பதிவு செய்த நாள்

23 நவ் 2017
17:37

  ஓய்வுபெற்ற, செந்தமிழ் சொற்பிறப்பியல் இயக்குநரான பேராசிரியர். இரா.மதிவாணன் எழுதி, எமரால்ட் பதிப்பகத்தின் தமிழ் வழி நூற்பதிப்பு நிறுவனமான எழிலினி பதிப்பகம் வெளியிட்டுள்ள ஆய்வுநூல்களான, ‘இடைக்கழகச் சிந்துச் சமவெளி எழுத்து படிப்பது எப்படி?’ மற்றும் Indus Valley Tamil Civilization ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று  நடைபெற்றது.

சென்னை, அடையாறு, எம்.ஜி.ஆர்.ஜானகி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வைபவம் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வினில், பேராசிரியர். மருதநாயகம் தலைமையேற்க, கலிபோர்னிய பல்கலைக் கழக வருகைதரு பேராசிரியர் மறைமலை இலக்குவனார்  கலந்துகொண்டு நூல் பற்றின ஆய்வுரை வழங்கினார்கள். நிகழ்வில் பேராசிரிய மறைமலை இலக்குவனார் பேசியதாவது.. 

“எந்தவொரு வரலாற்று ஆய்வாளர்கள் உதவியும் இல்லாமல், சிந்துவெளி குறியீடுகளை உள்வாங்கி அவற்றை எவ்வாறு படிப்பது எனும் வகையில் இந்த நூல் பேராசிரியர் மதிவாணன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. 

இதுவரை 6000 சிந்துவெளி குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப் பட்டிருக்கின்றன.  ஹீராஸ் பாரிரி 17 ஆண்டுகள் இந்த ஆய்வுக்காகச் செலவிட்டிருக்கிறார். பேராசிரியர் மதிவாணன் இந்தக் குறியீடுகள் அனைத்தையும் வாசித்தறிந்து, அவை அனைத்தும் தமிழர் நகரிகத்தின் தொடர்புடையவை என்பதை சான்றுகளின் அடிப்படையில் இந்நூலில் நிறுவியுள்ளார். 

மறைமலை இலக்குவனார்
மறைமலை இலக்குவனார்

மொழியை அரசியலாக இணைத்துக் காணும் மனப்பாங்கு உலகப்போருக்கு முன்பான காலத்தில் தொடங்கியது. மொழியியல் அறிஞர் மாக்ஸ் முல்லர் சமஸ்கிருத மொழியே சாலச் சிறந்த மொழி என்றும், மற்ற செல்திக், செமிட்டிக் மொழிகள் செம்மையற்றவை என்றும் அறிவித்தார். மாக்ஸ் முல்லரின் இந்த தவறான போதனையே ஹிட்லரின் ஆரியவாத சர்வாதிகாரத்தின் அடிப்படைக் காரணம். 

உலகின் பழமையான நாகரிகங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்ற ஒற்றைச் சார்பு ஆய்வுகளையும், அணித் திரள்தல்களையும் தகர்க்கும் விதமாக நூல் தெற்கிலிருந்த தமிழர் நாகரிகரிகமே அன்றைய இந்திய நிலப்பரப்பு முழுவதும் பரவி இருந்தது என்பதை இந்நூலின் மூலம் நிருபிக்கிறார். அனைவரும் வாசித்தறிய வேண்டிய புத்தகம் இது” என்று பேசினார். 

 நிகழ்ச்சியின் இறுதியாக பேராசிரியர் மதிவாணன் ஏற்புரை வழங்க, எம்.ஜி.ஆர்.ஜானகி கலை அறிவியல் கல்லூரி துணை முதல்வர் லக்ஷ்மி பாலாஜி நன்றியுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் மணிமேகலை, காப்பாளர் குமார் இராஜேந்திரன், பதிப்பாளர் ஒலிவண்ணன் மற்றும் கல்லூரி மாணவியர்கள், துறை ஆர்வலர்கள்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)