தலைப்பு : stories after they slept
ஆசிரியர் : S.D. Ilayaraja
பதிப்பகம் : Notion Press

பதிவு செய்த நாள்

13 நவ் 2017
07:41

  இன்ஜினியரிங் பரிதாபங்கள் போல் இன்ஜினியரிங் கலந்த இங்லிஷ் பரிதாபங்கள் அடங்கிய நூலாக  உள்ளது stories after they slept  ராஜா சுலோசனா , கிருஷ்ணகிரியில் பிறந்து,பள்ளிப்படிப்பு முடித்து, சென்னை வந்து, இன்ஜினியரிங் படித்துமுடித்துவிட்டு, வேலை தேடி கஷ்டப்பட்டு, வேலை கிடைத்ததும், மேல் படிப்பு படிக்க ஆசைப்பட்டு, ஆங்கிலம் பேச தெரியாமல் போகிற இடமெல்லாம் அசிங்கப்பட்டு, முயற்சியை கைவிடாமல் எல்லா சவால்களையும் தாண்டி தன் எம்.பி.ஏ கனவு நிறைவு பெறுகிறதா என்பது தான் கதை. சரி இன்ஜினியரிங் கதை என்று படிக்க தொடங்கினால், முதலில் ராஜாவின் கேரக்டர் காணவில்லை. மூன்று வாண்டுகள் பற்றிய கதை ஆரம்பிக்கிறது. பின் ராஜா இந்த இரண்டு வாண்டுகளுக்கும் கதை சொல்லும்போது ராஜாவின் கதை முழுக்க பிளாஸ்பேக்கில் ஓடுகிறது. கிருஷ்ணகிரியில் பிறந்த ராஜாவின் அப்பா சென்னையில் இசை கச்சேரி குழுவில் இருக்கிறார். பெரிய அளவுக்கு வருமானம் இல்லை. அதனால் சொந்த ஊருக்கு திரும்புகிறார் அப்பா. அம்மாவுக்கு அரசு பணி கிடைக்கிறது. ராஜாவுக்கு ஒரு அக்கா, ஒரு அண்ணன் என உடன்பிறந்தவர்கள் இருவர். இந்த கதையில் அக்கா பற்றியும், அப்பா பற்றியும் அதிகம் பேசப்படவில்லை. அம்மாவும், அண்ணனும் தான் முக்கிய முடிவுகளை ராஜா வாழ்க்கையில் எடுக்கின்றனர். ராஜா பள்ளி படிப்பை முடித்துவிட்டு டாக்டருக்கு படிக்க வேண்டுமென்பதே அம்மாவின் விருப்பம். அதனால், பள்ளி படிப்பை முடித்துவிட்டு முதல்முறை  சென்னை வந்த ராஜாவுக்கு வாழ்க்கையே புதிதாக இருந்தது. 

டாக்டர் சீட் கிடைக்காததால், மனத்தை தேத்திக்கொண்டு இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்க்கப்படுகிறார். அங்கு தான் காத்திருந்தது ராஜாக்கு ஒரு அதிர்ச்சி. இத்தனை நாட்கள், பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த ராஜாவுக்கு கல்லூரியில் நடத்தும் பாடம் ஒன்றும் புரியவில்லை. காரணம், எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம். முதல் நாள் கல்லூரியில் சேரும்போது காதல் கொண்டேன் தனுஷ்போல் இருந்த இவர் நண்பர்கள் உதவியால் ஆங்கிலம் கற்கிறார். அது போதாதென்று ஆங்கிலம் கற்றும் டியூஷனுக்கும் போகிறார். ஏதும் சரிப்பட்டு வரவில்லை. அம்மா, அண்ணா, இவர்களின் உரையாடல் தான் அதிகம் கேட்கப்படுகிறது.  

