பதிவு செய்த நாள்

13 நவ் 2017
17:15

நாம் தமிழ் மொழியில் படிக்கிறோம். எழுதுகிறோம். தமிழ்ச்சொற்கள் என்று நம்பித்தான் எண்ணற்ற சொற்களையும் பயன்படுத்துகிறோம். அவை தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதப்படும் சொற்கள் அனைத்தும் தமிழ்ச் சொற்களே என்றும் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமது அன்றாடப் பயன்பாட்டில் தமிழ், பேச்சிலும் எழுத்திலும் தமிழ்ச்சொற்களை மட்டுமே பயன்படுத்துவதில்லை. நம் மொழியில் தமிழ்ச் சொற்களைப் போலவே எண்ணற்ற பிறமொழிச் சொற்களும் கலந்திருக்கின்றன. சமஸ்கிருதம், உருது, பாரசீகம், பாலி, ஆங்கிலம், போர்த்துகீசியம் போன்ற பல சொற்களும் நம் மொழியில் தமிழ்ச் சொற்களைப் போலவே கலந்திருக்கின்றன.
பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற மக்களும் தொடர்ந்து குடியேறி வாழத் தொடங்கிய காரணத்தால்தான், பிறமொழிச் சொற்கள் இங்கே இறக்குமதியாயின. எடுத்துக்காட்டாக, தமிழகத்தை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஆளும்போது, இங்கே உருதுச் சொற்கள் ஒவ்வொன்றாக உள்ளே நுழைந்தன. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நாட்டு விடுதலைக்கு முற்பட்ட முந்நூறாண்டுகள் சென்னையில் கோட்டை கட்டி ஆண்டார்கள். சில குட்டி சமஸ்தானங்களைத் தவிர மற்ற பகுதிகள் அனைத்துமே ஆங்கிலேயர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தன. அக்கால கட்டத்தில் தமிழ் மொழியோடு ஆங்கிலப் பயன்பாடும் வழக்கத்திற்கு வந்தது.
ஓர் அரசு அலுவலகத்தில் வேலையைப் பெறவேண்டுமென்றால், ஆங்கிலம் பயில வேண்டியது கட்டாயமாக இருந்தது. நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கும் ஆங்கிலம் தேவையாக இருந்தது. வட இந்தியாவில் வாழ்ந்த சமூகத்தினர் தென்னாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே குடியேறிவிட்டனர். அவர்களின் வழியாக இங்கே சமஸ்கிருதச் சொற்களும் வந்திறங்கின.
நூறாண்டுகளுக்கு முன்பு, தமிழில் சமஸ்கிருதம் எனப்படுகிற வடமொழிக் கலப்பு மிகுதியாக இருந்தது. பிறகு தனித்தமிழ் இயக்கம் என்னும் இயக்கம் தோன்றியதால், வடசொற்கள் கலந்து பேசுவதைத் தவிர்த்து முழுத்தமிழிலேயே பேசமுற்பட்டனர். தமிழறிஞர்களால் முன்னெடுக்கப்பட்ட இவ்வியக்கம், ஓரளவு தனித்தமிழ்ப் பயன்பாட்டை வழக்கத்திற்குக் கொண்டுவந்தது எனலாம். எடுத்துக்காட்டாக, வருஷம், மாதம், வாரம், தினம், தேதி ஆகியன வடசொற்கள். இவற்றுக்கு மாற்றாக ஆண்டு, திங்கள், கிழமை, நாள், நாள் எண் என்று தமிழில் பயன்படுத்தினார்கள். கிழமைப் பெயர்களில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகியன மட்டுமே தமிழ்ப்பெயர்கள். புதன், சனி ஆகியன வடமொழிப் பெயர்கள். காலக்கணக்குகளில் இருமொழி மக்களும் தமக்குள் அறிவைப் பகிர்ந்துகொண்டமையால் இவ்வாறு கிழமைப் பெயர்களில் வடசொற்கள் நுழைந்தன என்று விளங்கிக் கொள்ளலாம். புதன், சனி ஆகியவற்றை அறிவன், காரி என்று தமிழ்ப்படுத்தினார்கள்.
ஜன்னல் என்பது போர்த்துகீசியச் சொல். அதைச் சன்னல், சாளரம் என்பவை தமிழ் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவையும் தமிழல்ல. காலதர் என்பதுதான் ஜன்னலுக்கு நிகரான தமிழ்ச்சொல். கால் என்றால் காற்று, அதர் என்றால் வழி. காற்று செல்லும் வழி என்பதுதான் காலதரின் பொருள். ('மான் கண் காலதர் மாளிகை' என்பது சிலப்பதிகார வரி)
இவ்வாறு நாம் தமிழ்ச்சொற்கள் என்று கருதிக்கொண்டிருக்கும் பலவும், வடசொற்களாகவோ பிறமொழிச் சொற்களாகவோ இருக்கின்றன. இயன்றவரை நம்முடைய எழுத்திலும் பேச்சிலும் பிறமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதுதான் நல்லது. அதுதான் ஒருமொழியில் நாம் அடைந்துள்ள அறிவைக் காட்டும். பன்மொழிச் சொற்களைக் கலந்து பேசுவது மொழிக்கும் நல்லதல்ல. நமக்கும் பெருமையல்ல. கலப்படம் என்பது மொழியில் நிகழ்ந்தாலும் அது தவறுதான்.
- மகுடேசுவரன் வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)