தலைப்பு | : | ஓவியங்கள் வழியும் தூரிகை |
ஆசிரியர் | : | ச . பிரியா |
'லாரியின் பின்புறம் வரையப்பட்ட புறாவும், கிளியும், எந்த கூண்டிலும் அடைபடுவதில்லை... தினம் தினம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் அவை, தேசம் கடந்த ஒரு நெடும் பயணத்தை! ''இந்த வரிகளை எழுதியவர் நிச்சயம் சுதந்திரத்துக்கான மோகமும், தேடலுக்கான தாகமும் உள்ளவராக தான் இருக்க முடியும். உண்மையில் அப்படித்தான் இருக்கிறார் அந்த வரிகளை எழுதியவரும். பொள்ளாச்சியை அடுத்துள்ள பசுமை கொஞ்சும் ஆனைமலையில் உள்ள ச. பிரியா கவிஞர். அவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு, சமீபத்தில் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மூலம், 'ஓவியங்கள் வழியும் துாரிகை' எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. அவரின் கவிதைகள் உருவான கதை குறித்து கவிஞர் கூறியதாவது: பள்ளி படிக்கும் காலங்களிலேயே தமிழின் மீதான காதல் அதிகம். சிறு வயதில் கையில் கிடைத்த அச்சடித்த தாளையெல்லாம் படிக்கும் பழக்கம் இருந்தது.
ஒரு கட்டத்தில் வாசிப்பு கவிதைகளை நோக்கி நகர்ந்தது.படித்து படித்து, எழுதி பார்க்கும் ஆர்வம் வந்தது. டைரிகள் நிரம்பின. அவ்வப்போது வார இதழ்களுக்கு எழுதியவற்றை அனுப்பி வைப்பேன். கடந்த,2005ம் ஆண்டு, பிளஸ் 2 படிக்கையில், ராணி இதழுக்கு அனுப்பிய கவிதை பிரசுரமாகியது. டைரியில் பார்த்து பழகிய கவிதையை, அச்சில் ஏற்றி பார்த்த போது, எழுதும் ஆர்வம் அதிகரித்தது. அந்த சமயத்தில் பொள்ளாச்சி பகுதியில் பிரபலமான கவிதைக்கான இதழாக வெளியாகியது 'புன்னகை' இதழ். 'புன்னகை'யில் தொடர்ந்து எழுதி வந்தேன்.
அதன் ஆசிரியர் குழுவில் இருந்த கவிஞர் அம்சப்பிரியா, சிநேகிதன் மற்றும் ரமேஷ்குமார் என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவித்தனர். அவர்கள் எனக்கு படிக்க கொடுத்த புத்தகங்கள், என் எழுத்தின் திசையை மாற்றி, மேலும் உயர்த்தின.'ஆனந்த விகடன்' உள்ளிட்ட பத்திரிகைகளில் என் கவிதைகள் வெளிவர துவங்கின. அப்படி துவங்கிய பயணம்,
இன்று முதல் கவிதை தொகுப்பை வெளியிடும் இடத்தில் வந்து நிற்கிறது.சக கவிஞரான பூபாலன், மூத்த கவிஞர்கள் அ.வெண்ணிலா, வைரமுத்து, கல்யாண்ஜியின் கவிதைகளுக்கு நான் ரசிகை. அந்த கவிதைகள் தான் என் கவிதைகளுக்கான உத்வேகத்தை அளிக்கின்றன.முதல் கவிதை நுாலை வெளியிடவும், தொடர்ந்து கவிதைகள் எழுதவும் ஆதரவாகவும் கணவர் மணிகண்டனும், மகன் ைஷல்தேவும் இருக்கின்றனர். ஒன்று சொல்லியாக வேண்டும். தற்போது பெண் கவிஞர்களின் படைப்புகளை விமர்சிப்பவர்கள், 'கவிதையெங்கும் எழுதியவரின் சுயபுலம்பல்கள் தான் நிறைந்து கிடக்கிறது' என்கிறார்கள் ஏளனமாக. ஆம்... முகநுாலில், வாட்ஸ்ஆப்பில் கூட தங்கள் புகைப்படத்தை வைத்துக்கொள்ள பாதுகாப்பில்லாத, ஒரு நோய்மையுற்ற சமூகத்தின் நடுவே வாழ்ந்தாக நேர்ந்துள்ள பெண்களின் எழுத்தில் வலிகளும், புலம்பல்களும் இருக்கத்தானே செய்யும் ஆண்களே! என்று 'சுருக்'கென கேட்டு முடிக்கிறார் ச.பிரியா.
பயோ-டேட்டாபெயர்: ச.பிரியாபடிப்பு: பி.காம்.,தொழில்: குடும்ப தலைவிஇலக்கிய செயல்பாடுகள்: பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் உறுப்பினர். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். முதல் தொகுப்பு 'ஓவியங்கள் வழியும் துாரிகை' வெளியாகியுள்ளது. கருந்துளை, கருக்கல், உன்னதம், புன்னகை உள்ளிட்ட சிற்றிதழ்களிலும், பிரபல வார, மாத இதழ்களிலும் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளியாகின்றன.