாரம், பேராசை போன்றவற்றின் செயல்பாடுகளை/அப்பதக்கங்களைப் பகடியாக்குவதன் மூலம் ‘சுய எள்ளல் & சுய சாதி விமர்சனமும்’ இணைவதால் இலக்கிய அந்தஸ்த்து பெற்றுவிடுகிறது இத்தகைய புனைவுகள். இது ஒரு safe zone. அதிகபட்சமாக இந்தவகைப் புனைவுகளின் மூலம் ஒரு குறிப்பிட்ட இனத்தின், இனக்குழுவின் அல்லது அந்த இனக்குழு வாழ்ந்த பகுதியின் அந்நாளைய வாழ்வினைக்குறித்த ஒரு சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. ஆனால், இவைதான் ‘இனவரைவியல்’ ஆய்வுகளில் நமக்குக் கிடைத்துவிடுகிறதே. பிறகு எதற்காக இந்தவகைக் குடும்ப வீழ்ச்சிக் கதைகளைப்’ படிக்கவேண்டும்? அதன் அவசியம் தான் என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. 

இனவரைவியல் இல்லாத, அல்லது இனவரைவியல் ஆய்வுகள் செய்யப்படாத ஒரு இனக்குழுவின் வாழ்வினை அறிந்துகொள்ளவும் அப்படி இனவரைவியல் ஆய்வு செய்யப்பட்டிருப்பினும் அதுகுறித்த அறிதல் இல்லாதபோதும் அதனைப்படிப்பதில் ஆர்வம் இல்லாதபோதும் இதுபோன்ற ‘நாவல்’ வகைமையில் அடைக்கப்படும் புத்தகங்களைப் படிக்கலாம். மேலும் அவற்றையெல்லாம் விடுத்து அந்த மனிதர்கள் வீழ்ந்ததற்கான காரணங்களை அறிந்துகொள்ளலாம். இனவரைவியல் செய்யப்படாத இனக்குழுக்களின் அந்நாளைய சமூகப் பொருளாதாரக் கலாச்சாரப் போக்குகளையும் மக்களின் சிந்தனைப்போக்கினையும் அறிந்துகொள்ளவும் அவற்றைப்பற்றி ஒரு அவதானிப்பிற்கு வரவும் இவை உதவுகின்றன. 

அந்தவகையில் தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நூலை எவ்வித எதிர்பார்ப்புமின்றி வாசிக்க ஆரம்பித்து இரு தினங்களில் முடித்தேன். இருநூறு பக்க அளவிலான இந்த நாவல் வாசிக்க நன்றாக இருப்பினும் என்னுடைய அளவுகோலில் அது இனவரைவியல் ஆய்வாக நின்றுவிடுகிறது. ஆனால் இவ்வகைக் களம் & வாழ்க்கை முறை அதுகாறும் எழுதப்பட்டு வந்த தமிழ்ப் புனைவுகளில் இடம்பெறவில்லை என்பதை எம்.ஏ.நுஃமான் எழுதிய ‘தமிழ் நாவல் உலகில் ஒரு புதிய வருகை’ என்ற குறிப்பின் மூலம் அறியமுடிகிறது. மேலும் எம்.ஏ.நுஃமான் அதன் காரணமாகவே இது முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார். 

அந்தக்குறிப்பின் மூலமாகத் தமிழ் பேசும் முஸ்லிம்களின் சமூக வாழ்வு, முஸ்லிம்களின் வாழ்க்கைப் பின்னணியில் கற்பனைக் கதையாக அல்லாமல், சீர்திருத்த பிரச்சாரக் கட்டுக்கதையாக இல்லாமல் இஸ்லாம் சமூகம் குறித்த ஒரு எதார்த்தக் கதையை எழுதியதன் மூலம் மீரான் அந்த வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறார் என்கிறார். 

நம் தமிழக இனங்களிலேயே மிகக்கட்டுப்பாடானதும், சமய நெறிகளைக் கறாராகக் கடைப்பிடிக்கும் மதமாகவும் இஸ்லாம் மதத்தினைப் பார்க்கிறேன். நகர்ப்புறங்களில் இந்தக் கட்டுப்பாடு இன்று தளர்ந்துள்ளதாகவே அறிகிறேன். இப்பொழுதே இவ்வளவு கறாராகப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் இனமானது கல்வியறிவு பெறுவதற்கு முன்பாக எப்படி இருந்திருக்கும் என்பதை விளக்குகிறது இந்த நாவல். நாவலின் முதல் வரியிலேயே கதை நிகழும் காலம் சொல்லப்படுகிறது. ‘முதல் உலகப்போர் முடிந்த காலம்’. ஒருவகையில் கதைமுடிந்த காலம் எனக்கொள்ளலாம். 

