காமிக்ஸ் உலகின் முதல் சூப்பர் ஸ்டாரான வேதாளர் (The Phantom) கதைகளை அமெரிக்க காமிக்ஸ் நிறுவனமான ஹெர்மஸ் பிரஸ் மறுபதிப்பு செய்து
வருகிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பு விற்பனை உரிமை பெற்று ஒரு ஆறு
பாகங்கள் கொண்ட காமிக்ஸ் தொடரை ஆரம்பித்தனர். இப்போது, ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு புதிய தொடர் வெளியாகி உள்ளது. வேதாளரை வைத்து முழுநீளத் திரைப்படம் தயாரிப்பதற்கான செய்திகள் பரவிவரும்
வேளையில் வந்துள்ள இந்தக் காமிக்ஸ் வாசகர்களைக் கவரும்
என்ற முனைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
கதை வரி : ஜான்
எஃப் கென்னடிக்காக ரகசியப் பணியில் ஈடுபடும் வேதாளர்.
அறிமுகம்: சாகாவரம்
பெற்றவராகக் கருதப்படும் வேதாளர், ஆப்பிரிக்காவின்
பெங்கல்லா காட்டில் இருக்கும் கபால குகையில் வசித்து வருபவர். அநீதிக்கு எதிராக 400
ஆண்டுகளாகப் போராடி வருபவரான வேதாளரின் கையில் இருக்கும்
மோதிரங்கள், அவற்றால் ஏற்படும் முத்திரை ஆகியவை மிகவும்
பிரபலம். 80 ஆண்டுகளாகத் தொடர்ந்து ரசிகர்களை
மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் அட்டகாசமான காமிக்ஸ் ஹீரோ இவர்.
கதைச்சுருக்கம்: இந்தக்
கதை 1962ல் நடப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும்
ரஷ்யாவிற்கும் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலம் அது. அமெரிக்க
அதிபராக புதியதாக பதவியேற்ற ஜான் கென்னடிக்கு வேதாளரை ஏற்கனவே அறிமுகம் ஆனவர். பிளாஷ்பேக்கில்,
இரண்டாம் உலகப் போரின்போது, விபத்துக்குள்ளான
கப்பலில் இருந்த ஜான் கென்னடியை வேதாளர் காப்பாற்றியதைச் சொல்லி இருப்பார்கள். இரண்டு விண்வெளி
வீரர்கள் விபத்துக்குள்ளாகி, பெங்கல்லாவுக்கு அருகில்
இருக்கும் கடற்பகுதியில் காணாமல் போக, அவர்களைத் தேட
வேதாளரின் உதவியை நாடுகிறார் அமெரிக்க அதிபரான ஜான் கென்னடி. மிகப்பயங்கரமான சிங்
கடற்கொள்ளையர்கள், ரஷ்ய உளவாளிகள், பத்திரிகையாளர்கள், கூலிப்படையினர், மர்மக் கும்பலின் தலைவியாக ஒரு பெண் என்று கதை வேகமாக நகர்கிறது.
ஆறு வாரங்களுக்கு
ஒரு புத்தகம் என்று மொத்தம் ஐந்து பாகங்களாக வெளிவரத் தொடங்கிய காமிக்ஸின் எழுத்துருக்கள் சற்றே சிறியதாக இருப்பதுதான் இப்புத்தகத்தின் ஒரே குறை.
மூன்று வித்தியாசமான அட்டைகளுடன் வந்துள்ள இந்தக் காமிக்ஸ், இணையதளம் மூலமாக ஆர்டர் செய்து வரவழைக்க இயலும். இதன் அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வெளிவர இருக்கிறது.
ஆன்லைனில் வாங்க:
https://hermes-press.myshopify.com/collections/comic-books/products/the-phantom-president-kennedys-mission-issue-1b-pre-order
கதாசிரியர்: ரான் கோலார்ட்,
ஓவியர்: ஷான்
ஜாய்ஸ்,
இங்கிங்: மலீனா,
கலரிஸ்ட்: ஜார்ஜ்
கோர்ட்டெஸ்,
பதிப்பாளர்: ஹெர்மஸ்
பிரஸ்,
எடிட்டர்: டேனியல்
ஹெர்மன்,
வயது வரம்பு: 12+
பக்கங்கள்: 22
விலை: 3.99$