பதிவு செய்த நாள்

18 நவ் 2017
14:17
 சிங்கப்பூர் நாடோடிக்கதை

  பல வருடங்களுக்கு முன்பு அந்த நாட்டைச் சுற்றியுள்ள கடல்பகுதி முழுக்க பயங்கரமான வாள் மீன்கள் நிறைந்து காணப்பட்டது. அவற்றின் மூக்கு நீளமாக வாள்போல இருந்ததால் அவற்றுக்கு அப்படி ஒரு பேர். கடலுக்குள் செல்லும் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் தன் வாள் மூக்கால் தாக்கி அழித்துக் கொண்டிருந்தது. கூடவே கரையோரம் நடமாடும் மக்களையும் அது தாக்கத் துவங்கியது. 

நாட்டின் அரசனாக இருந்த இஸ்கந்தர் இந்த மீன்களின் உபத்திரவத்தைக் கேள்விப்பட்டு தனது படைவீரர்களிடம் வாள் மீன்களைக் கொல்லும்படி ஆணையிட்டார். வாள்மீன்களைக் கொல்ல நடந்த முயற்சியின் போது  பெரிதாக ஓர் அலை வந்து கடலுக்குள் அவர்களை இழுத்துச் சென்றது. அப்படியும் படை வீரர்கள் தங்கள் ஆயுதங்களால் வாள் மீன்களைக் கொல்ல முயன்றனர். மீன்கள் அவர்களைத் தாக்கி அழித்தன. பலர் காயம்பட்டுத் தப்பித்தார்கள். கடலே வீரர்களின் ரத்தத்தால் சிவந்தது. 

இதனால் அச்சமடைந்த அரசன் இஸ்கந்தர் சோகமாக கடற்கரையில் நின்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில், “அய்யோ, இந்தப் பயங்கரமான வாள் மீன்களை நான் எப்படிக் கொல்லப்போகிறேன்?” என்று அரற்றினார். அப்போது, “அதற்கு ஒரு வழி இருக்கிறது” என்று ஒரு குரல் கேட்டது. அரசன் திரும்பிப் பார்த்தான். அங்கே பாறையில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். 

அவனே தொடர்ந்து, “கடல் நீரில் வாழைமரங்களால் ஒரு சுவர் எழுப்புங்கள். அலையில் வாள் மீன்கள் வரும்போது அவற்றின் வாள் மூக்கு கூர்மையாக இருப்பதால் வாழை மரத்தில் குத்தி மீன்கள் சிக்கிவிடும்!” என்றான். அதன்படியே நாடு முழுவதும் இருந்து வாழை மரங்களை எடுத்துவந்து கடலில் சுவர் எழுப்பச் செய்தான் அரசன். அடுத்து வந்த பெரிய அலையில் தாவிவந்த வாள் மீன்கள் வாழை மரத்தில் சிக்கிக்கொண்டன. அவற்றை படைவீரர்கள் கொன்று குவித்தனர். ஒரு வீரன்கூட இறக்கவில்லை. அதே நேரம், ஒரு வாள் மீன்கூட தப்பிக்கவில்லை! இறந்து கிடந்த மீன்களை எடுத்து சமைத்துப் பெரிய திருவிழாவாகவே கொண்டாடினார்கள். 

ஆனால், அரசருக்கு ஒரு வருத்தம் இருந்தது. தனது தளபதியிடம் அந்த சிறுவன் மிகவும் புத்திசாலி. என்னைவிட சக்தி வாய்ந்தவனாக ஒருநாள் வருவான் என்றார். அன்று இரவு அந்தச் சிறுவனைக் கொல்ல நான்கு வீரர்களை அனுப்பினான் தளபதி. அவர்கள் சிறுவனைத் தேடி நாட்டில் இருந்த உயர்ந்த மலைக்குச் சென்றார்கள். அங்கே மலை உச்சியில் பயங்கர உருவத்தோடு ஒரு கிழவி நின்றிருந்தாள். “ஏமாற்றுக்காரர்களே, உங்களுக்கு உதவி செய்த சிறுவனையே கொல்லப் போகிறீர்களா? நான் உங்களுக்குத் தண்டனை தருவேன்” என்று கத்தினாள். 

அச்சமடைந்த வீரர்கள் திகைத்து நின்றார்கள். அவர்கள் முன் இருந்த பாறைகள் வெடித்துப் பிளந்தது. பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தார்கள். சூரிய அஸ்தமனத்தின்போது அனைத்து வீரர்களும் இறக்க அவர்களது ரத்தத்தினால் அந்த மலை சிவந்து போனது. அதிலிருந்து அந்த மலைக்கு சிவப்பு மலை என்று பெயர் வந்தது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தக் கிழவியோ, சிறுவனோ நாட்டில் எங்கேயும் காணப்படவில்லை. எப்போது அந்தச் சிறுவன் திரும்பி வருகிறானோ அதுவரை மலை சிவப்பாகத்தான் இருக்கும். பல உயிர்களைக் காப்பாற்றிய அப்பாவி சிறுவனை கொல்வதற்காக  முயன்ற நன்றிகெட்ட வஞ்சகத்தின் நினைவாக மலை இன்றும் சிவப்பாக இருக்கிறது என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கை.

 வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)