இது சொல்லாமல் விடப்பட்டிருந்தாலும் அதனால் பாதகமொன்றும் நிகழ்ந்திருக்காது. காலம் சொல்லப்பட்டதால் இன்னும் நெருக்கமான பார்வை கிடைக்கிறது. ‘கிழக்கும் மேற்கும் பள்ளிவாசல்கள். தெற்கே கடல். தர்மபத்தன் என்று பழைய அரபிக் கிதாபுகளில் சொல்லப்பட்ட’ கடலோர கிராமமான தேங்காய்ப்பட்டிணம் ஊரின் வரைபடமும் தரப்படுகிறது. கிராப் வெட்டுவது, நவீன பாணி உடையணிவது ஆகியவை காபிர்களின் (முஸ்லிம் அல்லாதோர்) செயல்களாகக் கருதப்பட்ட காலம். 

அப்போது தேங்காய்ப்பட்டிணத்தின் ஊர்த்தலைவர் வடக்கு வீட்டின் அகமதுக்கண்ணு. ஊரின் முதல் குடியான அவரே அனைவருக்கும் முதலாளி. வடக்கு வீட்டில் அவரது மனைவி, இளம் வயதில் கணவனை இழந்தவளும் பரீது என்ற மனவளர்ச்சியில்லாத மகனையும் கொண்ட அவரது சகோதரி நுஹு பாத்துமா, அவரது செல்ல மகள் ஆயிஷா ஆகியோர் வசிக்கிறார்கள். அவரது அதிகாரத்திற்கு ஊரே கட்டுப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவரிடம் உத்தரவுகளைப் பெற்று அதனைச் செயலாற்றுவது மோதினார் அசனார் லெப்பை, பரீது, அவுக்காரு, கருப்பன் போன்றோர்கள் தான். இதுபோக ஒஸன்பிள்ளை நியாயவிலைக் கடை, அகமது ஆசானின் சுக்கு வென்னீர்க்கடை, அந்திக்கடை ஆகியவை ஊரில் அடையாளங்கள். 

அனைத்திலும் தனது அதிகாரம் செலுத்தப்படவேண்டும், ஊரின் மக்கள் அனைவரும் தனக்குக் கட்டுப்பட்டு எதிராக ஒரு சொல்கூடப் பேசாமல் இருக்கவேண்டும், ஊரின் நல்லது கெட்டதுகளில் தனக்கு அழைப்பு இருக்கவேண்டும், தான் வந்த பிறகே தொழுகை ஆரம்பிக்கப்படவேண்டும் போன்றவை அகமதுக்கண்ணுவின் ஆசைகள். மிகப்பெரிய அதிகாரக்கோட்டையினை ஊரில் எழுப்புகிறார். அந்த அதிகாரத்தின் மூலம் தனது இருப்பினை நிலைநாட்டிக் கொள்வதிலும் வறட்டு கௌரவத்திலும் ஒரு ஆனந்தம். அவரது அதிகாரக்கோட்டையின் தூண்களாக அசனார் லெப்பை, கருப்பன், பலவருடங்களாக வடக்கு வீட்டில் சேவகம் செய்துவரும் அவுக்காரு ஆகியோர் இருக்கிறார்கள். 

எங்கிருந்தோ வந்த செய்யிதினா முகம்மது முஸ்தபா இம்பிச்சிசிக்கோயாத் தங்ஙள் அகமதுக்கண்ணுவின் அதிகார நிலைநாட்டல் / கௌரவக் காரணங்களுக்காக வடக்கு வீட்டில் தங்கவைக்கப்படுகிறார். இதன் மூலம் ஒரு பெரிய மகானைத் தனது வீட்டில் தங்க வைப்பதில் சகி செல்வந்தர்கள் மத்தியில் அவரது புகழ் நிலைநாட்டப்பட்டு அவரது மீசையும் முறுக்கப்படுகிறது. தங்ஙள் அவர்களின் திருவிளையாடல்கள் பகடிகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. குறிப்பாகக் குழந்தைப் பேரில்லாத பாத்திமா தனது தாயாருடன் அவரைப் பார்க்க வருகையில் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள். ஒருவகையில் இந்தக்காலத்துப் போலி சாமியார்களின் பிம்பமாக இவரைப்பார்க்கிறேன். கிராம மக்கள் மென்மையான மனதுடையவர்கள். சாந்தசொரூபிகள் என்று சொல்லவில்லை, மூடநம்பிக்கைகளை மனமுவந்து பின்பற்றும் சென்சிட்டிவான வெள்ளந்திகள். அவர்களை எப்படிப் போலி சாமியார்கள் கைக்குள் வைத்திருந்தார்கள் என்பதனை இந்தப் பாத்திரம் மூலம் தெளிவுபடுத்துகிறார் ஆசிரியர். 

