பதிவு செய்த நாள்

11 நவ் 2017
12:16

ரங்கள் அடர்ந்த காட்டில் அந்தச் சிங்கம் வசித்து வந்தது. அதற்கு ரொம்ப நாளாகவே ஒரு கவலை மனதை அரித்துக்கொண்டிருந்தது. என்ன கவலை தெரியுமா? அதிகாலையில் சேவல் கூவுகிற சத்தத்தைக் கேட்டவுடனே, அதற்கு உடம்பு நடுங்க ஆரம்பிக்கும். ‘டக்’கென்று ஒரு பயம் சிங்கத்தைச் சூழ்ந்துகொள்ளும்; சட்டென்று உறக்கம் கலைந்துவிடும். பிறகு உறக்கமே வராது.
“என்ன வாழ்க்கை இது! காட்டுக்கே ராஜா என்று பெயர் எடுத்தவன். என்னுடைய பலத்துக்கு ஈடு இங்கே எவரும் இல்லை. இருப்பினும், இந்த அற்ப ஜீவன் சேவல் கூவும்போது, எனக்குப் பயமாக இருக்கிறதே? இப்படியே எத்தனை நாட்கள் பயந்து பயந்து வாழ்வது?” என்று நினைத்து நினைத்துக் கவலைப்பட்டது.அதிக கவலை, அதன் ராஜநடையை தளர்ந்து போகச் செய்தது. உறக்கம் போதாமல் கண்கள் எப்போதும் சோர்வுடனே இருந்தன. அன்றும் தூக்கம் வராமல் எழுந்து நடையைக் கட்டியது. அப்போது, அதன் எதிரில் யானை ஒன்று தன் முகத்தை மிகவும் சோகமாக வைத்து அடித்துக்கொண்டே வந்தது. அதைப் பார்த்த சிங்கம், “என்னப்பா சோகமா இருப்பது போலத் தெரியுது? உனக்கு என்ன கவலை? உன்னோட உடல் பலத்தை பார்த்தாலே பிராணிகள் கிடுகிடுவென நடுங்குமே? ஏன் இப்படி முகத்தைப் பயந்தது மாதிரி வச்சிக்கிட்டு இருக்க?” என்று கேட்டது.
“என்ன சொல்வது. இவ்வளவு பெரிய உருவமானாலும், பிரச்னைகள் இருக்கத்தானே செய்யுது. எப்பவுமே என் காதுகளை முன்னும், பின்னும் ஆட்டிக்கொண்டே இருக்கிறேனே ஏன் தெரியுமா? இதோ என் காது பக்கத்துல பறக்குதே குளவி இதைப் பார்த்துத்தான். இது மட்டும் என் காதுக்குள் போய் கொட்டிவிட்டால், போதும் என் உயிரே போயிடும். இந்த மாதிரி குட்டிகுட்டி ஜந்துக்கள் என் காதுக்குள்ள போகாமல் இருக்கத்தான், இப்படி என் காதுகளை ஓயாமல் ஆட்டிக்கொண்டே இருக்கேன்; சில நேரங்களில் சலிப்பா தோணுது, என்ன வாழ்க்கை இது? என்ன செய்ய நம் படைப்பு அப்படி!” என்று சொல்லி, பெருமூச்சு விட்டபடி யானை கடந்துபோனது.
யானையின் பதில், சிங்கத்தைச் சிந்திக்க வைத்தது, “இந்த உலகில் பிறந்த எல்லோருக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறதுபோல. நான், ஏதோ எனக்கு மட்டும் பிரச்னை என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். இதையே யோசித்துக்கொண்டிருந்தால், நம் மனம்தான் பாதிக்கப்படுகிறது. உடல் பலம் எல்லாம் போய், சோர்ந்து வாழ்க்கையே சூனியமானது போலத் தோன்றுகிறது.
இனி, இப்படி தேவையில்லாத கவலையை மறந்துவிட்டு, நல்ல விஷயங்களையே யோசிக்கப் போறேன். அப்போதான் உடம்பும், மனசும் தெம்பா இருக்கும், கவலைப்பட ஆரம்பிச்சா, அந்தக் கவலையே நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும்’ என்ற உண்மையை உணர்ந்து கொண்டது. இப்போது சிங்கத்தின் நடையில் பழைய கம்பீரம் தெரிந்தது.
- அறிவுவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)