தலைப்பு : கடவுச்சீட்டு
ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன்

பதிவு செய்த நாள்

08 நவ் 2017
11:16

  சுப்ரபாரதிமணியனின் 15வது நாவலான “கடவுச்சீட்டு”  மலேசியப் பின்னணி நாவலாக  சமீபத்தில் வெளியிடப்பட்டது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், அவரது மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இதனை சுப்ரபாரதி மணியன் எழுதியிருக்கிறார்.கோலாலம்பூர்-செந்தூல் பகுதியில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையை முன்னிறுத்தும் இந்நாவல் ஒரு வெளிநாட்டு தமிழ்ப்பெண்ணின் கனவு சிதைந்து போவதன் வழியாக அந்நாட்டின் சமகால வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறது ‘கடவுச்சீட்டு’ நாவல்.

பெண் பார்க்க்கும் படலத்தின் போதே மலேசியா பற்றி தன்  வருங்காலக் கணவனிடம் பல சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். தமிழர்கள் எவ்விதம் வாழ்கிறார்கள், மதச் சடங்குகள், சட்டதிட்டங்கள், மதுப்பழக்கம் குறித்தெல்லாம் தன் ஐயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறாள்.

திருமணமாகி மலேசியா வந்த பின்பு அவளது கணவன் குடிகாரனாக இருப்பதைக் கண்டு மனமுடைகிறாள். மலேசியாவின் சுகாதாரம், லஞ்சம் இல்லாத மருத்துவமனைகள், போன்றவை அவளை மகிழ்வித்தாலும் தினசரி வாழ்வின் யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது.

நாவலின் வழியாக மசாஜ் கிளப்புகள் தொடங்கி, லிட்டில் இந்தியா ஜோசியர்கள் வரை மலேசியா பற்றிய பல விபரங்களை குறிப்புகளாகவும், உரைநடையாகவும் கதையோட்டத்தோடு பொருத்தியிருக்கிறார் சுப்ரபாரதி மணியன். தோட்டப் புறத்தில் பங்களாதேஷிகள், இந்தோனேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து தமிழர்களின் நிலை மேசமாகி, அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்ட சமீப நிகழ்வுகள் வரை ‘கடவுச்சீட்டு’  நாவலில் பதிவாகியிருக்கின்றன.

தமிழ் இளைஞர்களின் வன்முறைக் கலாச்சாரம்,  கட்டை, சரக்கு பழக்கம், சீனர்களின் வாழ்க்கை முறை, பொருட்களை எரித்தல், இந்தோனேசியப் புகை பாதிப்பு போன்றவையும் அவ்வகையிலே இடம்பெறுகின்றன. இவ்வளவு சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்கும்போது, மூன்று வேளை உணவையும் உணவு விடுதிகளில் சாப்பிடும் பழக்கத்தை, தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கேடாக  இருக்கும்போது உணவு விடுதிகளை அதிகம் நாடாமலிருந்த பழக்கத்தையும் பொருத்திப் பார்க்கிறார்.

நாவலை முழுவதும் வாசிக்கும்போது, வலி வேதனை, சோதனைகளை மட்டுமே பேசவேண்டுமா என்ற கேள்வி எழும்பாமல் இல்லை. ஆனால், மலேசிய தமிழ் குடும்பம் ஒன்றின் யதார்த்த வாழ்க்கையை இந்நாவலின் வழியாக வெளிக்காட்டி இருக்கிறார் சுப்ரபாரதி மணியன். அகிலனின் “பால் மரக்காட்டினிலே “ அறுபதில் இருந்த மலேசியா தமிழ்ச் சமூகத்தை பிரதிபலித்தது என்றால் சுப்ரபாரதிமணியனின் நாவல் இப்போதைய சூழலில் எழுதப்பட்டிருக்கும்  முக்கியப் படைப்பு என்ற வகையில்  சிறப்பு பெறுகிறது.  -நூல்வெளி.காம் 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)