பெண்களின் நிலை: 

1) இளம் வயதில் கணவனை இழந்தவள்; வயதான கிழவனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டவள்; இளமையில் கிடைக்கும் சுகங்களை இழந்தவள்; போதிய மனவளர்ச்சியில்லாத பரீதின் தாய் நுஹு பாத்தும்மா. 

2) தந்து அதை மகனை மணமுடிக்க நினைக்கும் ஆயிஷா இறுதியில் பெரும் செல்வந்தன் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனும் பைத்தியமானதால் பிறந்த வீடு திரும்புகிறாள். 

3) ஆசிரியர் மெஹபூபின் மனைவி உடுத்தியிருக்கும் நவீன மோஸ்தர் உடைகளைப் பார்த்துத் தங்கள் கண்களாலேயே கூசவைக்கும் ஊர்ப்பெண்கள். ஆங்கிலப் பள்ளியை விரும்பாத ஊர் மக்களால் மெஹபூப் மற்றும் அவரது மனைவிக்கு நேரும் இடையூறுகள். இரவு நேரங்களில் பயத்துடனேயே தந்து கணவனைக் கட்டிக்கொண்டு படுத்திருக்கிறாள். 

ஊரிலேயே முற்போக்காகச் சிந்திக்கும் இரண்டு மனிதர்கள் சுறாப்பீலி வியாபாரம் செய்யும் மஹ்மூது மற்றும் புதிதாகக் கட்டப்பட்ட ஆங்கிலப்பள்ளிக்கு வரும் ஆசிரியர் மெஹபூப்கான். 

“எந்தப் பயலடி முதலாளி? கண்டவன் தோப்பை அபகரித்து ஹாரமான தேங்கா வெட்டிச் சாப்பிட்டுத் தொந்தி தடவி நடக்கவனா முதலாளி? அவனெல்லாம் துப்பாக்கி எடுக்காத கொள்ளைக்காரன்” ஒருவர் அதிகாரத்தை அலட்சியப்படுத்துவதன் மூலமும் கட்டுப்பாடுகளை மீறுவதன் மூலமும் முற்போக்காகச் சிந்திப்பதன் மூலமும் முதலாளியில் அதிகாரத் தூண்களைப் பலவீனமாக்குகிறார். இறுதிவரை எதிர்த்தபடியே இருக்கிறார். தனது மகள் திருமணத்திற்கு யாரும் வரவில்லை என்றபோதிலும் அவர் கலங்கி நிற்கவில்லை. 

“ஒரு நன்மையான விஷயத்துக்கு வந்தேன். அதில் நான் இறந்துவிட்டாலும் எனக்கு நன்மையுண்டு.., தனது சொந்த சமுதாயத்தை வேறு யாரால் திருத்த முடியும்? நாம்தான் திருத்தியாக வேண்டும். ஒளி கடந்து வராத இந்தச் சிறு கிராமத்துக்குள் ஒளியைக் கடத்தி விட வேண்டும். தனது சமுதாயத்தின் மூடிய கண்களைத் திறந்து விடவேண்டும். மூட நம்பிக்கையின் சகதியில் புதைந்து கிடக்கும் இந்தச் சமுதாயத்தைத் தன்னைத்தவிர வேறு யார் தூக்கி எடுக்க முடியும்? சில சோதனைகள் இன்னல்கள் உண்டாகலாம். சொந்த சமுதாயத்திற்காக அவ்வளவு கூடச் சகித்துக் கொள்ள வேண்டாமா?” 

மற்றவர் கல்வி மூலம் இவர்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவரமுடியும். கல்விதான் இவர்களைக் கரைசேர்க்கும். இவர்களுக்குக் கல்வி புகட்டுவது எனது கடமை என்று வளர்ச்சி நோக்கில் யோசிக்கும் ஆசிரியர். 

