தலைப்பு : தென்னிந்திய கிராம தெய்வங்கள்
ஆசிரியர் : ஹென்றி ஒயிட்ஹெட் (தமிழில். வேட்டைS.கண்ணன்)
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
விலை : 160/-

பதிவு செய்த நாள்

06 நவ் 2017
15:32

  மிழ்ச் சமூகம் போன்ற நீண்ட நெடிய பண்பாட்டு வரலாற்றைக் கொண்ட மக்களின், விழாக்கள், சடங்கு சம்பிரதாயங்கள், இன்னபிற நிகழ்த்துதல்கள் அனைத்தும் அவர்தம் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை சமூகக் கூட்டு எடுத்துரைப்பாகும். காலங்காலமான சமூக நினைவுகளைக் கூட்டாக வெளிப்படுத்தும் அம்சம். இவற்றினூடாகவே ஒரு தொன்மையான சமூகத்தின் வரலாறும், வாழ்வும் இரண்டறக் கலந்து வெளிப்படுகின்றன. 
பழங்காலம் தொடங்கி, இடைக்காலம் ஊடாகக் காலனிய காலம் வரை தென்னிந்திய சமூகங்களின் சமயம் சார்ந்த மேலைப் புலத்தாரின் விவரிப்புகளும், பயணக் குறிப்புகளும் ஆவணங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட போர்த்துகல் பயணி பார்போசா எழுதிய சாதிகள் பற்றிய குறிப்புகளும், பிரெஞ்சு பயணி டேவர்னீ தொகுத்த 72சாதிகள் பற்றிய குறிப்புகளும் அக்காலகட்டத்தின் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவையாக அமைந்தவை. 
அவர்களைப் போலவே, சீகன்பால்க், அபே துபுவா, ஹென்றி ஒயிட்ஹெட், எட்கர் தர்ஸ்டன், மெக்கன்சி, பால் கன்னர்டன், எல்மோர், ஆகியோரின் ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சீகன் பால்க், தென்னிந்திய கடவுள்களின் குடிவழியின் வழியாகச் சமயங்களையும் தெய்வங்களையும் ஆராய்ந்தார். அபே துபுவா இந்திய மக்களின் மதம்- பழக்க வழக்கங்கள்-நிறுவனங்கள் நூலில் சமூகம் சமயம் பண்பாடு ஆகியவை குறித்தே ஆழ்ந்த கவனம் செலுத்தினார். 
எட்கர் தர்ஸ்டன் தென்னிந்திய சாதிகள், பழங்குடிகள் குறித்தும், மெக்கன்சி தமிழகப் பழங்குடிகள் பற்றின ஆவணங்களையும் தொகுத்தளித்தார். இவர்கள் போலல்லாமல் தென்னிந்தியாவில் நிலவிய சமூகக் கருத்தியல்களைக் குறித்து எதிர்மறையான வாதத்தை முன்வைத்த மார்க்ஸ் முல்லர், மக்களின் மூட நம்பிக்கைகளையும் பகடி செய்து எழுதிய அமெரிக்கப் பெண்மணி மிஸ்.காத்ரின் மேயோ போன்றோரின் பதிவுகளும் கவனிக்கத் தக்கவை. இந்த வழித்தடத்தில் முக்கியமானதாக ஹென்றி ஒயிட்ஹெட்டின் ஆய்வுகள் உள்ளன. 
ஹென்றி ஒயிட்ஹெட் எழுதிய ‘தென்னிந்திய கிராம தெய்வங்கள்’ நூலின் அடிப்படை அவரது நேரடி களப்பணியில் மக்களின் வாய்மொழி மூலமாக அறிந்த கருத்துகளின் திரட்டுக்களே! மிகச்சில இடங்களில் எழுதி அனுப்பப்பட்ட கடிதங்களின் தகவல்களைப் பயன்படுத்தியிருக்கிறார். நான்கு வேறு வேறு மொழி பேசும் மாநில மக்களின் சமயங்களை ஒருங்கிணைத்து, ஒரே பண்பாட்டுப் பகுதியாக ஆராய்ந்த ஹென்றி ஒயிட் திராவிடவியல் கருத்தாக்கத்தில் ஒரு முக்கியமான ஆய்வுமுறையை முன்மொழிகிறார். 
இந்தத் தன்மையின் மூலமாகப் பல்வேறான நம்பிக்கைகளையும், அவற்றின் முறையான காரணங்களையும் ஆராய்கிறார். இத்தகைய ஆய்வு முறைகளின் அடித்தளத்திலே பின்வந்த கல்விப்புலம் சார்ந்த ஆய்வுகள் வளர்த்தெடுக்கப்பட்டன. இன்றைக்குப் பயன்பாட்டிலுள்ள ஆய்வுமுறைகளில் கோட்பாட்டு வளர்ச்சிகள் ஏற்பட்டிருப்பினும், அவற்றிற்குக் காலனிய காலத்தில் தொகுக்கப்பட்ட எண்ணற்ற ஆவணங்களே மூல ஆதாரமாக விளங்குகின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது ஹென்றி ஒயிட்டின் தென்னிந்திய கிராம தெய்வங்கள் நூல் ஓர் அரிய ஆவண மற்றும் ஆய்வு முயற்சியாகும். 
இந்நூலின் மூல ஆசிரியரான ஹென்றி ஒயிட் மொத்தம் ஒன்பது இயல்களைக் கையாண்டுள்ளார். சமயங்களின் தலைமைக் கூறுகள், கிராம தெய்வங்களின் பெயர்கள், குணப்பான்மை, செயல்கள், வழிபாடு, தெலுங்கு, கன்னட, தமிழ்நாட்டு வழிபாட்டு முறைகள், நாட்டாரியல் கருத்துரைகள், கிராம தேவதை வழிபாடு தோன்றியதற்கான சாத்தியக் கூறுகள், சமூக ஒழுக்கத்தில் மதங்களின் செல்வாக்கு ஆகியவற்றோடு பிற்சேர்கையாக எகிப்தின் சமயச் சடங்கினையும், ஆவி நம்பிக்கையில் இரும்பின் பயன்பாட்டையும் தொகுத்தளித்திருக்கிறார். 
ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக எழுதப்பெற்ற இந்நூல் இன்றைக்குத் தமிழில் வாசிக்கக் கிடைத்திருப்பது பதிப்பாளர், மொழிப்பெயர்ப்பாளர் ஆகியோரின் சீரிய முயற்சிக்குச் சான்றாகும். 
-நூல்வெளி.காம் 
புகைப்படம் : ரெங்கா கருவாயன்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)