ஒரு சமயத்தில் ராஜாவுக்கு இன் ஜினியரிங் மீது ஆர்வம் இல்லாமல் பாடகராக வேண்டுமென்று ஆசைப்படுகிறார். அம்மாவுக்கு பயந்த பிள்ளை ஆதலால், இன்ஜினியரிங் பக்கமே சென்றுவிடுகிறார். பள்ளி காலமும் முடிந்தது, கல்லூரிக்கும் வந்துட்டாச்சு, காதல் கதையே இல்லையென்று இருக்கும் போதுதான், இரண்டு நாள் பார்த்த பெண்ணிடம் தன் காதலை ராஜா சொல்ல அதற்கு சுவாரசியமான கதையை சொல்லியிருக்கிறார் அந்த பெண். எப்படியோ அதற்க்கு பின் ராஜா பேக் டூ பார்ம். சிலர் எவ்வளவு தான் பள்ளியில் ஆங்கிலம் படித்திருந்தாலும், அதை  நடைமுறையில் செயல்படுத்தாமல் இருப்பதை, ராஜா ஆங்கிலத்தால் கஷ்டப்படுவதை பார்த்து உணரமுடிகிறது. இப்படி கதை போய்க்கொண்டிருக்கும் போது, பிளாஷ்பேக்கில் தான் இருக்கிறோம் என்பது மறந்துவிடுகிறது.  

பல இன்டர்வியூக்களுக்கு பின்னரும் வேலை கிடைக்கவில்லை. ஆங்கிலம் தான் அதற்கு காரணமாக இருந்தது. இன்டர்வியூ கலந்தாய்வில் ஆங்கிலத்தில் பேச தங்கியதால் ராஜாவுக்கு வாய்ப்புகள் தவறி போய்க்கொண்டே இருந்தன. ஆங்கிலம் இஸ் அ மஸ்ட்' என்றாகிவிட்டது. ஒரு வழியாக தெரிந்த ஆங்கிலத்தில் பேசி வேலையும் கிடைத்து விடுகிறது. ராஜாவின் எண்ணம் எம்.பி.ஏ செய்ய வேண்டும் என்பதிலேயே இருந்தது. கதையில் ராஜா ''நான் இன்னும் சாதிக்க வேண்டும் என்று கூறுவதை அடிக்கடி கேட்கலாம். 

கிடைத்த வேலையும் விட்டுவிட்டு, எம்.பி.ஏ படிக்க முடிவு செய்து புவனா ஆரிசியர் நடத்தும் கோச்சிங் சென்டரில் சேர்ந்து படிக்கிறார். லாவண்வயா என்ற பெண்ணின் நட்பு ஒரு இரயில் பயணத்தின் போது கிடைக்கிறது. பின்பு தான் லாவண்யா புவனா மேடமின் சொந்தம் என் ராஜாவுக்கு தெரிகிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பது உண்மை தான். புவனா ஆசிரியரின் குடும்பத்தில் ஒருவனாக மாறிவிடுகிறார் ராஜா. புவனா மேடமின் உதவியால் எம்.பி.ஏ நுழைவு தேர்வை சந்திக்க தயாராகிறார் ராஜா. இதற்கிடையில் லாவண்யா மேல் காதல் வந்துவிடுகிறது. காதலால் திசை மாறாமல், தன் பயணத்தை கவனம் செலுத்தினாரா ராஜா, எம்.பி.ஏ நுழைவு தேர்வை எப்படி எதிர்கொண்டார், காதலிலும், படிப்பிலும் இரண்டிலும் வெற்றி கண்டாரா, ஆங்கிலம் எதிரியாகவே இருந்துவிட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலுடன் கதை முடிகிறது. 

பிளேஷ்பேக்காக ராஜா தன் கதையை வாண்டுகளுக்கு சொல்ல ஆரம்பித்த கதை 228ஆம் பக்கத்தில் முடிவடைகிறது. ஆங்கிலம் பேச சிறமப்பட்டவரால், இந்த புத்தகம் இந்திய ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டது என்று  சொன்னால் வியப்பாக உள்ளது. அதுவும் முதல் புத்தகம் இப்படி எளிமையாக எழுதி இருப்பது பாராட்டுவதற்குறியது. கதை முடியும் பொழுதுதான் புத்தகத்தின் பெயர் புரிகிறது! 
- சுவாதி, சென்னை. 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)