இவர்கள் இருவரின் பிரயத்தனங்களால் ஆட்டம் காணும் முதலாளியின் அதிகாரக்கோட்டை இறுதியில் ஆங்கிலப்பள்ளிக்கு (அவர்களது பாஷையில் காபிர் பள்ளி) தீவைத்தபின்பு ஓய்கிறது. தனது அதிகாரத்தை அதன் மூலம் மனதளவில் மீண்டும் நிலைநாட்டிக்கொள்கிறார் முதலாளி அகமதுக்கண்ணு. ஆனாலும் இறுதியில் அவரது அதிகாரத்தூண்கள் அனைத்தும் அவரைக்கைவிட்ட நிலையில் வீழ்ச்சியுற்று சரிகிறார். அவரது கடைசித் தோப்பினை விற்கும்போது அதனை ஏழைப் பெண்ணிடம் வஞ்சித்து அவர் தனதாக்கிக் கொண்டது சொல்லப்படுகிறது. 

தமிழ் இஸ்லாமிய கிராமம் ஒன்றின் கதை என்று சொல்லலாம்; அதிகாரத்தின் வீழ்ச்சி என்று சொல்லலாம்; தனது சமூகத்திற்குக் கல்வி புகட்ட முயன்ற ஒருவனின் தோல்வி என்று சொல்லலாம்; அதிகாரத்திற்கு எதிராக மஹ்மூது பெற்ற வெற்றி என்று சொல்லலாம்; மதவாத மூடநம்பிக்கைகளால் ஆண் அதிகார மையத்தினாலும் ஒடுக்கப்பட்ட பெண்களின் நிலையைக் கூறும் நாவலாகவும் கொள்ளலாம். ஒவ்வொருவர் வாசிப்பிலும் ஒரு கோணம் புலப்படலாம். 

இஸ்லாமிய சமூக வாழ்க்கையைப் பிரதிபலித்த நாவல்கள் அதிகம் நான் வாசித்ததில்லை. மீஸான் கற்கள் வாசித்திருக்கிறேன். இன்றும் மனதிற்கு நெருக்கமான நாவல் அது. அதன் தாக்கம் வலுவாக இந்த நூலில் தெரிகிறது. அதுவும் ஒரு நவீன மாற்றங்களுக்குத் தன்னைப் பொருத்திக்கொள்ளாத குடும்பத்தின் வீழ்ச்சியைத் தான் பேசுகிறது. அதிலும் ஒரு இளவரசி கதை வருகிறது. குதிரை வருகிறது. அதன் மறைவு வருகிறது. மேலும் குளச்சல் முகமது யூசுப்பின் அற்புதமான மொழிபெயர்ப்பில் அது மொழிபெயர்ப்பு நாவல் போன்றே தெரியவில்லை. 

இதனையெல்லாம் தாண்டி அந்நாவல் சுடுகாட்டிலுள்ள மீஸான் கற்களைக்கொண்டு அந்த ஊரின் கதையைச் சொல்லும். மென்மையான நடையும், கதைசொல்லும் பாணியும் அனைத்தையும் கடந்து அதன் உள்ளடக்கமும் மனதிற்கு நெருக்கமாக அமைந்தது. அந்தநாவல் இனவரைவியல் என்பதைத்தாண்டி அற்புதமான புனைவு நூலாகத் தெரிகிறது. 

அதன் அளவிற்கு என்னைக்கவராத போதிலும் மீரானின் அழகான கவித்துவமான எழுத்துநடையும் தமிழக இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் அவர்களது சடங்குகள் ஆகியவற்றைச் சித்தரித்ததன் மூலம் தமிழில் தவிர்க்க முடியாத நாவலாக இருக்கிறது ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’. மிகப் பொறுப்பான முறையில் தனது சமூகத்தின் மேலிருந்த அக்கறையிலும் அதன் மேலிருந்த விமர்சனத்திலும் எழுதப்பட்ட படைப்பாகவே ஒரு கடலோர கிராமத்தின் கதை நாவலைப் பார்க்கமுடிகிறது. எழுத்திலே மிகவும் தன்மையான மனிதனாகத் தெரிகிறார் மீரான். திருநெல்வேலியில் தான் தற்போது நானும் வசிக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் சந்திக்க வேண்டும். 
-யமுனை செல்வன். 

yamunaiselvan@gmail.comவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)