பதிவு செய்த நாள்

06 பிப் 2017
13:04

 காலையில் நடைபயிற்சி செய்துவிட்டு, அந்த பூங்காவில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார் கணேசன்.

என்ன கணேசன் நல்லாருக்கீங்களா? 

ரொம்ப வருடங்களுக்கு முன் பரிச்சயமான குரலை, இப்போது மீண்டும் கேட்டபோது தன் கண்களைக் குரல் வந்த திசையில் திருப்பினார். அட! ஆறுமுகம். தன் மகள் கல்லூரிப் படிப்பிற்காக மூன்று வருடங்களுக்கு முன் வெளிநாடு சென்றவர். இப்போதுதான் வந்திருக்கிறார். மேலும் பக்கத்துவீட்டில் குடியிருந்ததால் கணேசனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் வேறு.

நல்லாருக்கேன், நீங்க நல்லாருக்கீங்களா? எப்ப நம்ம ஊருக்கு வந்தீங்க? உங்கப் பொண்ணு படிப்ப முடிச்சிருச்சா? தன் நெடுநாளைய நண்பனைக் கண்ட ஆவலில் பதில்களை எதிர்பாராது கேள்விகளை அடுக்கினார் கணேசன். ஏதோ இருக்கேன். மனசுக்கு நிம்மதி தேடித்தான் இங்க வந்தேன். இனிமே நான் அங்க போகப் போறதில்ல.

அவரிடமிருந்து இப்படிப்பட்ட பதில்கள் வருமென்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. என்ன காரணமென்று கணேசன் கேட்க எத்தனித்தபோது ஆறுமுகமே தொடர்ந்தார். பெத்தப்பிள்ளைக்காக வேலையைவிட்டு, ஊரைவிட்டு, உறவைவிட்டு, என் பிள்ளை எதிர்காலந்தான் என் எதிர்காலம்னு நினைச்சு நானும் என் மனைவியும் அங்கப் போனது பெரிய தப்பாப்போச்சு.

அப்படி என்னதான் ஆச்சு, ஆறுமுகம்?

என்னத்த சொல்றது, அங்க போய், ஒரு ஆறு மாசம் நல்லாதான் போச்சு. அதுக்கு அப்புறம் என் மகளுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல. முதல்ல ஒரு ஃபோன் கேட்டா, சரி கல்லூரி படிக்கிற பொண்ணாச்சேன்னு வாங்கிக் கொடுத்தேன். அதிலிருந்து நாங்க இருக்கோமா இல்லையான்னு கூடப் பார்க்கறது இல்ல. எந்நேரமும் பேச்சுதான். நிறைய வயசுப் பசங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வர்றா. சொல்லாம கொள்ளாம வெளியே போயிட்டு வர்றா. காசத் தண்ணி மாதிரி செலவழிக்கறது மட்டுமில்லாம, கொடுக்கலைன்னா சண்டை போடுறா. இது எல்லாத்துக்கும் மேல அவ படிக்கற கல்லூரிக்குள்ள எங்களை நுழைய விடமாட்டேங்கறா, ஏன்னா அங்க எல்லாரும் வேற மொழியிலதான் பேசுவாங்களாம். அவளுக்கு நாங்க இருந்தா கெளரவக் குறைச்சலாம். ஏன்னா எங்களுக்கு தமிழ் மட்டுந்தானே பேசத் தெரியும் என்று சொல்லும்போதே அவர் குரல் உடைந்து கண்களில் நீர் பெருகியது. இருந்தாலும் அதை  துடைத்துக்கொண்டு, நான்தான் முன்னப்பின்ன யோசிக்காம தப்பு பண்ணிட்டேன். நீங்களாவது உங்கப் பொண்ண பார்த்து வளர்க்கப்பாருங்க. படிக்கப்போகுது வேலைக்குப் போகுதுன்னு தப்பித்தவறி வெளிநாட்டுக்கு மட்டும் அனுப்பி வச்சுறாதீங்க.

இந்த வார்த்தைகள் கணேசனை உலுக்கி எடுத்துவிட்டன. மனம் வெதும்பி இருந்த நண்பரை ஒருவழியாகத் தேற்றிவிட்டு, வீடு வந்து சேர்ந்தார் கணேசன். நடைபயிற்சி முடித்து மனம் புத்துணர்வுப் பெற்று திரும்ப வேண்டியவர் மிகவும் குழம்பிப் போயிருப்பது அவரது முகப்பாவனையிலேயே தெரிந்தது. மெதுவாக வந்து, தான் எப்போதும் அமரும் சோபாவில் உட்கார்ந்துக் கொண்டார்.

அப்பா, வந்துட்டீங்களா. சந்தியாவின் குரல் கேட்டது.

ம்.....இப்பதான் வந்தேன்மா.

என்னப்பா இது, எப்பவும் நடைபயிற்சி முடிச்சுட்டு வந்ததுக்கு அப்புறம் முதல் வேலையா காப்பி கேப்பீங்க. இன்னைக்கு அந்தக் குரலையே காணோம்.

அது வந்தும்மா... என்று இழுத்தவர்முன் ஆவிப் பறக்கக் காப்பி வரவும் வேறுவழியில்லாமல் குடித்தார்.

என்னப்பா ஏதோ சொல்ல வந்தீங்களே?

