பதிவு செய்த நாள்

01 டிச 2017
11:30
ஒரு தொழில்முறை கொலையாளியின் குற்ற உலகம்

 2014ல் க்யானு ரீவ்ஸ் நடிப்பில், ஜான் விக் என்று ஓர் அதிரடி ஆக்‌ஷன் படம் ரிலீஸ் ஆனது. இதன் கதை, திரைக்கதையை எழுதியவர் டெரக் கொல்ஸ்டாட். தெலுங்கு சினிமா இயக்குநர்களே டைரக்டர்களே வியக்கும் அளவுக்கு மசாலாவான திரைக்கதையை எழுதுபவர் இவர் (one in a Chamber, The Package). 

ஜான் விக் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வந்து, முதல் படத்தை விட இருமடங்கு வசூலைக் குவித்தது. 2019ல் வர இருக்கும் மூன்றாம் பாகத்திற்கு முன்னோடியாக இப்போது டைனமைட் காமிக்ஸ் நிறுவனம் ஜான் விக் காமிக்ஸை வெளியிட்டு இருக்கிறார்கள். 

அறிமுகம்: ஜான் விக் ஒரு தொழில்முறை கொலையாளி. குற்ற உலகில் அவன் பெயரைக் கேட்டாலே, நடுங்குவார்கள். ”பாபா யாகா” என்ற பெயரில் இயங்கும் ஜான் விக், தமிழ் சினிமாவில் வருவதுபோல, ஒரு பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு, திருந்தி வாழ்கிறான். அவனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு, ஒரு மாஃபியா கும்பலின் மகன் செய்த முட்டாள்தனத்தால், ஜான் விக் மறுபடியும் ஆயுதம் ஏந்துகிறான்.

கதைச்சுருக்கம்: சமகால ஆக்‌ஷன் திரைப்பட ரசிகர்களின் ஃபேவரிட் நாயகனான ஜான் விக்கின் ஆரம்பம் என்ன? அவன் எப்படி ஒரு தொழில்முறைக் கொலையாளி ஆக மாறினான்? அவனுக்கு குடும்பம் என்று ஒன்று உள்ளதா? என்று ரசிகர்களுக்கு நிறைய கேள்விகள் எழும். எழலாம். அதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில்தான் இந்த காமிக்ஸ் கதைத் தொடர் ஆரம்பித்து உள்ளது.

            ஒரு புதிய ஊருக்குச் சென்று, ஒரு மோசமான விடுதியில் தங்குகிறார் ஜான். அப்போது ஒரு கூலிப்படைக் கும்பல் இன்னொருவரைக் கொல்ல முயற்சிக்கும்போது, அதிரடியாக இவர் நடுவில் புகுந்து அந்தக் கும்பலை அடியோடு அழிக்கிறார். இவர் கொன்றது, கொல்லப்பட விருந்த நபரைக் காப்பாற்ற கிடையாது. அந்தக் கொலைகாரக் கும்பலைத் தேடித்தான் ஜான் அங்கே வந்திருக்கிறார் என்பதுதான் கதையின் முதல் ட்விஸ்ட்.

மொத்தம் ஐந்து பாகங்களைக்கொண்ட இந்த காமிக்ஸ் தொடர் இரண்டு மாதங்களுக்கு ஒன்று என்று வெளியாக உள்ளது. ஹல்க் காமிக்ஸ் தொடருக்கு கதையெழுதி வரும் க்ரெக் பாக்கின் கதையோட்டம் புதிரான அம்சங்களைக் கொண்டது. ஆனால், இந்தக் கதை மிகவும் எளிமையாகத்தான் ஆரம்பித்துள்ளது. சினிமாவைப் போலவே நான் லீனியராக, நடப்புச் சம்பவங்களும் ப்ளாஷ் பேக் காட்சிகளும் கை கோர்த்து கதையை நகர்த்துகின்றன.

தலைப்பு: John Wick – Part 1
கதாசிரியர்: க்ரெக் பாக்
ஓவியர்: ஜியோவானி வல்லெட்டா
கலரிஸ்ட்: டேவிட் கூரியல்
லெட்டரிஸ்ட்: டாம் நாபொலிட்டானோ
பதிப்பாளர்: டைனமைட் காமிக்ஸ்
எடிட்டர்: ஆந்தனி மார்க்வெஸ்
பக்கங்கள்: 30
விலை: 3.99$
வயது வரம்பு: 12+
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)