அம்மாடி சந்தியா, நம்ம முன்னாடி முடிவு செஞ்சோம்ல, அந்த வெளிநாட்டுப் படிப்பு. அது வேண்டாமே. நீ எடுத்த மார்க்குக்கு இங்கேயே நல்ல கல்லூரியாப் பார்த்து நான் சேர்த்து விடுறேன். அதுவும் நீ மாவட்டத்திலேயே முதலிடம் வேற, உனக்கு இடம் கொடுக்கறதுக்கு யார் தயங்குவான்னு சொல்லு? என்பதை மிகவும் தயங்கித் தயங்கி கூறினார் கணேசன்.

என்னப்பா ஆச்சு? ஏன் என்ன வெளிநாடு அனுப்பறதுக்குத் திடீர்னு தயங்குறீங்க.

சிறிதுநேர மெளனத்திற்குப் பிறகு, பூங்காவில் தானும் ஆறுமுகமும் பேசிக்கொண்டிருந்ததைப் பற்றி சொன்னார்.

ஓ... இதுதான் விசயமா. வெளிநாட்டுக்குப் போனா நானும் அந்த மாதிரி மாறிடுவேன்னு பயப்படுறீங்க, அப்படித்தானே.

ம்... என்று தலையசைத்து மெளனமாக இருந்தவர், பின் மெதுவான குரலில், எதுக்கும் நான் சொல்றத கொஞ்சம் யோசிச்சு பாரும்மா என்றார்.    

இதுல யோசிக்கறதுக்கு ஒண்ணுமில்லப்பா. எல்லாத்துக்கும் மனசுதான் காரணம். இப்ப ஆறுமுகம் சார், அவர் சந்திச்ச சூழ்நிலைகளை உங்ககிட்ட சொல்லியிருக்காரு. அது உங்க நினைப்புக்கு எதிர்மறையா இருந்ததால உங்களால ஏத்துக்க முடியல. அதுவே இதே மாதிரி வேறொருத்தர், நீங்க நினைச்சபடி நல்லதா சொல்லியிருந்தா, நான் வெளிநாடு போகணும்னு என்னைவிட நீங்கதான் அடம்பிடிச்சிருப்பீங்க. ஒண்ணு மட்டும் சொல்றேன்பா, எல்லாருக்கும் எல்லா இடமும் நேரமும் நல்லதா அமைஞ்சிடாது. ஒரு சிலருக்கு சூழ்நிலைகள் தானா அமைஞ்சிடுது. ஆனா சிலருக்கு அப்படியில்லை. அவங்க அந்தந்த சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி தன்னை மாத்திக்க வேண்டியதாயிருக்கு. ஆனா அதேசமயம் இலட்சியத்துக்காக, என்னோட தன்மானத்தை ஒருபோதும் இழந்துறமாட்டேன்பா. அதுக்காக நான் போராடுவேன். ஏன்னா, நான் உங்கப் பொண்ணுப்பா! 

பெரிய புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது கணேசனுக்கு. தான் செல்லமாய் வளர்த்தாலும் இதுவரை அதிர்ந்துகூட பேசாதவள், இன்று இவ்வளவு படபடவென பொரிந்து தள்ளியதைப் பார்த்து பிரமித்துப் போயிருந்தார். ஆனால் அவள் சொல்வதிலும் மிகப்பெரிய வாழ்க்கை நியதி அடங்கியிருப்பதை அவர் உணராமல் இல்லை.

சிலைப்போல் அமர்ந்திருந்த அவரின் கைகளைப் பற்றிக்கொண்டு, அப்பா, இதுநாள் வரையிலும் எனக்கு ஒரு குறையும் நீங்க வச்சதில்ல. சொல்லப்போனா சின்ன வயசிலேயே அம்மாவ பறிக்கொடுத்த  என்னைய வளர்த்து பெரியாளாக்கணுமுன்னு இரண்டாவது கல்யாணம் கூட பண்ணிக்காம நம்ம ஊரிலிருந்து இந்த ஊருக்கு மாற்றல் வாங்கிட்டு வந்தீங்க. இன்னும் சொல்லப்போனா, அம்மாவுடைய அன்பு இல்லாம நான் தவிச்ச தவிப்பைவிட, நான் நல்லபடியா வளர்றதுக்காக நீங்க செஞ்ச தியாகங்கள் தான் அதிகம். நீங்க எனக்காக விட்டுக் கொடுத்ததெல்லாம் போதும். இனிமேலாவது உங்களைப் பத்தி யோசிங்க. இந்த தற்கால இடைவெளியில உங்களுக்குன்னு நிறைய நேரம் செலவழியுங்கப்பா. நான் என்னோட நல்லதுக்காக மட்டும் வெளிநாட்டுக்குக் கிளம்பலப்பா, உங்களுடைய நல்லதுக்காகவும் தான் போறேன். 

   தன் மகளின் தீர்க்கமானப் பார்வையையும் பரிவான வார்த்தைகளையும் கேட்ட கணேசன், தன் குழப்பம் மறந்து தெளிவு பிறந்ததற்கு அடையாளமாய் புன்னகைத்தார். மகள் ரூபத்தில் பிறந்திருக்கும் தன் தாயைக் கண்டு! சந்தியாவின் இதழ்களிலும் இப்போது புன்சிரிப்பு மலர்ந்திருந்தது.                                 

- நிரஞ்சன் கணேசன்                 வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)